Loading...

தேவதிட்டமே சிறந்தது

Stella Ramola
05 Sep
நம்முடைய நினைவுகளைப்பார்க்கிலும் தேவனுடைய நினைவுகள் பெரியவைகள். “எனக்கு அநேக பிரச்சினைகள் இருக்கிறது. அந்த மனிதரைப்போல  என்னால் வாழ முடியவில்லையே, அவரைப்போல நான் எல்லாவற்றிலும் வெற்றிபெற முடியவில்லையே. எனக்கு எதிர்காலமே இல்லை” என்று நம்முடைய நினைவுகள் காணப்படலாம். ஆனால், தேவனுடைய நினைவுகளோ எப்பொழுதும் நம்மைக்குறித்து நன்மைக்கேதுவாகவே இருக்கிறது. அவர் நம்மை சுகமாக்குவார். நம் வேதனைகளை மாற்றுவார். அவர் நமக்காக சிலுவையில் மரித்து, நமக்கு ஜீவனை கொடுத்திருக்கிறார். நம்மைக்குறித்ததான அவருடைய நினைவுகள் மிகவும் மேன்மையானது என்பதை பாருங்கள். தேவன் நம்மை மிகவும் நேசிக்கிறார். ஆகவே, நம்முடைய கவலைகள், பாரங்கள், வியாதிகள், தோல்விகள், பிரச்சினைகள் யாவற்றையும் அவரிடத்தில் அர்ப்பணித்து விடுவோம். அப்பொழுது அவர் நம்மை விடுவிப்பார். நாம் அவரை விசுவாசிக்கும்போது, அவருடைய திட்டங்களை நமக்கு வெளிப்படுத்தி, நாம் செய்ய வேண்டிய காரியங்களைக்குறித்து நமக்கு போதித்து நடத்துவார். அவரது ஞானத்தினால் நம்மை நிரப்பி நன்மையின் வழியிலே நடத்துவார். 

வேதத்தில், பேதுருவின் வாழ்வைக் குறித்து வாசிக்கிறோம். அவர் ஒரு மீனவன். ஒருமுறை, இயேசு கலிலேயாக் கடலோராமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களைக் கண்டு: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள் (மத்தேயு 4:18-20). பேதுருக்கு மீன்பிடிப்பது மிகவும் பிரியமான தொழிலாக இருந்தாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று, அவர் தன் சொந்த விருப்பத்தை விட்டு இயேசுவுக்கு பின்சென்றார். ஆனால், இயேசு உயிர்த்தெழுந்தபோது, பேதுரு தன் அழைப்பை மறந்து, மீண்டும் மீன்பிடி தொழிலுக்கு சென்றிருப்பதை கண்டார். அப்போது இயேசு திபேரியா கடற்கரையில் மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார். அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்றார். ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். மறுபடியும் இயேசு, பேதுருவிடம், “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்றார். ஆம், ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். மூன்றாந்தரமும்: யோனாவின் குமாரனாகிய சீமோனே, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்டபடியினால், பேதுரு துக்கப்பட்டு:  ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அப்பொழுது இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார் (யோவான் 21:15-18).
மனிதர்களை பிடிக்கிறவனாய் மாற்றுவேன் என்ற அழைப்பை இயேசு, பேதுருவின் உள்ளத்தில் எழுதினார். பேதுரு மிகவும் பயந்த மனிதர். இயேசு கைது செய்யப்பட்ட அன்று இராத்திரியிலே இயேசுவை மறுதலித்தார். ஆனால், பேதுரு மாற்றப்படுவார் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே தான், பேதுருவிடம் ஆத்துமாக்களை இரட்சிக்கும்படியான தனது அழைப்பை கூறிக்கொண்டேயிருந்தார். இயேசு கூறியதுபோலவே, பேதுரு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்காக மேல்வீட்டறையில் காத்திருந்தார். தேவன் கூறியபடியே, தமது ஆவியானவரை ஊற்றினார். பரிசுத்த ஆவியினால் நிரம்பிய பேதுரு 3000 பேருக்கு ஊழியம் செய்து அவர்கள் கிறிஸ்துவின் விசுவாசிகளாய் மாற்றினார். பேதுரு மகத்தான அற்புதங்களைச் செய்தார். தேவாலயம் ஆத்துமாக்களால் நிரம்பியது. 
Prayer:
அன்பின் தேவனே,

உமது அழைப்பை எனக்கு நினைவுப்படுத்தியதற்காக நன்றி. ஆண்டவரே மீண்டும் மீண்டும் நீர் என்னோடு பேசுவதன் மூலம் உமது அழைப்பை நீர் உறுதிப்படுத்தியருளும். உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பியருளும். உமது அழைப்பை நிறைவேற்றுவதற்கு எனக்கு ஏற்ற பெலனை கொடுத்தருளும். உமது சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000