Loading...
Stella dhinakaran

கண்ணீரை துடைக்கும் தேவன்!

Sis. Stella Dhinakaran
21 May
நாம் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறோம் என்று சொல்லுகிற வேளைகளிலே திடீரென்று, ஆபத்து, விபத்து, மரணம் வருகிறது. இதை யாரால் தாங்க முடியும்? இந்த வேதனை இருதயத்தை உடைத்து கண்ணீரால் நம் முகத்தை நிரப்புகிறது. இந்த வழியாய் கடந்த செல்கிறவர்களுக்குத்தான் அதின் கஷ்டம் தெரியும். மற்றவர்கள், “ஏன் அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்?” என்று ஏளனமாய் பேசக்கூடும். ஆனால், மனிதரால் அந்த சமயத்தில் நமக்குக் கொடுக்கக்கூடாத இளைப்பாறுதல், மகிழ்ச்சி, ஆறுதலை சகலவிதமான ஆறுதல்களின் தேவனாக இருக்கிற ஆண்டவரால் தான் கொடுக்க முடியும் (2 கொரிந்தியர் 1:3). இந்த நிலைமையிலே, மரண இருளிலே நடந்து கொண்டிருக்கிற நீங்களும் ஆண்டவரையே நோக்கிப் பாருங்கள். அவரே உங்களுக்கு ஆறுதலும், அரவணைப்பும் தந்து தேற்றுவார் (சங்கீதம் 91:15).

1986-ம் ஆண்டு மிகவும் சந்தோஷமாக எங்கள் அன்பு மகள் ஏஞ்சலை அழைத்துக்கொண்டு, காரில் வெளியூர் புறப்பட்டோம். ஆனால், புறப்பட்ட சிலமணி நேரத்திலேயே விபத்து ஏற்பட்டு மகளை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தபொழுது, எங்கள் நெஞ்சம் இரண்டாக பிளப்பதுபோல் இருந்தது. கர்த்தர், அந்த நிலைமையிலும் எங்களைத் தேற்றினார். அரவணைத்து, ஆறுதல்படுத்தினார். இந்த வேதனையை புரிந்துகொள்ள முடியாத ஒருவர் ஒருமுறை என் கணவரைப் பார்த்து, “ஏன் இறந்துபோன உங்கள் மகளை நினைத்து அடிக்கடி உங்கள் பிரசங்கத்தில் அழுகிறீர்கள். ஆண்டவர்தான் அவளை எடுத்துக்கொண்டு போய்விட்டாரே” என்று சற்று ஏளனமாயும், பரிகாசமாயும் கேட்டார். என் கணவர் பதிலேதும் சொல்லவில்லை. நாட்கள் கடந்தன! அவருடைய ஒரே மகன் நண்பர்களோடு கடலிலே குளிக்க சென்றபோது, அவன் திரும்பி வராமல், மரணம் அவனை எடுத்துக்கொண்டு போய்விட்டது. இந்த அனுபவத்திற்குப் பிறகு, அவர் என் கணவரைப் பார்த்து, “ஐயா, என்னை மன்னியுங்கள், நீங்கள் பட்ட வேதனை, சஞ்சலம், தவிப்பு இன்று தான் என்னால் உணர முடிகிறது” என்று கண்ணீர்விட்டு கதறினார். என் கணவர் நடந்ததையெல்லாம் மறந்து, அவரை அணைத்து ஆற்றித் தேற்றினார். அவருக்காக பிரார்த்தனை செய்தார்.

“என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவை தேற்றுகிறது” (சங்கீதம் 94:18,19). என்ற வேத வசனங்களின்படி, எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் அவரே உங்களை ஆறுதல்படுத்தி, அணைத்து கண்ணீரைத் துடைப்பார். உள்ள நிலைமையோடுகூட அவரிடத்தில் வாருங்கள். உங்கள் பாரங்களை அவரிடத்தில் அர்ப்பணித்து விடுங்கள். அவர் உங்களை தேற்றுகிற தேவன்.  உங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் அவரே தீர்வாயிருக்கிறபடியால் , அவரை பற்றிக்கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை ஆற்றித்தேற்றி அரவணைத்துக்கொள்வார். 

Prayer:
என் அன்பு தகப்பனே,

உடைந்த என் மனதிற்கு நீரே ஆறுதல்! நீர் மரணத்தை சிலுவையிலே ஜெயித்தீர். எனவே, எனக்கும், இந்த கண்ணீரிலிருந்து, வேதனையிலிருந்து இன்று ஜெயத்தைத் தாரும். உம் ஆறுதல் என்னையும் நிரப்பும்படி அருள்தாரும். என் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரம், கவலை யாவையும் உமது சமூகத்தில் அர்ப்பணிக்கின்றேன். நீர் சகலவித ஆறுதலின் தேவனென்று வேதம் கூறுகிறது. உமது ஆறுதலை நானும் பெற்று சமாதானத்துடன் வாழ அருள்புரியும்.

 இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000