Loading...

தேவைகளை சந்திக்கும் தேவன்!

Bro. D.G.S Dhinakaran
12 Aug
ஆம், நம்முடைய தேவன், நம் குறைவுகளையெல்லாம் மாற்றி நிறைவைத் தர வல்லவர். ஐசுவரிய சம்பன்னராகிய அவர் நம் யாவருக்கும் நிறைவான ஆசீர்வாதங்களைத் தருகிறவர் (ரோமர் 10:12). வாழ்க்கையில் பலமுறை நாம் ஆச்சரியப்படக்கூடிய ஒரு கட்டத்திற்கு வந்துவிடுகிறோம். “என் தேவை மிகப்பெரிய தேவை. இது எவ்வாறு பூர்த்தி செய்யப்படும். இது நிறைவேறுவதற்கு எந்த வழியும் இல்லையே என்று யோசிக்கிறீர்களா? இந்த தருணம்தான் தேவன் தமது  வல்லமையையும், ஞானத்தையும் நிரூபிக்க ஏற்றது. என் தேவைகள் சந்திக்கப்பட இனி “வழியே இல்லை”  என்று நீங்கள் நினைக்கும்போது, உங்கள் தேவைகளை சந்திக்க அவரிடத்திலிருந்து ஆயிரம் வழிகள் பிறக்கும்.” “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்” (எபேசியர் 3:20). எனவே, உங்கள் சிறிய மனதிற்கு ஏற்ப ஒரு தீர்வைத் தேடாதீர்கள். உங்களுக்கு எந்தவழியும் கிடைக்காதபோது, தேவன் உங்கள் தேவைகளை சந்திப்பதற்கு பெரிய வழிகளை திறப்பார்.
 
ஒருமுறை நானும் என் மனைவியும் சில பொருட்கள் வாங்குவதற்காக, கடைக்கு சென்றிருந்தோம். என்னிடம் பணம் இருக்கிறது என்று என் மனைவி நினைத்துக்கொண்டாள். அதேபோல, என் மனைவியிடம் பணம் இருக்கிறது என்று நானும் நினைத்துக்கொண்டேன். எல்லாப் பொருட்களையும் வாங்கியவுடன் என் மனைவி, “எல்லாப் பொருட்களும் வாங்கிவிட்டோம்; பணம் கொடுங்கள்” என்ற பொழுது, எனக்கு தூக்கிவாரிப் போட்டது. வழக்கம்போல என்னிடம் 5 ரூபாய் 10 ரூபாய் தான் இருந்தது. அந்த நேரம் பார்த்து நல்ல வேளையாக அங்கு வந்த என் மகன், தன் கையிலிருந்த பணத்தைக் கொடுத்தான். நாங்கள் வெட்கப்படாமல் நிம்மதியாக வீடு திரும்பும்படி, கர்த்தர் ஏற்ற சமயத்தில் மகனை அனுப்பினார்.
ஆம், இப்படிப்பட்ட குறைவுகளை நம் வாழ்வில் பலமுறை சந்திக்கிறோமல்லவா? ஆனால், அருள்நாதர் இயேசு, “என்னுடைய ஐசுவரியத்திலிருந்து நான் என் பிள்ளைகளாகிய உங்களுக்கு நிறைவானவைகளையே தர விரும்புகிறேன்” என்று கூறுகிறார். வானுலகிலுள்ள வீதிகள்கூட பொன்னினால் செய்யப்பட்டிருக்கின்றனவாம். அவருடைய பிள்ளைகளாகிய நாமும்கூட யாதொரு குறைவுமற்றவர்களாக இவ்வுலகில் வாழ வேண்டுமென்பதே கர்த்தருடைய பரிபூரண விருப்பமும், சித்தமும் ஆகும்.  “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலிப்பியர் 4:19) என்று பரிசுத்த பவுல் கூறுகிறார். “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” (சங்கீதம் 23:1) என்று சங்கீதக்காரனாகிய தாவீது கூறுகிறார். இதுதான் உண்மை நண்பர்களே, உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பதற்கு வல்லமையுள்ள தேவன் இருக்கிறார். ஆகவே, நீங்கள் எதைப்பற்றியும் கவலப்படத் தேவையில்லை. “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (சங்கீதம் 138:8) என்று தைரியமாய் சொல்லுங்கள். ஆனால் அதற்கு முன்பதாக, முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள், மற்றவைகள் எல்லாம் உங்களுக்கு கூடக்கொடுக்கப்படும். நாளைய தினத்தைப்பற்றி கவலைப்பட வேண்டாம் (மத்தேயு 6:33,34). நீங்கள் விரும்பி கேட்பதைவிட மிகவும் அதிகமாய் தேவன் உங்களுக்கு தந்தருளுவார். 
Prayer:
அன்பின் கர்த்தாவே,

நீரே எனது தேவைகளை சந்திப்பவர். நீர் மட்டுமே என் தேவைகளை வளமாக பூர்த்தி செய்ய முடியும். என் தேவைகள் அனைத்தையும் அற்புதமாக சந்திப்பதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே என் வாழ்வில் ஒரு அதிசயத்தை செய்தருளும். என்னால் செய்யமுடியாத காரியங்களை நீர் எளிதாக செய்துமுடிப்பீர். வனாந்தரமும் வறண்ட நிலமுமாயிருக்கிற காரியங்களை நீர் செழிக்கச்செய்வீர். எல்லாவற்றிலும் உமது நாமம் மகிமைப்படுவதாக.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000