Loading...

கர்த்தர் உன்னை குணமாக்குவார்!

Bro. D.G.S Dhinakaran
02 Jul
பல வருடங்களுக்கு முன்பு நான் அதிகமான நோயினால், படுத்தபடுக்கையானேன். யாராவது எனக்காக ஜெபிக்கமாட்டார்களா? என்று நான் காத்திருந்தேன். சென்னையில் ரயில்வேயில் வேலை செய்யும் ஒரு நண்பர் என்னை பார்ப்பதற்காக வந்தார். “உங்களுக்கு இப்படிப்பட்ட பாடு ஏன் வரவேண்டும்?” என்று அவர் கண்ணீர் வடித்தார். நான் படுக்கையில் எலும்பும் தோலுமாக இருக்கும்பொழுது, அவர் தன்னுடைய கைகளால் என்னை தடவிக் கொடுத்து, “இயேசு சுவாமி, இவரை சுகமாக்கும்” என்று பாரத்தோடு ஜெபித்தார். அந்த அன்பின் தொடுதலை என் ஆயுள் முழுவதும் மறக்கவே முடியாது. அந்த நாள் முழுவதும் அவர் உணவுகூட அருந்தாமல், உபவாசத்துடன் கண்ணீரோடு எனக்காக அழுது புலம்பினார். “ஆண்டவரே, அநேகருக்கு பிரயோஜனமாக பயன்படுத்துகிற உமது ஊழியனை நீர் சுகமாக்க வேண்டும்” என்று தன்னுடைய கைகளினால் என்னை தடவித்தடவி கண்ணீரோடு ஜெபம் பண்ணினார். வேறொரு போதகரும் அவ்வாறே என்னை பார்ப்பதற்காக வந்தார். அவர் வயது சென்றவர். “நீங்கள் சுகவீனமாயிருப்பதை எனக்கு ஏன் முன்பே தெரிவிக்கவில்லை” என்று என்னிடம் கோபித்துக்கொண்டார். அவர் முழங்கால்படியிட்டார். தன் கைகளினால் என்னை தடவிக் கொடுத்தார். ஜுரத்தினால், வேதனையினால் வாடிக்கொண்டிருந்த என்மீது அவர் தன்னுடைய கரங்களை வைத்தார். “ஆண்டவரே, நான் வயது முதிர்ந்தவன்; இனி என்னால் இந்த உலகிற்கு பிரயோஜனமில்லை; இவருக்கு வந்திருக்கிற இந்த நோய் எனக்கு வரட்டும்; நான் மரிக்கட்டும்! இவர் உயிர் பிழைக்கட்டும்” என்று ஜெபம் பண்ணினார். அவருடைய மனதுருக்கம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் உடைந்த மனதை மிகவும் ஆறுதல்படுத்தியது.

 “நான் உன்னை கைவிடுவதில்லை” (ஏசாயா 49:15) என்று ஆண்டவர் கூறுகிறார். இந்த வார்த்தையின்படியே உங்கள் சூழ்நிலைகள் எதுவாயிருப்பினும், கர்த்தர் உங்களை கைவிடமாட்டார்.  அவர் ஒருவரே உங்கள்மீது மனதுருக்கம் உடையவர். தமது கரத்தை நீட்டி உங்களை தொடுகிறவர். இயேசு கிறிஸ்துவின் அன்பான ஒரு தொடுதல் உங்கள் சரீரத்திலுள்ள அனைத்து நோய்களையும் குணமாக்க வல்லமை உள்ளது. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! அவர் உடைந்த உள்ளத்தின் காயங்களை குணப்படுத்துவதோடு, உங்கள் சரீரத்திலுள்ள வியாதியையும் குணப்படுத்தும் வல்லமை மிக்கவர் (ஏசாயா 61:1). நீங்கள் அனுபவிக்கும் வேதனையை அவரும் அனுபவிக்கும்படி தமது சரீரத்தில்  காயமேற்றார். “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்” (ஏசாயா 53:4,5). நீங்கள் கடந்து சென்ற பாதையை, இயேசுவும் கடந்து வந்திருக்கிறபடியால், “என் வேதனையை புரிந்துகொள்ள ஒருவருமில்லை” என்று இனி நீங்கள் புலம்ப வேண்டியதில்லை.  
ஒருமுறை “இயேசு மலையிலிருந்து இறங்கியபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.  அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்” (மத்தேயு 8:1-3). இயேசு அந்த குஷ்டரோகிமீது மனதுருகியதோடு மட்டுமல்லாமல், தமது கரத்தை நீட்டி குஷ்டரோகியைத் தொட்டு தமது அன்பை வெளிப்படுத்தினார். அவர் இன்று உங்களிடமும், “நான் உங்களை குணப்படுத்த ஆயத்தமாயிருக்கிறேன்” என்று கூறுகிறார். உங்களை விடுவிக்க இயேசுவிடமிருந்து வருகிற ஒரு வார்த்தை போதும். உங்களுக்கு தேவையானது விசுவாசம் மட்டுமே. தேவன் உங்களை குணமாக்கவும், இந்த வாக்குறுதியின்படியே உங்களை ஆசீர்வதிக்கவும் முடியும் என்று நீங்கள் நம்பினால், நிச்சயமாக தேவனுடைய அற்புதத்தை நீங்கள் காண்பீர்கள்.
Prayer:
குணமாக்கும் தேவனே,

கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்காக வேதனையையும் துன்பத்தையும் சகித்தபடியினால் உமக்கு நன்றி. நான் குணமடையும்படி நீர் காயமேற்றீர். நீர் ஒருபோதும் என்னை மறவாதவர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். என்னை குணமாக்குவதற்கு நீர் ஆயத்தமாக இருக்கின்றீர் என்ற வாக்குறுதிக்காக உமக்கு நன்றி. தேவனே, உமது தொடுதலைப் பெற நான் விரும்புகிறேன். உமது அன்பின் தொடுதல் என் இருதயத்தையும் என் சரீரத்தையும் குணமாக்கட்டும். 

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000