Loading...
Stella dhinakaran

கர்த்தர் நம்மை விடுவிப்பார்!

Sis. Stella Dhinakaran
11 Aug
ஆண்டவர் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது, தன் சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்த ஜெபத்தின் ஒரு பகுதி இது. ஆம், இந்த உலக வாழ்வில் எத்தனையோ சோதனைகளையும், தீமைகளையும் நாம் அனுபவிக்கிறோம். ஆனால், அவைகளெல்லாவற்றினின்றும் நம்மைக்காக்க வல்லவர் ஆண்டவர். அவரும் சோதனைகள், வேதனைகள் வழியாக கடந்து சென்றிருக்கிறார். இதைத்தான் “....அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்” (எபிரெயர் 2:18) என்று வாசிக்கிறோம். ஆகவே, சோதனைகள் வரும்போது, குடும்பமாகவோ, தனியாகவோ கர்த்தருடைய சமூகத்தில் மண்டியிட்டு, நம் கவலைகளை, பாரங்களை கர்த்தரிடம் சமர்ப்பித்து விடுவோமானால், கர்த்தர் அதைக் கேட்டு நிச்சயமாகவே அவைகளினின்று நம்மை விடுவித்துக் காப்பார். “உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு கர்த்தர் இடங்கொடாமல்...அதற்கு தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13).

ஒரு மனிதனுக்கு விரோதமாக அநேகர் எழும்பி, எப்படியாவது அவனைக் கொலை செய்துவிட்டு, அவனுடைய பணத்தை சூரையாடிவிட வேண்டுமென்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் அவன் அலுவலகத்தில் இருந்து திரும்பி வருகிற வழியில் அதை நிறைவேற்றிவிட தீர்மானம் செய்தனர். ஆனால், அன்றைக்கு அந்த மனிதன், காலையில் அலுவலகத்திற்கு புறப்படும் முன்னதாக கர்த்தருடைய சமுகத்தில், “ஆண்டவரே! எனக்கு வருகிற சோதனைகள், தீமைகள், பொல்லாங்குகள் யாவற்றினின்றும் நீரே என்னை பாதுகாத்து காப்பாற்றும்” என்று கருத்தாய் பிரார்த்தனை செய்தான். அன்று மாலை, அவன் வழக்கமாய் வருகிற வழியாய் வராமல் கர்த்தருடைய செயலால் வேறு மார்க்கமாய் வீடு போய் சேர்ந்தான். அவனை தீர்த்துக்கட்ட காத்திருந்த எதிரிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பிறகு அவர்களால் அவனை ஒன்றும் செய்ய முடியாதபடி கர்த்தருடைய கரம் அந்த மனிதன்மேல் தொடர்ந்து இருந்து, அவனை எல்லாத் தீங்குக்கும் விலக்கி பாதுகாத்தது.
ஆம்! பிரியமானவர்களே, இன்று உங்களுக்கும் இப்படி சோதனைகள், தீயகாரியங்கள் பொல்லாத மனிதர்களால் திட்டமிடப்படலாம். ஆனால், கருத்தாய் ஜெபிப்பதின் மூலமாய் ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொள்வீர்களானால், எல்லா சோதனைகளிலிருந்தும் அவர் நிச்சயம் விலக்கிக் காப்பார். ஏனெனில், “அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்” (எபிரெயர் 2:18). அவர் உங்களை மிகவும் நேசிக்கிறபடியினால், உங்கள் வழிகளிலெல்லாம் உங்களை பாதுகாக்கும்படி அவர் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார் (சங்கீதம் 91:11). கர்த்தர் உங்களைக் கவனித்து உங்களை பாதுகாப்பார். ஒரு நல்ல மேய்ப்பனைப்போல இயேசு தம் உயிரையே தியாகம் செய்தார். இந்த உலகத்தின் ஆபத்துகளிலிருந்து அவருடைய ஆடுகளான நம்மை அவர் பாதுகாக்கமாட்டாரா? நிச்சயமாக பாதுகாப்பார். “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனை தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்” (சங்கீதம் 91:14-16) என்று ஆண்டவர் கூறுகிறார். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசாயா 54:17).
Prayer:
அன்பு இரட்சகரே,

எத்தனையோ தீயவர்கள் எனக்கு எதிராக யாதொரு காரணமுமின்றி எழும்புகிறார்கள். ஆனால், எனக்கு நீரே அரணும் கேடகமுமாக இருக்கிறீர். இந்த மனிதனை நீர் பாதுகாத்து காப்பாற்றினதுபோல இன்றுமுதல் என்னையும், என்னை சாhந்தவர்களையும் காப்பாற்ற நீர் போதுமானவராக இருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் நீர் என்னை கைவிடமாட்டீர் என்று நான் முழுமையாய் விசுவாசிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000