Loading...

கர்த்தர் பலனளிப்பார்!

Shilpa Dhinakaran
21 Dec
அன்பு நண்பர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனத்தின்படி, நீங்கள் அந்தரங்கத்தில் செய்கிற உதவிகளை கர்த்தர் கவனிக்கிறவராயிருக்கிறார். உங்கள் கணவருக்கு நீங்கள் உணவு சமைக்கும்போது அவர் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் சகோதர/சகோதரியின் வீட்டுப்பாடங்களுக்கு உதவும்போது அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் குழந்தையின் கல்விக்காக சேமிப்புகளை கொடுக்கும்போது அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்களிடம் உள்ள ஒருவேளை உணவு அல்லது கொஞ்சம் பணத்தை தேவையிலுள்ள ஒருவரோடு பகிர்ந்து கொள்ளும்போதும் கர்த்தர் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். “நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்திலே அறுப்போம்” (கலாத்தியர் 6:9) என்று வேதம் கூறுகிறது. அவருடைய பிள்ளைகளில் ஒருவருக்கு நீங்கள் எதைச்செய்கிறீர்களோ, அதை அவருக்கே செய்கிறீர்கள். கர்த்தர் நிச்சயமாக அதற்கான வெகுமதியை உங்களுக்கு கொடுப்பார்.

கர்த்தர் கூறிய ஒவ்வொரு காரியத்தையும் செய்ய தாவீது ஒப்புக்கொண்டார். அது தன் தந்தையின் ஆடுகளை மேயப்பதாக இருந்தாலும், இராணுவத்தில் பணிபுரியும் தனது சகோதரர்களுக்கு உணவை எடுத்துச்செல்வதாக இருந்தாலும் அல்லது சவுல் ராஜாவிற்காக சுரமண்டலத்தை வாசிப்பதாக இருந்தாலும், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதை முழுமனதுடன் நிறைவேற்றினான். வேறொன்றையும் குறித்து அவன் சிந்திக்கவில்லை. கர்த்தர் தாவீது செய்த எல்லாவற்றையும் கண்டார். அவனை தன் இருதயத்திற்கு ஏற்றவனாக எண்ணினார். ஒருவேளை, நீங்கள் செய்கிற காரியங்கள் மனிதர்களின் பாராட்டைப் பெறாமல் போகலாம். அதைக்குறித்து வருத்தப்படாதீர்கள்! கர்த்தர் உங்களுக்கு ஏற்ற பலனை ஏற்ற நேரத்தில் தருவார். 
 “நன்றி” என்று அழைக்கப்படும் பிரபலமான நற்செய்தி பாடல் ஒன்று உண்டு. ஒரு நபர் பரலோகத்திற்கு செல்லும்போது, அநேகர் வந்து அவருக்கு நன்றி தெரிவிப்பது போன்றது அந்த பாடல். ஒரு நபர் பரலோகம் செல்லும்போது, அங்குள்ள ஒருவர் வந்து இந்த நபருக்கு நன்றி தெரிவிக்கிறார், ஏனெனில் அவர் ஞாயிறுபள்ளி மிஷனரியாக இருந்தபோது, அவரால் இவர் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார். ஆலயத்தில் ஓரு மிஷனரிக்கு இவர் உதவியதால் அவர் வந்து நன்றி தெரிவித்து சென்றார். அதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக வந்து இந்த மிஷனரி செய்த உதவிகளுக்காக நன்றி தெரிவித்தனர். அந்த மிஷனரி ஆச்சரியப்பட்டார். அவர் செய்த எளிய உதவிகள், பரலோகத்தில் இத்தனை பெரும் பாராட்டுகளை கொண்டுவருமென்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. இறுதியாக, இயேசு அவருடைய கையைப்பிடித்து, “என் மகனே, உன்னைச் சுற்றிப்பார், உனக்கு கிடைத்த வெகுமதி மிகப்பெரியது” என்று கூறினார். உங்களைப்பார்த்தும் இயேசு இதையே கூறுவார். நீங்கள் இந்த பூமியில் இருக்கும்போது, உங்கள் கிரியைகளுக்கான பலன் கிடைக்காமல் போகலாம். ஆனால், பரலோகத்தில் தேவன் உங்களுக்காக உயர்ந்த பலனை வைத்திருக்கிறார். அவர் உங்களை அரவணைத்து, “நல்லது, என் மகனே/மகளே” என்று சொல்லுவார். நீங்கள் அவருக்காகச் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் அவர் கருத்தாய் கவனிக்கிறார். ஆகவே, நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதிருங்கள்!
Prayer:
அன்பின் தேவனே,

தேவையிலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிற இருதயத்தை எனக்குத் தந்தருளும். எனது உதவி தேவைப்படுகிற சரியான நபர்களை எனக்கு காண்பியும். மேலும் நான்அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதையும் எனக்குக் கற்பியும். எனது உதவியின் மூலம் ஒவ்வொரு ஆத்துமாவும், உமது அன்பை உணரட்டும். ஆண்டவரே எப்பொழுதும் நீரே என்னை நன்மையான வழியில் நடத்தும். நான் செய்கிற உதவிகள் மனிதர்கள் முன்பாக தெரியாமல் இருந்தாலும், நீர் அதற்கான பலனை எனக்கு தருவீர் என்று நான் விசுவாசிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000