Loading...
Stella dhinakaran

அதிசயங்கள் செய்கிற கர்த்தர்!!

Sis. Stella Dhinakaran
12 Jun
அன்பானவர்களே, அண்டசராசரங்களையும் படைத்த தேவாதி தேவனே நமக்கு இந்த அருமையான வாக்குத்தத்தத்தைத் கொடுக்கிறார். “....(கர்த்தராகிய நான்) உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன். “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” (யோவான் 11:40) என்றவர், நம் வாழ்விலும் அதிசயங்களை செய்ய ஆவலோடு காத்திருக்கிறார். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே” (எபிரெயர் 10:23). “அவர் அப்படியே செய்வார்” (1 தெசலோனிக்கேயர் 5:24) என்று நம்பி  அதிசயங்களை செய்கிற கர்த்தரை நாம் விசுவாசத்தோடு பற்றிக்கொள்ள வேண்டும். 

“அதிசயங்களை செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்” (சங்கீதம் 77:14). “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 9:10). ஆபிரகாமின் மனைவி சாராளுக்கு ஸ்தீரிகளுக்குள்ள வழிபாடு நின்று போனபின்பும் (ஆதியாகமம் 18:11), முதிர்வயதிலே “அதிசயமானவர்” ஓர் குமாரனை அற்புதமாக பெற்றெடுக்க அருள்செய்தார் (ஆதியாகமம் 21:1,2).
அதுபோல, நம்பிக்கையற்ற நிலையில், கையில் தன் குழந்தையுடன் வனாந்தரத்திலே அலைந்து திரிந்து கொண்டு, தன் பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று சத்தமிட்டு அழுதுகொண்டிருந்த ஆகாரை, தேவதூதன் வானத்திலிருந்து கூப்பிட்டு, “ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது. பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை உன் கையினால் பிடித்துக்கொண்டு போ. அவனை பெரிய ஜாதியாக்குவேன்” என்றார் (ஆதியாகமம் 21:16-18). அப்படியே தேவன் அதை நிறைவேற்றியும் முடித்தார். 

குழந்தை பாக்கியமின்றி தேவசமூகத்தில் மனக்கிலேசத்தோடு தன்னுடைய மனசஞ்சலங்களைக் கொட்டின எல்க்கானாவின் மனைவி அன்னாளின் விண்ணப்பத்தைக்கேட்டு, அவளை நினைத்தருளி, அவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ‘சாமுவேல்’ என்று பேரிட ஆண்டவர் கிருபை செய்தார் (1 சாமுவேல் 1:10,19,20); மீண்டும் அன்னாளை கடாட்சித்து, அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும், இரண்டு குமாரத்திகளையும் பெற்றெடுக்கவும் அருள் செய்தார் (1 சாமுவேல் 2:21).

அதேபோன்று, புதிய எற்பாட்டில் குழந்தை பாக்கியமின்றி வயதுசென்றவர்களாயிருந்த சகரியா-எலிசபெத்து தம்பதியரின் வாழ்க்கையிலும், கர்த்தர் அற்புதத்தை செய்து, எலிசபெத்து ஒரு புத்திரனைப் பெற்றெடுக்க அருள்செய்தார் (லூக்கா 1:7,13,57) பிசாசு பிடித்த மகளை வைத்துக்கொண்டு கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த கானானிய ஸ்திரீ, “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள். எனக்கு உதவி செய்யும்” என்று அவரை பணிந்து கொண்டபொழுது, அற்புதநாதர் இயேசு அவளுக்கு பிரதியுத்தரமாக, “ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது” என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்” (மத்தேயு 15:22-28; மாற்கு 7:25-30)

இவ்விதமாய் “அதிசயங்களை செய்கிற ஆண்டவர் பலரது வாழ்க்கையில் “அதிசயத்தை” விளங்கப்பண்ணினதை வேதபுத்தகத்தில் காண்கிறோம். ஆகவேதான், அவரது நாமம் “அதிசயம்” (நியாயாதிபதிகள் 13:18) என்றும், அவர் “அதிசயமானவர்” (ஏசாயா 9:6) என்றும் வேதம் கூறுகிறது. நீங்களும் அதிசயம் செய்கிற தேவனை நோக்கி கூப்பிடுங்கள். அவர் உங்கள் வாழ்க்கையிலும் அற்புதங்களை செய்வார்.  உங்களையும் மற்றவர்களுக்கு சாட்சியாக மாற்றுவார். 
Prayer:
அற்புதங்களை செய்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம். நீர் இந்த பூமியிலிருந்தபோது, அநேக அற்புதங்களை செய்து ஜனங்களுடைய வாழ்வில் ஒரு பரிபூரணத்தை கொண்டுவந்தீரே அதுபோல என் வாழ்விலும் ஒரு அற்புதத்தை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன் என்பதை நினைத்தருளும். காத்திருப்பது இருதயத்தை இளைக்கப்பண்ணும், விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போலிருக்கும் என்ற வார்த்தையின்படியே, நான் உம்முடைய அற்புதத்தை காண கிருபை பாராட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.  

For Prayer Help (24x7) - 044 45 999 000