Loading...
Paul Dhinakaran

உயிர்ப்பிக்கும் ஆண்டவர்!

Dr. Paul Dhinakaran
21 Apr
பிரியமானவர்களே, உங்கள் அனைவருக்கும் நானும் என் குடும்பத்தினரும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இது தேவன் நமக்காக தன் ஜீவனையே தியாகமாய் கொடுத்து உயிர்த்தெழுந்த மகிமையான ஒரு பண்டிகை. இந்த ஈஸ்டர் தினத்தை நாங்கள் சந்தோஷமாய் கொண்டாடுகிறோம். கர்த்தர் உங்களையும் அப்படியே கொண்டாடச் செய்வார் என்று நான் நம்புகிறேன். கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதமே நமக்கு சந்தோஷத்தை தரும். குழந்தையில்லையே, திருமணமாகவில்லையே, வேலையில்லையே, வருமானம் போதவில்லையே என்று பலவித குறைவுகளோடு இருக்கிற உங்கள் வாழ்வில், இந்த நன்னாளில் உயிர்த்தெழுந்த இயேசு ஒரு அற்புதம் செய்து உங்களை மகிழ்ச்சியாக்குவார். இயேசு உயிரோடிருக்கிறார்!

“ பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதிமொழிகள் 28:13) என்ற வேதவார்த்தையின்படி, உங்களுக்காக சிலுவையில் மரித்த இயேசுவினிடத்தில் பாவங்களை அறிக்கை செய்யுங்கள். அப்பொழுது அவர் உங்களை மன்னித்து, உங்களை பரிசுத்தமாய் வாழச்செய்வார்.  “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;” (எபேசியர் 2:8). எத்தனை பெரிய ஈவை தேவன் நம்மீது வைத்திருக்கிறார். நம்முடைய பெலவீனங்களை நோய்களை, பாடுகளை துக்கத்தை அவர் சுமந்துகொண்டு, இரட்சிப்பை நமக்கு அளித்திருக்கிறார். ஆகையினாலே தான், இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். நம் பெலவீனத்தின் மத்தியிலும் தேவன் நமக்குள்ளிருந்து கிரியை செய்வது எத்தனை பெரிய ஈவு. தேவனுடைய இந்த மாபெரும் ஈவுக்காக இன்று ஒருநாள் மாத்திரமல்ல, வாழ்நாள் முழுவதும் நாம் அவரைக் கொண்டாட வேண்டும்.  

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்தபின்பு அவரை அடக்கம் செய்த கல்லறையைத்தேடி மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் வந்தனர். துக்கமும் வேதனையும் நிறைந்த பெலவீனமான நிலைமையில் அந்த ஸ்திரீகள், மரித்த இயேசுவின் உடலைப்பார்க்க வருகின்றனர். அவர்கள், இயேசு உயிரோடெழுந்திருப்பார் அவரை காணவேண்டுமென்று வரவில்லை. இயேசு கிறிஸ்து தான் உயிரோடெழுந்திருப்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தும், அவர்கள் அந்த வார்த்தைகளை விசுவாசிக்கவில்லை. ஆம், துக்கமும் வேதனையும் வரும்போது, நாம் எவ்வளவு தான் பக்தியாயிருந்தாலும், நம்மால் விசுவாசமாய் இருக்க முடியாமல் போகிறது. அந்த ஸ்தீரிகளும் அப்படித்தான் துக்கத்தின் மத்தியில் இயேசு கூறிய வார்த்தைகளை மறந்து, மரித்த இயேசுவின் உடலை காணவேண்டுமென்று வருகிறார்கள். ஆனால், “தூதன்  ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்” (மத்தேயு 28:5,6) என்று சொன்னான். அவர்கள் பயத்தோடும், மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அப்பொழுது இயேசு உயிரோடிருக்கிறவராக மகதலேனா மரியாளுக்கும் மற்ற மரியாளுக்கும் தன்னை வெளிப்படுத்தினார் (மத்தேயு 28:8, 9).
இன்றைக்கும் ஆண்டவர் உயிரோடிருக்கிறாரென்று நாம் அறிக்கை செய்யும்போது, நமக்குள் எவ்வளவு பெலவீனமிருந்தாலும், அந்த பெலவீனத்தை மாற்றி நம்மை உயிர்ப்பித்து, அநேகருக்கு நாம் பாக்கியத்தை கொடுப்பவர்களாக நம்மை மாற்றுவார். உங்களுக்குள்ளிருக்கும் நற்கிரியைகளை, நல்ல ஆவியை ஆண்டவருக்கென்று உபயோகப்படுத்துங்கள். அப்பொழுது ஆண்டவர் உங்களுக்குள்ளிருந்து புறப்படும் வார்த்தைகளின் மூலம் லட்சக்கணக்கான மக்களை உயிர்த்தெழச்செய்வார். உங்களுக்கு கிடைத்திருக்கும் கொஞ்சத்திற்காக நீங்கள் ஆண்டவருக்கு நன்றி சொல்லும்போது, அவர் அநேக ஆசீர்வாதங்களையும், தாலந்துகளையும் கொடுத்து உங்களை உயர்த்துவார். இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிற தேவனை நோக்கிப்பாருங்கள். அவர் உங்கள் மனவிருப்பத்தின்படியே உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். இந்த நன்னாளிலும் தேவன் உங்களை குடும்பமாய் ஆசீர்வதித்து சந்தோஷமாக்குவார்.  
Prayer:
அன்பின் தேவனே,

 இன்றைக்கும் உம்முடைய உயிர்ப்பிக்கும் வல்லமையை நான் அனுபவிக்க எனக்கு கிருபை செய்தருளும். நீர் உயிர்த்தெழுந்த தேவனாய் சதாகாலமும் எங்களோடிருப்பதற்காக உமக்கு நன்றி. என் பாவங்களை நான் அறிக்கை செய்கிறேன். என்னை மன்னித்து பரிசுத்தப்படுத்தும். உயிர்ப்பிக்கும் தேவனே, செத்துப்போயிருக்கும் என் ஆவிக்குரிய வாழ்க்கையை  உயிர்ப்பித்து, அநேகருக்கு ஆசீர்வாதமாய் என்னை  உபயோகப்படுத்தும். துக்கம், வேதனையின் மத்தியில் நான் விசுவாசத்தை இழக்காமல் காத்துக்கொள்ளும். இந்த ஈஸ்டர் நன்னாளில் என் குடும்பம் முழுவதையும் மகிழ்ச்சியுடன் வழிநடத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000