Loading...
DGS Dhinakaran

தேவ இரக்கமும் மனதுருக்கமும்!

Bro. D.G.S Dhinakaran
04 Oct
பிரியமானவர்களே, கர்த்தர் அன்பும் மனதுருக்கமும் கிருபையும் நிறைந்த தேவன். வேதத்தை நாம் எத்தனைமுறை வாசித்தாலும் ஒரு காரியத்தை நாம் திரும்ப திரும்ப காணமுடிகிறது. அது தேவன் ஜனங்கள்மீது வைத்திருந்த மனதுருக்கம். ‘தேவனிடத்திலிருந்து ஒரு அற்புதத்தை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்களானால் முதலாவது தேவனுடைய மனதுருக்கத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.’

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்:

மத்தேயு 9: 35,36 கூறுகிறது, “இயேசு திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள்மேல் மனதுருகி, சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.”  “இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து, ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து, சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்” (மத்தேயு 15:32) என்று கூறினார். “இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்.” (மத்தேயு 20:34). 

இயேசு நாயீன் என்னும்  ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன்தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்.  கர்த்தர், அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து பாடையைத் தொட்டார்; வாலிபனே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான்  (லூக்கா 7:11-15). எனக்கன்பான சகோதரனே, சகோதரியே கவலைப்படாதிருங்கள். தேவனுடைய மனதுருக்கம் உங்களை முற்றிலுமாய் குணமாக்கவல்லது.
நம்பிக்கையற்ற நேரங்களில் தேவன் தரும் நம்பிக்கை:
 
ஒருமுறை ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் தனது அதிகாரத்தை இழந்தபோது, சகஊழியர்களுடன் சிறையிலடைக்கப்பட்டார். அங்கு ஒருவர் அவருடனே மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அவர் சிறையில் வைக்கப்பட்டிருந்தாலும்கூட,  தன்னை ஒருநாள் இந்த சிறையிலிருந்து தேவன் விடுவிப்பார் என்று விசுவாசமாயிருந்தார். ஒரு ஆண்டுகாலம் அவர் காத்திருந்தார். அதன்பிறகு ஒருநாள் அவர் தனது பொறுமையை இழந்தவராய் அழுது புலம்பினார். “நான் ஒருவருட காலமாய் விடுதலைக்காக காத்திருக்கிறேன்.  நான் நிரபராதி.  ஏன் அவர்கள் என்னை சிறையில் அடைத்தனர்? தேவன் எங்கிருக்கிறார்? அவர் நீதியுள்ள நியாயாதிபதியா? என்று ஒரு பைத்தியக்காரனைப்போல  புலம்பினார்? அந்த சமயத்தில்  அங்கிருந்த  கண்காணிப்பாளர் அவரை அழைத்து, “உடனே வாருங்கள், சில பெரிய மனிதர்கள் உங்களை சந்திக்க காத்திருக்கின்றனர்.” என்று கூறினார். ரிச்சர்டுக்கு விருப்பமில்லை என்றாலும் தயக்கத்துடனே சென்றார். அங்கே அவருடைய பழைய நண்பர்கள் நின்றிருந்தனர். அவர்கள், “நீங்கள் என்ன குற்றம் செய்திருந்தாலும், வந்திருக்கும் புதிய ஜனாதிபதி அவைகளை மன்னித்து உங்களை விடுதலையாக்கிவிட்டார்” என்று கூறினார்கள்.  அவர் காதில் விழுந்த அந்த விஷயத்தை அவரால் நம்பமுடியவில்லை. அவர் அழுதுகொண்டே, “மனதுருக்கமும், இரக்கமும் நிறைந்த தேவன் ஒருவர் பரலோகத்தில் இருக்கிறார்.” என்று தேவனை துதித்துக் கொண்டேயிருந்தார்.
 
தேவனுடைய மனதுருக்கமே அற்புதத்தை பெற்றுத்தரும்:
 
எனக்கன்பான சகோதரனே, சகோதரியே, இன்றைக்கு நீங்கள் உங்கள் வாழ்வில் நம்பிக்கை இழந்த நிலையிலிருக்கிறீர்களா? “கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்”(சங்கீதம்103: 8). இந்த இரக்கம் நிறைந்த தேவன் உங்கள் வாழ்க்கையில்  என்ன செய்ய சித்தமாயிருக்கிறார் என்பதை அவரிடத்தில் கேளுங்கள். அவருடைய மனதுருக்கம் அநேகருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. தாழ்விலிருந்தவர்களை உயர்த்தியிருக்கிறது. நம்பிக்கையிழந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் தேவன் அவர்.  முடிவில்லாத அவருடைய இரக்கமும் மனதுருக்கமும், நிச்சயமாகவே உங்கள் வாழ்வில் அற்புதங்ளை நடப்பிக்கும்.
Prayer:
அன்பின் இரட்சகரே!
நீர் என்மீது எவ்வளவு மனதுருக்கம் நிறைந்த தேவனாயிருக்கிறீர். உம்முடைய அற்புதங்கள் நடக்க தாமதமானாலும் நான் உம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்காதபடி காத்தருளும். நீர் இந்த பூமியில் இருந்தபோது, ஜனங்கள்மீது மனதுருகினீரே, இன்றைக்கு என்மீதும் மனதுருகி நான் எதிர்பார்த்து காத்திருக்கும் அற்புதம் என்வாழ்வில் நடக்கும்படி தயவுபாராட்டும். இரக்கம் நிறைந்த உம்மைப்போலவே நானும் மற்றவர்களிடத்தில் இரக்கமாய் மனதுருக்கமாய் நடந்துகொள்ள கிருபைபாராட்டும். உம்முடைய ஆசீர்வாதம் மற்றவர்களுக்கு பாய்ந்துசெல்லும் வாய்க்காலாக என்னை உபயோகப்படுத்தும். துதி கனம் மகிமை யாவும் உமக்கே செலுத்துகிறேன்.
இயேசுவின் நாமத்தில் ஜெபத்தை ஏறெடுக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்!

For Prayer Help (24x7) - 044 45 999 000