Loading...
Paul Dhinakaran

தேவனே உங்கள் பங்கும் சுதந்தரமும்

Dr. Paul Dhinakaran
08 May
அன்பு நண்பரே, இந்த நாள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும். இந்த நாளின் வாக்குத்தத்தம்  சங்கீதம் 16:5-ல் காணப்படுகிறது, “கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.” ஆம், நண்பரே, இந்த பகுதியில் தாவீது தன்னை முழுவதுமாக தேவனுடைய கரங்களில்   அர்ப்பணிக்கிறார்.
 
கர்த்தர் என் சுதந்தரம் என்று தாவீது  பேசும்போது, அவர் கூறுகிறார், “தேவனே, இந்த உலகத்தில் என் தேவையெல்லாம் நீர் மட்டும் தான். ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும், ஐஸ்வரியத்திற்கும் எனக்காக நீர் சிலுவையில் விலைகொடுத்துவிட்டதால், அவைகள் உமக்குள் அடங்கியிருக்கிறது." இது உங்கள் பூமிக்குரிய தகப்பன் அல்லது தாயிடமிருந்து நீங்கள் பெறுகிற பரம்பரை சொத்து உங்களுக்கு விலையேறப்பெற்றதாக இருக்கலாம். அது நிலங்கள், தங்கம் மற்றும் செல்வம் போன்ற விஷயங்களாக இருக்கலாம். ஆனால், இயேசு சிலுவையில் பலியாக தன்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் நமக்கு கொடுத்த பெரிய சொத்து ஜீவனுள்ள வாழ்வு. 

தேவன்  நமக்கு கொடுப்பது பரிபூரண ஆசீர்வாதமாக இருக்கும். அதனால்தான் தாவீது, “ஆண்டவரே, நீரே என் சுதந்தரம், பங்கு,  என் சுதந்தரத்தை காப்பாற்றுகிறவர்" என்று சொல்லுகிறார். இன்றும் கர்த்தர் இதை உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறார். ஏசாயா 58:14-ல், “அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று” என்ற ஒரு ஆசீர்வாதமான வார்த்தையை வாசிக்கிறோம்.  ஆம், அவர் உங்கள் சுதந்தரமாக மாறும்போது, நீங்கள் கர்த்தரில் உங்கள் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். இரண்டாவதாக, அவர் நமது பரிசு. 1 கொரிந்தியர் 9:24-27-ல், "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்" என்று வாசிக்கிறோம். நாம் இயேசுவுக்காக வாழும்போது, அவர் நம்முடைய பரிசும், நீதியின் கிரீடமுமாக இருப்பார். 
மூன்றாவதாக, வேதம் மகிழ்ச்சியைக்குறித்து பேசுகிறது. தாவீது, "கர்த்தரே என் மகிழ்ச்சி" என்று கூறுகிறார். மத்தேயு 12:18-ல், “இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்" என்று தேவன் கூறுகிறார். அவர் உங்களுக்கும் அதையே சொல்லுகிறார்.  அதனால்தான், தாவீதால்  "நீரே என் மகிழ்ச்சி, நீரே எனக்கு எல்லாம்" என்று சொல்ல முடிகிறது. நாமும் "ஆண்டவரே, என் நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடுவதை விட,  உம்முடன் செலவிட விரும்புகிறேன். ஏனென்றால், நீரே, என் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்." கடைசியாக, தாவீது, "நீரே என் பங்கு" என்று கூறுகிறார். எபேசியர் 5:30-ல் வேதம் கூறுகிறது, “நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.” ஆம், அன்பு  நண்பரே, நீங்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள். அவருடைய ஜீவன்  உங்கள் சரீரத்தில் பாய்ந்து செல்லும். தேவநாமம் மகிமைப்படும்படி நீங்கள் இணைந்திருப்பீர்கள். நீங்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த ஆசீர்வாதத்திற்காக தேவனைத்  துதியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Prayer:
அன்பின் தகப்பனே,

இன்று நீர் வாக்களித்த இந்த விசேஷித்த கிருபைக்கு நன்றி. நான் உமது ஆசீர்வாதங்களை முழுமையாக அனுபவிக்க எனக்கு உதவிச் செய்தருளும். என் வாழ்வில் சகலமும் நீரே. உமக்கு சொந்தமாய் என்னை தெரிந்துக்கொண்டதற்காக நன்றி செலுத்துகிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000