Loading...
DGS Dhinakaran

கர்த்தர் உங்களோடிருக்கிறார்!

Bro. D.G.S Dhinakaran
27 May
குடும்பம் தேவன் கொடுத்த ஆசீர்வாதம். இவ்வுலகிலுள்ள பல குழந்தைகள் குடும்பங்களின்றி தவிக்கிறார்கள். சில குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். இவ்வுலகம் அநேக துன்பங்களால் சூழ்ந்திருக்கிறது. இந்த கஷ்டங்கள் நம்மை தனிமையாக உணரச்செய்கிறது. சில நேரங்களில் அன்பினால் பிணைக்கப்படாத குடும்பத்தை நாம் கொண்டிருக்கலாம். கணவன் மனைவியிடையே, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே மற்றும் உறவினர்களுக்கிடையே எந்த அன்பும் இருக்காது. கடைசி நாட்களில் அன்பு தணிந்துபோகும் (மத்தேயு 24:12) என்று வேதம் கூறுவதுபோல, பலர் வெறுப்புடனே வாழ்கிறார்கள். ஜனங்கள் மத்தியில் இன்று சகிப்பத்தன்மை என்பது குறைந்துபோயிருக்கிறது. மனச்சோர்வு  மற்றும் விவரிக்க இயலாத பல கவலைகளினால் மக்கள் தங்கள் வாழ்க்கையை சீக்கிரத்திலே முடித்துக்கொள்கிறார்கள். வரலாற்றில் இல்லாத அளவிற்கு இவ்வுலகம் முன்பைவிட அன்புக்காக ஏங்கித் தவிக்கிறது.

ஒரு நாள் இளம்பெண் ஒருத்திக்கு அவள் கணவரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அதை வாங்கிய அவள் மிகவும் சந்தோஷத்துடன் அதை பிரித்து படித்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அதன்பிறகு அவள் சயனைடு விஷம் அருந்தி மரித்துப்போனாள். அப்படி அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?  “என் பெற்றோரின் விருப்பத்திற்காகவே நான் உன்னை திருமணம் செய்துகொண்டேன். நான் ஏற்கனவே அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்டேன். எனக்கு பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆகவே, உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்த முடியாது. நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னை மன்னித்துவிடு!” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அவள் உள்ளம் உடைந்தவளாய், தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டாள். இதுதான் ஒரு மனிதனுடைய அன்பு. 
நாம் எதிர்பார்க்கும் அன்பை உண்மையாக நமக்குத் தரக்கூடியவர் நம்முடைய ஆண்டவர் மட்டுமே. நம் இதயத்திலுள்ள ஏக்கத்தை வேறொருவராலும் பூர்த்தி செய்ய முடியாது. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தில் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று கர்த்தர் நம்மீது ஒரு தாய்க்கும் மேலாக அன்புகூருகிறார். இது உண்மை. பாவம் அதிகரித்து வருகிற இந்நாட்களில் அநேக தாய்மார்கள் பல்வேறு காரணங்களினிமித்தம் தங்கள் பிள்ளைகளை நிராகரிக்கிறார்கள். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காரியத்திலும் அவர் மனதுருக்கமுடையவராய் இருக்கிறார். உங்களை பராமரிக்க ஒருவருமில்லை என்று கவலைப்படுகிறீர்களா? உங்களை மிகவும் நேசிப்பவரின் அன்பை இழந்துவிட்டீர்களா? நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்துசென்றாலும், தேவன் உங்களைப்பார்த்து, “நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவான் 14:18)  என்று கூறுகிறார். உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களை கைவிடுவதுமில்லை என்று சொல்லியிருக்கிறாரே (எபிரெயர் 13:5). அவர் ஒருபோதும் உங்களை கடிந்துகொள்வதில்லை. அவர் உங்களை ஆறுதல்படுத்தி, ஒரு மேய்ப்பனைப்போல உங்களை தோளின்மீது சுமந்துசெல்வார்.
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

நீர் எனக்கு தகப்பனாயிருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய மாறாத அன்பிற்காக உம்மை துதிக்கிறேன். யார் என்னை கைவிட்டாலும், நீர் என்னை கைவிடாதிரும். என் வாழ்வின் ஒவ்வொரு சிறிய காரியங்களையும் நீர் கவனித்துக்கொள்கிறபடியால் உமக்கு நன்றி. நான் உம்மை முழுமையாக நம்புகிறேன். என் தனிமை உணர்வை நீக்கி, உமது அன்பை ருசிக்க கிருபை செய்தருளும். நீரே எனது துணையும், நண்பருமாயிருக்கிறீர். இவ்வுலக அன்பை அல்ல, உம்மையே நான் சார்ந்துகொள்ளுகிறேன். என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் உமது அன்பை பிரதிபலிக்க உதவிச்செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000