Loading...
Dr. Paul Dhinakaran

கர்த்தர் என் மேய்ப்பர்!

Dr. Paul Dhinakaran
24 Nov
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்முடைய பரம பிதா அருளிய அழகான வாக்குறுதியின்மீது நமது கவனத்தை செலுத்துவோம். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7:9-11). ஆண்டவர் தான் நாம் பிறந்தநாள் முதல் இந்நாள் முழுவதும் நம்மை காக்கிற மேய்ப்பனாயிருக்கிறார் (ஆதியாகம் 48:15). இனிமேலும் அவர் நம்மை நீதியின் பாதையில் நடத்துவார். 

ஒரு இளைஞர் தனது இளைய மகனை மழலையர் பள்ளியில் இறக்கிவிட்டு தனது காரில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று, பரிசுத்த ஆவியானவர் தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஜெபிக்கும்படி அவரது உள்ளத்தில் ஏவினார். அவர் அதற்கு கீழ்ப்படிந்து விசுவாசத்துடன் வேத வார்த்தைகளை அறிக்கை செய்ய ஆரம்பித்தார். “எங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; போக்கிலும் வரத்திலும் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம், தேவகிருபை எங்களை சுற்றிலும் சூழ்ந்துகொண்டிருக்கிறது” என்று அவர் உரத்த சத்தமாக சொல்லி ஜெபித்தார். அப்பொழுது மூத்த மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற அவரது மனைவியின் காரை, பின்னால் வந்த ஒரு வாகனம் வேகமாய் மோதியது. அதில் அவர் மனைவியின் கார் கட்டுப்பாட்டை இழந்து பரப்பரப்பான சாலையில் தூக்கி வீசப்பட்டது. நொடிப்பொழுதில் அந்த பெண்ணிற்கு உலகமே ஸ்தம்பித்தது போல் தோன்றியது.  அந்த பெண் “இயேசுவே! இயேசுவே!” என்று கூச்சலிட்டாள். சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் ஒரு சேதமுமின்றி நொறுங்கிய காருக்குள்ளிருந்து பத்திரமாய் வெளியே மீட்கப்பட்டனர். சமாதானம் அவர்களை நிறைத்தது. அந்த விபத்து வழிபோக்கர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆம், ஒரு சேதமும் இல்லாமல் அவர்கள் இருவரையும் கர்த்தர் அற்புதமாய் பாதுகாத்தார். 
அல்லேலூயா, நல்ல மேய்ப்பனாகிய இயேசு உங்களோடும் இருக்கிறார். அவர் உங்களை நீரூற்றண்டைக்கு நடத்திச்செல்வார். அவர் தமது வார்த்தையின் மூலம் எத்தனை ஆச்சரியமாக முழுக்குடும்பத்தையும் பாதுகாக்கிறார். ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வதற்கு வேண்டிய பெலனையும் பாதுகாப்பையும் அவரே கொடுக்கிறார். அவருடைய நன்மையையும், வாக்குறுதிகளையும் பற்றிக்கொள்ளுங்கள். அது உங்களுடைய கடினமான சூழ்நிலைகள் எல்லாவற்றையும் மாற்றி நீங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் நிறைந்த வழியில் உங்களை வழிநடத்தும். நீங்கள் எவ்வித குறைவுமில்லாமல் இருப்பீர்கள். வழிகளிலெல்லாம் உங்களை காக்கும்படி தமது தூதர்களுக்கு கட்டளையிடுவார். தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும்படி, நீங்கள் ஜனங்கள் மத்தியில் அற்புதமாகவும், ஆச்சரியமாகவும் இருப்பீர்கள். அவருடைய கரத்தை பற்றிக்கொண்டு, இந்த வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சியுடன் முன்செல்லுங்கள். 
Prayer:
கர்த்தராகிய இயேசுவே! 

நீரே என் மேய்ப்பன். இந்த நாளிலும் உமது அற்புதமான வழிகளில் என்னை வழிநடத்தும். இன்றைய தினத்தில் நான் சந்திக்க இருக்கும் பிரச்சினைகள், ஆபத்துகள், விபத்துகளை குறித்து எனக்கு எதுவும் தெரியாது.  ஆனால் என் பாதையிலெல்லாம் நீர் என்னுடனே இருக்கிறீர் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டைக்கு நடத்திச் செல்லும். என்னை கீழே விழத்தள்ளுகிற சோர்வுற்ற கடினமான சூழ்நிலைகளை மாற்றும். நீர் என் மேய்ப்பராயிருக்கிறபடியால்,  ஒரு குறைவுமில்லாமல் என்னை நடத்துவீர் என்று நான் நம்புகிறேன். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000