Loading...

கர்த்தர் உங்கள் முன்னே செல்வார்

Stella Ramola
09 May
அன்பு நண்பரே, “கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்” (ஏசாயா 52:12) என்ற வார்த்தையை உங்களிடம் கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்ன ஒரு அற்புதமான வாக்குத்தத்தம்! உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் போகிறார். இன்று நீங்கள் ஒரு வனாந்திர பாதையில் நடந்து கொண்டிருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் எல்லாம் வறண்டு போன நிலையில் இருக்கலாம். நீங்கள் அநேக தோல்விகளை சந்தித்திருக்கலாம். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காததைப் பார்த்து நீங்கள் அதே இடத்தில் சுற்றி வருவதைப்போல உணரலாம். நீங்கள் மிகுதியை காணாமலிருக்கலாம். உங்கள் வியாபாரத்தில், குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை. படிப்பில் வெற்றி இல்லை. உடல்நலம் குறித்து நல்ல முடிவுகள் எதுவும் எடுக்க முடியவில்லை. “எனக்கு உதவிச்செய்ய யாருமில்லை” என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் உங்கள் சூழ்நிலைகளின் மத்தியில் தேவன் உங்களுக்கு முன்செல்வார் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
 
யாத்திராகமம் 13:21ல் “அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.” இஸ்ரவேலர் வனாந்தரத்தில் நடந்தபோது கர்த்தர் அவர்களுடன் இருந்ததைப்போலவே, உங்களுடனும் இருப்பார். வனாந்தரத்தில் ஒன்றுமில்லை என்றாலும் தேவன் அவர்களுடனே இருந்தார். அவரே அவர்களுக்கு வெளிச்சமாகவும், வழிகாட்டியாகவும் அவர்களுடன் இருந்தார். பகலில் மேகஸ்தம்பமாகவும், இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும் இருந்தார். தேவன் வனாந்தரத்தில் தமது ஜனங்களுடன் இருந்ததைப்போலவே, உங்களோடிருந்து உங்களுக்கும் வழிகாட்டுவார்.
கர்த்தர் உங்கள் ஒளியாகவும், வழிகாட்டியாகவும், உங்கள நண்பராகவும் இருப்பதற்கு உங்களுக்கு முன்னே செல்கிறார். இருளின் நடுவே அவர் உங்களுக்கு வெளிச்சமாய் இருப்பார். நீங்கள் தனிமையை உணரும்போது அவர் உங்கள் நண்பராக இருப்பார்.  அடுத்து என்ன செய்வதென்று தெரியாதபோது அவர் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். கர்த்தர் உங்களுக்கு முன்னால் செல்லும்போது நீங்கள் நன்மைகளை பெறுவீர்கள். யாத்திராகமம் 12:33ல் எகிப்தியர்கள் கர்த்தருக்கு பயந்து, இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தார்கள் என்பதை வேதத்தில் வாசிக்கிறோம். ஆகவே, அவர் நமக்கு முன்பாக செல்லும்போது, நமக்கு எதிராக உருவாகும் ஒவ்வொரு தீய காரியங்களும் நமக்கு பயப்படும். அது சொல்லும், “இவள்/இவன் தேவனுடைய பிள்ளை. நான் அவன்/அவளுக்கு விரோதமாக எந்தவொரு தீங்கும் செய்ய முடியாது. நான் அவர்களை தொட்டால், அழிக்கப்படுவேன் என்று அது ஓடிவிடும்.” தேவன் உங்களை தனது சிறகுகளின்கீழ் வைத்து பாதுகாப்பார். இன்று முதல், உங்கள் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தைக் காண்பீர்கள். உங்கள் வனாந்திரம் நீர் பாய்ச்சலான தோட்டமாய் மாறும்.
Prayer:
அன்பின் தேவனே,
 
நான் இப்போது வனாந்திரமான ஒரு சூழ்நிலையின் வழியாக சென்று கொண்டிருக்கிறேன். நீரே எனக்கு வழிகாட்டியாகவும், வெளிச்சமாகவும், நண்பராகவும் இருந்தருளும். வனாந்திரமான என் வாழ்க்கையை நீர்பாய்ச்சலான தோட்டமாய் மாற்றும். என் தனிமையை நீக்கும். உமது பிரசன்னம் என் வாழ்விலிருக்கும் ஒவ்வொரு கசப்பையும் இனிமையானதாக மாற்றும். ஒவ்வொரு பற்றாக்குறையையும் நீக்கியருளும். நல் ஆரோக்கியத்தை தந்து வழிநடத்தும்.
 
உமது விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000