Loading...
Evangeline Paul Dhinakaran

முதன்மை தேவனுக்கே!

Sis. Evangeline Paul Dhinakaran
24 Feb
தேவனுடைய நீதியைத் தேடுவதற்கான எந்தவொரு முயற்சியும் நமக்கு ஆவிக்குரிய உற்சாகத்தை வழங்குவது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும்படி உங்களை உந்திதள்ளுகிறது. அவரே நமக்கு நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார் (1 கொரிந்தியர் 1:31). நாம் செய்கிற எல்லாவற்றிலும் தேவனுக்கு நாம் முன்னுரிமை வழங்கும்படி, அவருடைய வார்த்தையையும் ஜெபத்தையும் விசுவாசத்தையும் தியானிக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் கையிட்டுச்செய்கிற எல்லாவற்றிலும் நீங்கள் செழிப்பீர்கள் (சங்கீதம் 1:2,3). “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (எரேமியா 17:7) என்று வேதம் கூறுகிறது. ஜார்க்கண்ட் (இந்தியா) ராஞ்சியைச் சேர்ந்த டாக்டர். நீலிமா ஹெரான்ஸின் சாட்சி இதோ, தேவனுக்கு முதலிடம் கொடுத்ததின் மூலம் அவர் என்னென்ன ஆசீர்வாதங்களை பெற்றார் என்பதை பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். 

“இயேசு அழைக்கிறார்” பிலாய், பிரார்த்தனை திருவிழாவில் நான் கலந்துகொள்ளும் பாக்கியத்தை பெற்றேன். சகோதரி இவாஞ்சலின் பால் தினகரன் செய்தி அளித்து, ஜெபவேளையில் பரிசுத்த ஆவியானவரின் நிறைவை பெற்றுக்கொள்ள வழிநடத்தும்போது, நான் பரிசுத்த ஆவியின் நிறைவை முதன்முறையாக பெற்று பரவசமடைந்தேன். மட்டுமல்ல, ஒரு குளிர்ந்த காற்று என்மேல் வீசுவதை போன்ற அநுபவத்தை பெற்று, அதோடுகூட அந்நிய பாஷையில் பேசுகிற ஓர் உன்னத அனுபவத்தையும் பெற்றேன். அன்றிலிருந்து என் வாழ்வு மாறியது. ‘இயேசு அழைக்கிறார்’ ராஞ்சி ஜெபகோபுரத்தில் ஜெபவீரராக தன்னார்வ தொண்டு செய்யவும், அதை தொடர்ந்து எஸ்தர் ஜெபக்குழு ஆரம்பிக்கவும் மற்றும் ‘இயேசு அழைக்கிறார்’ ஸ்தானாபதியாக ஊழியம் செய்யவும் கிருபை செய்து வருகிறார். என்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் காருண்யாவில் படிக்கும் சிலாக்கியம் கிடைத்தது. நல்லதொரு வீடு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம். இந்த நிலையில் பெதஸ்தா சென்று ஜெபித்தேன். அதே நாளில் என் கணவருக்கு அலுவலகத்திலிருந்தே ஊழியர்களுக்கான குடியிருப்பு இல்லத்தை ஆண்டவர் ஆயத்தம் பண்ணினார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, ராஞ்சி பெண்கள் கல்லூரியில் பணிபுரிகிற எனக்கு, சிறந்த ஆசிரியர் விருதும், துறை தலைவராகவும், பொறுப்பாளராகவும் (Dean) பதவி உயர்வு கிடைத்தது. என்னுடைய கல்லூரியிலுள்ள பிள்ளைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஜெபிக்கும் வாய்ப்பை கர்த்தர் எனக்கு கொடுத்திருக்கிறார். இப்படியாக உலக மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் சந்தோஷத்தாலும் கர்த்தர் எங்கள் குடும்பத்தை அளவில்லாமல் நிரப்பியிருக்கிறார். ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.”
பிரியமானவர்களே, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33). தேவனுக்கு முதலிடம் கொடுக்கும் வரை கீழ்ப்படிதலின் முழு பலனையும் நீங்கள் ஒருபோதும் அடையமுடியாது. “ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு” (நீதிமொழிகள் 8:18) என்று ஆண்டவர் கூறுகிறார். இந்த வார்த்தையின்படியே உங்களை அவர் முடிசூட்டுவார். கர்த்தர் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் குடும்பத்தையும் ஆளுகிறாரா என்பதை சற்று ஆராய்ந்து பாருங்கள். எல்லா ஆசீர்வாதங்களும் அவருக்குள் அடங்கியிருக்கிறது. ஆகவே, அவரிடத்தில் வாருங்கள்.  உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும்படி அவர் உங்களை ஆசீர்வதித்து கனப்படுத்துவார்.
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

இன்று என் வாழ்வை நீர் பொறுப்பெடுத்துக்கொள்ளும். நான் உம்மை உண்மையாக தேடும்படிக்கு கிருபை செய்தருளும். என் குடும்பத்தினரையும் உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன். என்றும் அழியாத உமது வார்த்தைகளை நானும் எனது குடும்பத்தினரும் ஒவ்வொரு நாளும் தியானிக்க கிருபை செய்தருளும். உமது பாதையில் எங்களை வழிநடத்தும். என் வாழ்வில் எல்லா காரியங்களிலும் உமக்கு முதலிடம் கொடுக்கும்படியான ஞானத்தை எனக்குத் தந்தருளும். நன்மை பயக்கும் காரியங்களை கற்றுக்கொள்ள இரக்கம் பாராட்டும். என் குடும்பத்தை ஆசீர்வதித்து, நாங்கள் மற்றவருக்கு ஆசீர்வாதமாயிருக்க பயன்படுத்தும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000