Loading...
Stella dhinakaran

தேவனால் கூடும்!

Sis. Stella Dhinakaran
17 Jan
மனிதர்களாகிய நாம் சில நேரங்களில் நம் திறன்களைக் கட்டுப்படுத்த முனைகிறோம். ஆகவே, நாம் வாழ்வில் எதிர்பாராத காரியங்களை எதிர்கொள்ளும்போது, அவற்றைக் கடக்க முயற்சிக்காமல், அவற்றை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஏற்றுக்கொள்ள முடிவு செய்கிறோம். இன்றைக்கு தேவனுடைய வாக்குத்தத்தம் ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” (மாற்கு 16:17-18).  ஆம்! உங்கள் ஆசீர்வாதங்களைத் திருடவோ அல்லது அழிக்கவோ சாத்தானுக்கு வல்லமையில்லை.  நீங்கள் பிழைக்கும்படி தேவனிடத்திலிருந்து விசுவாசமாய் அற்புதங்களை எதிர்பாருங்கள். அதிசயங்களை செய்கிற ஆண்டவரிடமிருந்து அற்புத சுகம் பெற்ற சகோதரி விமலா தன் சாட்சியை உங்களிடத்தில் பகிர்ந்துகொள்கிறார்:

“நான் ஜுரத்தினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். மருத்துவர்கள் என்னை பரிசோதித்துவிட்டு, மருந்து கொடுத்து அனுப்பினார்கள். ஆனால், அடுத்த நாள் என் இரண்டு கால்களும் வீங்கி, நடக்க முடியாமல் போய்விட்டது. அதுமாத்திரமல்ல, சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். மீண்டும் அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, “என்னுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போய்விட்டது என்று சொல்லி, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். நாளடைவில், என்னுடைய நிலைமை மிகவும் மோசமாகி, நான் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டேன். கடைசியில், மருத்துவர்கள் என்னை பரிசோதித்துவிட்டு, “இனிமேல் இவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பேயில்லை” என்று சொல்லி, என் பிள்ளைகளை அழைத்து, “உங்கள் தாயார் பிழைக்கமாட்டார்கள். இவர்களை இங்கிருந்து கொண்டு சென்று, அரசாங்க மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள். உங்களுக்கு பணச்செலவும் குறையும்” என்று சொன்னார்கள். உடனே என் பிள்ளைகள் என்னை அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கும் மருத்துவர்கள் என்னை சோதித்துப் பார்த்துவிட்டு, “இவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை” என்று கூறி, என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். மிகுந்த வேதனையில் நான் வீட்டில் படுத்திருந்தபோது, ஒரு நாள் “இயேசு அழைக்கிறார்” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சகோதரி ஸ்டெல்லா தினகரன் அவர்கள், வியாதியுள்ளவர்களுக்காக ஊக்கமாக ஜெபித்தபோது, நானும் அவர்களோடு இணைந்து கதறி ஜெபித்தேன். என்ன அற்புதம்! ஜெபம் முடிந்ததும் சிறுநீர் சீராகப்போக ஆரம்பித்தது. அதுமாத்திரமல்ல, காலிலுள்ள வீக்கமும் மறைந்தது. நான் நடக்க ஆரம்பித்துவிட்டேன். தற்போது சுகமாய் இருக்கிறேன். வேலைக்கும் செல்கிறேன். அற்புத சுகம் தந்த ஆண்டவருக்கே மகிமை!”
நம்முடைய தேவன் எவ்வளவு நல்லவர்! பிரியமானவர்களே, இன்றைக்கும் மனித ஞானத்திலான சாத்தியகூறுகளை கேட்டு மனமுடைந்து காணப்படுவீர்களென்றால், “தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை” (லூக்கா 1:37) என்பதை நினைவிற்கொள்ளுங்கள். வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மன்னாவையும், காடைகளையும் கொடுத்தவர், கற்பாறையிலிருந்து தண்ணீரை சுரக்கப்பண்ணியவர், செங்கடலை இரண்டாக பிளந்த ஆண்டவர், உங்கள் அற்புதத்திற்கான வாசலை திறக்க உங்கள் முன்னே கடந்து செல்கிறார். அவருடைய அற்புத படைப்பாகிய நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள். கர்த்தரையே இறுக பற்றிக்கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் பெற்ற அற்புதத்திற்காக, அவருக்கு துதி செலுத்தும்படிக்கு, உங்களை துதியின் பாடல்களால் நிரப்புவார்.
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,
 
நான் எல்லாவற்றையும் முயன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என் ஏமாற்றங்கள் அனைத்தையும் உமது கிருபையின் கரத்தில் அர்ப்பணிக்கிறேன். நீர் அதிசயம் செய்கிற தேவன். என் குடும்பத்திலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட உமது அற்புதத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உம்மால் எல்லாம் கூடுமென்பதை நான் விசுவாசிக்கிறேன். உமது நாமம் மகிமையடையும்படி, உமது வல்லமையை விடுவித்து என்னை மகிழ்விக்க வேண்டுமென்று உம் பாதத்தில் மன்றாடுகிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000