Loading...
Stella dhinakaran

ஜெபத்தைக் கேட்கிற தேவன்!

Sis. Stella Dhinakaran
03 Dec
நம்மில் பலர், தேவைகளினிமித்தம், எதிர்பார்ப்புகளினிமித்தம், “யார் இந்த நிலைமையில் எனக்கு உதவி செய்வார்கள்? என் காரியத்தில் மாற்றம் ஏற்பட வழி உண்டா? நியாய ஸ்தலத்தில் எனக்கு நியாயம் கிடைக்குமா? சரீரத்தில் எனக்கு விடுதலை கிடைக்குமா? என் தேவைகள் இன்று நிறைவேற்றப்படுமா?” என்றெல்லாம் பல்வேறு விதங்களில் மனதில் அலசடிப்படுகின்றனர். ஆனால், நம் அன்பின் ஆண்டவரோ நம் அலைச்சல்களையெல்லாம் எண்ணியிருக்கிறார். நம் கண்ணீரையெல்லாம் அவருடைய கணக்கில் வைத்திருக்கிறார் (சங்கீதம் 56:8).

கீழ்ப்படியாதவனும், தன் மனம்போல் நடக்க விரும்பியவனுமாக இருந்த தன் வாலிப மகனைக் குறித்து ஒரு தாய் அதிகம் கவலைப்பட்டாள். ஒருநாள் அவன் தன்னை பெற்ற தாயிடமே கொஞ்சமும் மரியாதையில்லாமல், அவள் மனதை வேதனைப்படுத்தும்படியாய் பல காரியங்களை பேசிவிட்டு, வீட்டை விட்டு ஓடிவிட்டான். புருஷனும் குடும்ப காரியங்களை சற்றும் கவனிக்காத கல்மனம் படைத்த ஒரு மனிதன். இந்த நிலையில் இந்த தாய் என்ன செய்வது என்று அறியாமல், கண்ணீர்விட்டு அழுதாள். அந்த சமயத்தில்தான் வேதாகமத்தை வாசிக்க அதை திறந்தபொழுது அவள் கண்களில் மேற்கண்ட வேத வசனம் பளிச்சிட்டது. அதன்படியே ஒரு புது விசுவாசத்துடன், “ஆண்டவரே, நீர் மெய்யான தேவனாய், உயிரோடிருக்கிறவராக, என் காரியங்களையெல்லாம் அறிந்திருக்கிறீர்! என் மகனுடைய கடின இருதயத்தையும், என் கணவருடைய மாறுபட்ட இருதயத்தையும் மாற்ற உம்மால் கூடும் என்றும், நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும் (சங்கீதம் 33:9) என்றும் விசுவாசிக்கிறேன். உம்மை உறுதியாய் விசுவாசித்து பற்றிக்கொள்கிற என் வாழ்வில் நீர் நிச்சயம் அற்புதம் செய்வீர் என்று நம்பி உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் பெரிய காரியங்களை செய்கிற தேவன் (யோபு 5:9; 9:10). இன்று உம்முடைய கரத்திலிருந்து நான் ஒரு அற்புதத்தை எதிர்பார்க்கிறேன்” என்று பிரார்த்தனை செய்தாள். உடனடியாக அவள் மனதை உலகம் தரக்கூடாத ஒரு பெரிய சமாதானம் நிரப்பியது. தன் கவலைகளை மறந்தாள், கர்த்தரை விசுவாசித்தாள். என்ன ஆச்சரியம்! ஒருசில நாட்களுக்குள்ளாக மகன் திரும்பி வந்தான். தாயின் அன்பை உணர்ந்தான். ஆண்டவருடைய மகனாக, அவருடைய ஊழியனாக மாறி, தாயின் மனதை குளிரச்செய்தான்.
என் அன்பு சகோதர, சகோதரிகளே, இன்று நீங்களும் இதேவண்ணமாக உங்கள் கவலைகளை எல்லாம் ஆண்டவரிடத்தில் சமர்ப்பித்துவிடுங்கள். உங்கள் ஜெபத்தைக் கேட்கிற ஆண்டவர் உங்கள் வாழ்விலும் அற்புதம் செய்வார். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் ஒருநாளும் வீண்போகாது. “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத்தேயு 21:22). ஆகவே, அவரை விசுவாசித்து, அவர் தருகிற பலனால் உங்களை நிரப்பிக்கொள்ளுங்கள். தேவன் அதினதின் காலத்தில் உங்களுக்காக எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்து முடிப்பார். 
Prayer:
என்னை நேசிக்கும் தேவனே, 

இவ்வுலக காரியங்கள் என் உள்ளத்தில்  வேதனையையும், சஞ்சலத்தையும் உண்டுபண்ணுகிறது. ஆனால் நான் என் பாரங்களை அல்ல, கவலைகளை அல்ல, உம்மையே நம்புகிறேன். உம்மையே உறுதியாய் பற்றிக்கொள்கிறேன். என்னுடைய பாரத்திலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் இன்று நீர் நிச்சயமாக எனக்கு விடுதலை தருவீர் என்று நம்பி, விசுவாசித்து உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 

இயேசு இரட்சகரின் நல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

044 - 45 33 999 000 / 044 - 33 999 000