Loading...
Stella dhinakaran

தேவசித்தம் செய்யுங்கள்!

Sis. Stella Dhinakaran
21 Jan
“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2). தேவசித்தத்தை அறிந்து அதன்படி செய்யும்போது, அது ஞானத்தையும், செழிப்பான வாழ்வையும், சமாதானத்தையும், அன்பையும், சந்தோஷத்தையும்  கொடுக்கிறது. வேதத்தில் பழைய ஏற்பாடு புத்தகத்தில் யோனாவைக் குறித்து நாம் வாசிக்கிறோம். யோனா தேவ மனிதனும், தீர்க்கதரிசியுமாவார். கர்த்தர் அவருக்கு அளித்த கட்டளையை உதறித்தள்ளிவிட்டபொழுது, பாடுகள் நிறைந்த பாதைக்குள் தள்ளப்பட்டார். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாததே இந்த பாடுகளுக்கு காரணம் என்பதை அறிந்து கொண்டவர், தன் வழியை செம்மைப்படுத்திக்கொண்டு, கர்த்தருடைய தெய்வீக சித்ததை நிறைவேற்றினார். 

கர்த்தருக்கு தன் வாழ்வை அர்ப்பணித்து, அவர் விரும்புகிற நீதியின் வழிகளிலே நடந்தான் ஒரு வாலிபன். பெற்றோர் அவனுக்காக உபவாசத்துடன் ஜெபித்து, ஒரு அருமையான பக்தியுள்ள பெண்ணை அவனுக்கு வாழ்க்கைத் துணையாகத் தெரிந்தெடுத்து, அவனிடம் அதைப்பற்றி கூறினார்கள். ஆனால் அவனோ, ஒரு பெண்ணை தான் விரும்புவதாகவும், அவளே தனக்கு ஏற்றவளாய் இருப்பாள் எனவும் பெற்றோரிடம் கூறினான். அவன் தன் வழியில் உறுதியாய் இருந்தபடியால், பெற்றோர் பேசாமல் அதற்கு ஒத்துக்கொண்டார்கள். திருமணமும் முடிந்தது. ஒரு மாதம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். அதன்பிறகு, அந்தப் பெண், அவனுடைய ஊழியத்திலே பங்குபெற மனமற்றவளாய், தன் வழியிலேயே செல்வதையே விரும்பினாள். “என்னை என் வழியே விட்டுவிடுங்கள்; நீங்கள் எப்படி வேண்டுமானாலும் போங்கள்” என்று பிரித்துப் பேசிய அவளுடைய வார்த்தைகளும், அவளுடைய செயலும் அவனுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தன. அதுமட்டுமின்றி, அவனிடமிருந்து விடுதலையும் வாங்கிக்கொண்டு, தான் விரும்பிய வேறு மனிதனை திருமணமும் செய்துகொண்டாள். இதினிமித்தம் மிகுந்த துக்கத்தோடே அவன் காணப்பட்டபோது, பெற்றோர் பார்த்த அந்த பெண்ணையே அவன் மணந்துகொள்ளவும், கர்த்தருக்குள் சந்தோஷமாக வாழவும், தேவன் அவன் பாதையை செம்மைப்படுத்தினார்.
இன்று உங்கள் முடிவுகள் அனைத்தும் தேவனுடைய விருப்பத்திற்கு ஏற்ப உள்ளதா என்பதைப் சோதித்துப் பாருங்கள். “...நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” (எபேசியர் 5:17) என்று வேதவார்த்தை உங்களை எச்சரிக்கிறது. கர்த்தரையே சார்ந்துகொள்ளுங்கள். “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்” (சங்கீதம் 37:23). ஆகவே உங்கள் வழிகள் தேவனுக்கு பிரியமாயிருக்கும்படி, உங்கள் இருதயத்தை அவர் சித்தத்தால் நிரப்புங்கள். உங்கள் தேவைகள் அனைத்தையும் அவரே பூர்த்தி செய்வார். எல்லாவற்றைப்பார்க்கிலும், விழிப்புடன் ஜெபத்திலே தரித்திருங்கள். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி, அவர் தருகிற ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தவறான வழிகளில் சென்றிருந்தாலும், அவரிடத்தில் திரும்பி வாருங்கள். அவர் உங்களைத் கட்டியணைத்து உன்னதத்திற்கு உயர்த்துவார்.
Prayer:
அன்புள்ள பரம பிதாவே,

என் வாழ்க்கையில் உமது நோக்கத்திற்கு எதிரான பாதைகளைத் நான் தேர்ந்தெடுத்தமைக்காக என்னை மன்னித்தருளும். உங்களுக்கு பிரியமான நியாயமான வழிகளைப் பின்பற்றவும், உமக்கு சித்தமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும் எனக்கு கிருபை அருளும். எப்பொழுதும் உமது விருப்பத்தை நிறைவேற்றவும், உமக்கு முதலிடம் கொடுக்கவும் எனக்கு உதவும். உம்முடைய ராஜ்யம் இந்த பூமியில் வரட்டும். உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல இந்த பூமியிலும் செய்யப்படுவதாக. 

இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000