Loading...
DGS Dhinakaran

ஐசுவரிய சம்பன்னரான இயேசு!

Bro. D.G.S Dhinakaran
16 May
அன்பிற்குரியவர்களே, விண்ணுலகில் மிகுந்த ஐசுவரியம் உடையவராக இருந்த அருள்நாதர் இயேசு, பாவ வாழ்க்கையினால் நாம் இழந்துபோன நன்மைகளையெல்லாம் நமக்குத் தந்து, நம்மை ஐசுவரியவான்களாக மாற்றுவதற்காகவே இப்பூவுலகில் இறங்கி வந்தார். அவர் நமக்காக மிகுந்த தரித்திரம் உடையவராக மாறினார். அவருக்கு தலை சாய்க்க இடமில்லை (லூக்கா 9:58). உண்ண உணவோ, உடுக்க சரியான உடையோ இல்லை. அவர் உலகத்தில் சுற்றி திரிந்து ஊழியம் செய்த நாட்களில், அவருடைய ஜெபத்தின் வல்லமையினால்  குணமடைந்த சில பெண்கள் தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டு வந்தார்கள். அவர்களே அவருக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்து உதவினார்கள் (லூக்கா 8:1-3). அருள்நாதர் இயேசு சிலுவையில் தொங்கியபொழுதும், அவரது வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அவருடைய அங்கியை சீட்டுப்போட்டு எடுத்துக்கொண்டார்கள் (யோவன் 19:23,24). “குடியனும், போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்” (நீதிமொழிகள் 23:21) என்று வேதம் கூறுகிறதுபோல, “இந்த மக்களுடைய தரித்திரத்தை நான் அடைந்து அவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தட்டும், அவர்கள் இழந்துபோன நன்மைகளை, ஐசுவரியத்தை, செல்வத்தை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கட்டும்” என்றே அவர் நம்மேல் பரிதாபம் கொண்டு மிகுந்த தரித்திரம், வறுமையினூடே கடந்து சென்றார்.

பக்தன் ஒருவனுக்கு தேவன் தரிசனம் ஒன்றின் வாயிலாக மிகப்பெரிய கிறிஸ்தவ பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும்படி பணித்தார். தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிவதே தம் வாழ்வின் பாக்கியமெனக் கருதும் அந்த எளிய சுவிசேஷகர் அந்தத் திட்டத்திற்காக எவ்வளவு செலவாகுமென கணக்குப் பார்த்தபொழுது, அந்த மிகப் பெரியத் தொகையைக் கண்டு ஒரு கணம் திகைத்தார். எனினும், அதை பொதுமக்களுக்கு அறிவித்து, அந்தத் தொகையை நன்கொடையாகப் பெற அவர் முயற்சித்தபொழுது, பலர் அவரிடம், “எங்கிருந்து இந்தத் தொகையை நீர் பெற முடியும்?” என்றெல்லாம் கூறி, அவர் இருதயத்தை சோர்வடைய செய்தனர். ஆனால், அந்த ஊழியர் கூறிய பதில் இதுதான்: “அன்பு நண்பர்களே, எந்த மனிதனையும் நம்பி நான் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. என் கண்கள் அண்டசராசரங்களையும் படைத்த என் பரலோக தந்தையின் மீதே பதித்திருக்கிறது, அவர் ஐசுவரிய சம்பன்னர், மிகுந்த ஐசுவரியமுள்ளவர், “பூமியும் அதின் நிறைவும்,...அவருடையது” (சங்கீதம் 24:1). மோட்ச லோகம் முழுவதையும் அவர் பொன் வீதிகளினால் அலங்கரித்துள்ளார் (வெளிப்படுத்தல் 21:21). அவர் விருப்பத்தின்படி, நான் நிர்மாணிக்கப்போகும் இந்தத் திட்டத்திற்கான செலவைக் கொடுக்க அவரால் ஆகும் என நான் உறுதியாய் நம்புகிறேன்” என்றார். அவர் விசுவாசத்தின்படியே, தேவன் அவரை கௌரவித்தார். அவர் விரும்பியபடியே (எபேசியர் 3:20) அந்தத் திட்டத்தை அவர் நிறைவேற்றி முடிக்க அருள்புரிந்தார்.
எனக்கு அன்பானவர்களே, வறுமையில், இல்லாமையில், வேதனையில்  தவிக்கிறீர்களா? ஐசுவரிய சம்பன்னரான இயேசு இன்றைக்கும் உயிரோடிருக்கிறார். அவர் நம்மோடுகூட இருக்கிறார். அவர் இம்மண்ணில் உதித்ததின் நோக்கம் எத்தனை அருமையானது. எனவே, அவர் இப்பூவுலகில் நமக்கு அன்புடன் கொண்டு வந்த ஈவாகிய, “பாவ மன்னிப்பை, பாவத்தின்மேல் வெற்றி அருளும் பரிசுத்த ஆவியின் நிறைவை (பற்றியெரியும் ஆன்மீக அக்கினையை), பரிபூரண ஆசீர்வாதங்களை இயேசுவிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்வோம். அவர் உங்கள் குறைவுகள் யாவையும் நிறைவாக்குவார். கர்த்தர் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. உங்கள் இல்லங்களில் என்றும் இன்பம் பொங்கி வழிந்தோடச் செய்வாராக. 
Prayer:
சர்வ வல்லமையுள்ள தேவனே,

நீர் ஐசுவரியமுடையவராயிருந்தும் எங்கள் நிமித்தம் இந்த பூமிக்கு தரித்திரராய் இறங்கி வந்தீரே உமக்கு நன்றி. இல்லாமையை, வறுமையை நினைத்து நான் வேதனை அடையாதபடி, ஐசுவரியமுள்ள தேவனை தெய்வமாக கொண்டிருப்பதை நினைத்து உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் குiவுகள் யாவையும் நீக்கி, நிறைவாய் என்னை ஆசீர்வதியும். நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்க கிருபை செய்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000