Loading...

தேவனுடைய தெரிந்துகொள்ளுதல்!

Shilpa Dhinakaran
04 Dec
படைப்பாளரான தேவனால் நாம் தேர்ந்தெடுக்கப்படுவது எத்தனை பெரிய அற்புதம்! அவர் நம் ஒவ்வொருவரையும் தமது திட்டத்தை நிறைவேற்றும்படி தேர்ந்தெடுத்துள்ளார். நீங்கள் கனிகொடுக்கும்படிக்கு அவர் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார். தேவனை மகிமைப்படுத்தும்படி அவர் நமக்கு பல்வேறு திறமைகளை அருளியிருக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஒரு வித்தியாசமான பணி உள்ளது. அதை திறன்பட செய்யும்படிக்கு பெலன் அருளுகிற தேவனுக்கு நாம் நன்றி செலுத்துவோம். ஆம், அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான மற்றும் சிறப்புமிக்க தாலந்துகளை கொடுத்திருக்கிறார். 

அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த ஜெமி கிரேஸ் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான நற்செய்தி பாடகி இருக்கின்றாள். அவள் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள்; அவளின் வீடு எப்போதும் இசையால் நிரம்பியிருக்கும். ஜெமி சிறுவயதிலிருந்தே பல்வேறு இசைக் கருவிகள் வாசிக்க கற்றுக்கொண்டாள். மேலும், தேவனை மகிமைப்படுத்தக்கூடிய பாடல்களையே பாடினார். ஜெமிக்கு 11 வயதானபோது, டூரெட் சிண்ட்ரோம் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது அவளுடைய கைகளையும், முழு உடலையும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவளுடைய உடல் இயக்கங்களை பாதித்தது. அந்த தருணத்திலிருந்து, வாத்தியங்களை வாசிப்பதும், தேவனை துதிப்பதும் அவளுக்கு மிகவும் கடினமாக மாறியது. இது ஜெமியின் மனதை உடைத்ததோடு, இந்த குறிப்பிட்ட நோய்க்கு எந்தவொரு சிகிச்சையும் இல்லை என்பதை அறிந்த அவள், ஆண்டவர் உண்மையிலேயே இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், நொடிப்பொழுது அவிசுவாசம் தோன்றினாலும்,  மறுநிமிடம் ஜெமி தேவனை மகிமைப்படுத்தும்படி தனது தாலந்துகளை உபயோகிப்பதை நிறுத்தவில்லை. அவளுக்கு கஷ்டங்கள் இருந்தபோதிலும், அவள் தேவனை துதித்துப்பாடுவதையும், அவரை தேடுவதையும் குறைத்துக் கொள்ளவில்லை. அவள் கனிகொடுத்தாள். பலருக்கு ஆசீர்வாதமாக இருந்தாள். தேவன் அவளுடைய முயற்சிகளை ஆசீர்வதித்து, அவளை உன்னதத்திற்கு உயர்த்தினார். 
அதுபோலவே, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார். “உங்கள் திறமைகள் தேவன் உங்களுக்கு அளித்த பரிசு; நீங்கள் அதை திறன்பட செய்வதே, நீங்கள் தேவனுக்கு அளிக்கும் பரிசு.” தேவனை மகிமைப்படுத்தும்படி, உங்கள் திறமைகளைப் பயன்படுத்தும்போது அவர் உங்களுக்கு பலன் அளிப்பார். ஆம், தொடக்கத்தில் இது மிகவும் கடினமாயிருக்கலாம். ஆனால், கர்த்தர் உங்களை பெலப்படுத்தி, நீங்கள் சிறந்ததை செய்யும்படி உங்களுக்கு உதவுவார். “ஒருவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவான் 15:5). பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உங்களை அழைத்து வந்த தேவன் உங்களை பலப்படுத்தி உங்களுக்கு சகாயம்பண்ணுவார். நீதியின் வலது கரத்தினால் உங்களை தாங்கி ஆசீர்வதிப்பார் (ஏசாயா 41:9,10).
Prayer:
கர்த்தராகிய இயேசுவே,

அற்புதமான  திறமைகளை தந்து என்னை ஆசீர்வதித்ததற்காக உமக்கு நன்றி. நான் கனி தரும் மரமாக இருக்க எனக்கு உதவும். உம்மை மகிமைப்படுத்தும்படி இந்த திறன்களை உபயோகிக்க கிருபை செய்தருளும். என்னால் முடிந்த வரை முழு இருதயத்தோடு உம்மை துதிக்கவும், ஆராதிக்கவும் உதவும். நீர் எனக்கு கொடுத்த தாலந்துகள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்க அருள்புரியும். என்னை இந்தளவாய் ஆசீர்வதித்தமைக்கு நன்றி. 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 
 

For Prayer Help (24x7) - 044 45 999 000