Loading...
DGS Dhinakaran

காயங்களை ஆற்றுகிறவர்!

Bro. D.G.S Dhinakaran
19 Dec
நம் அன்றாட வாழ்வில் நம்மை குணப்படுத்துவதும், மீட்டெடுப்பதும் தேவனுடைய வார்த்தை மாத்திரமே. அவருடைய வார்த்தை தைலமாயிருக்கிறது.  ஆம், “நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 30:17). இன்றைக்கு உங்கள் தேவை எதுவாயினும், உங்களை மீட்டெடுக்கிற கர்த்தரையே நோக்கிப் பாருங்கள்! 

ஆண்டவர் உருக்கமும் இரக்கமும் நிறைந்தவராய் இருக்கிறார். யோபுவின் சரிதை மனதை உருக்கக்கூடியது. அவன் மிகுந்த துக்கத்தோடும், அழுகையின் பள்ளத்தாக்கினூடேயும் கடந்து சென்றவன். அவன், அந்த கடின சூழ்நிலையிலும் உத்தமனாய் இருந்தான் என்று வேதம் கூறுகிறது (யோபு 1:1). அநேக வேளைகளில், “நீதிமான் ஏன் துன்பப்படுகிறான்?” என்று கேட்கிறோம். அந்த கேள்விக்கு யோபுவின் வாழ்க்கையே பதிலாக அமைகிறது.

1989 ஆம் ஆண்டு, ஈராக் தேசத்தின் பாக்தாத் நகருக்கு நான் சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள், யோபுவின் சரீரம் அடக்கம்பண்ணப்பட்ட ஒரு சிறு கிராமத்திற்கு என்னை அழைத்து சென்றனர். அங்கே அவருடைய கல்லறையின் மீது மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியின் அருகே இரண்டு கிணறுகள் இருந்தன. ஜனங்கள் அங்கிருந்து தண்ணீர் மொண்டு மிகுந்த பக்தியோடும், மரியாதையோடும் தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றதை நான் பார்த்தேன். அங்கிருந்த ஒரு பெண் என்னிடம், “ஐயா, இது புனிதராகிய யோபு வாழ்ந்த இடம். இங்குள்ள மக்கள், அவரை ‘புனித அயூப்’ என்றழைக்கிறார்கள். தீர்க்க முடியாத கொடிய தோல் வியாதியிலிருந்து இறைவன் அவரை குணமாக்கினார். ஆகவே, வியாதியாய் இருக்கிறவர்கள்மீது இந்த தண்ணீரைப் பூசினால் அவர்கள் குணமாவார்கள் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இதை எடுத்துச் செல்கிறோம்” என்றாள். 
ஆம், யோபுவின் சரிதை, கட்டுக்கதையல்ல, உண்மையாக நடந்தது. ஆண்டவர் உங்களையும் ஆசீர்வதித்து, உங்களது கண்ணீரையும் துடைத்து, உங்கள் வேண்டுதல்களையும் அருளிச்செய்வார் (சங்கீதம் 37:4). இந்த வாக்குறுதியை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். “முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகாய் 2:9). ஆகவே, உங்கள் இழப்புகளையும் நஷ்டங்களையும் குறித்து கவலைப்படாதிருங்கள்! மீண்டுமாக உங்களை கட்டி எழுப்புவதற்கு தேவன் ஆவலாய் காத்திருக்கிறார். உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தையின்மீது நிலைநிறுத்தி, அளவில்லாத ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

என் நஷ்டங்களும், கஷ்டங்களும் உமக்கு தெரியுமே. இந்த உபத்திரவத்திலிருந்து நான் விடுதலையாவதற்கு வழிதெரியாமல் தடுமாறுகிறேன். என்னை அரவணைத்து ஆறுதல் சொல்லுவதற்கும், உதவுவதற்கும் ஒருவருமில்லை. ஆண்டவரே நீரே என் ஆறுதல். நீரே என் வழிகாட்டி. என் காயங்களை கட்டி என்னை குணமாக்கும். இப்பொழுதும் உமது வாக்குத்தத்தங்களை நான் உறுதியாய் பற்றிக்கொள்கிறேன். என்னுடைய ஒரே மூலதனம் உமது வார்த்தைகள் மாத்திரமே. என் முந்தைய வாழ்க்கையை பார்க்கிலும், பிந்தைய வாழ்க்கை உமக்கு மகிமையாக விளங்கட்டும். உமது அருளையும், தயவையும், கருணையையும் என் வாழ்வில் அளவில்லாமல் ஊற்றியருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000