Loading...
Paul Dhinakaran

மகிமையான வாழ்வு!

Dr. Paul Dhinakaran
18 Aug
பல வருடங்களுக்கு முன்பு 1962ம் ஆண்டு என் தகப்பனாருக்கு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு தரிசனம் கொடுத்தார். அப்பொழுது ஒரு தேவ மனிதன் என் தகப்பனாரை மிகவும் உற்சாகப்படுத்தி வந்தார். அவர் தன் மனைவியுடன்  என் தகப்பனாரை சந்தித்து பரிசுத்த ஆவியின் வரங்களைக் குறித்தும், தேவபாதையில் நடப்பதைக்குறித்தும், தேவ சத்தத்தைக் கேட்பதைக் குறித்தும் நீண்ட நேரம் பேசி ஜெபித்துவிட்டு செல்வார். 1962ம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் குடும்ப ஜெபவேளையில், இயேசு என் தகப்பனாருக்கு தரிசனமாகி பரிசுத்த ஆவியினால் அவரை நிரப்பினார். இந்த நிகழ்வுக்கு பின்பு, அந்த தேவமனிதன்  என் தகப்பனாரிடம் “பிரதர், உங்களுக்கு எந்த நேரத்தில் ஜெப உதவி தேவைப்பட்டாலும், என் வீட்டிற்கு வாருங்கள் அல்லது என்னை அழையுங்கள். நான் உங்களுக்காக ஜெபிக்க காத்திருக்கிறேன்” என்றார்.  என் தகப்பனாரும் அதை முழுமையாக நம்பி, எந்தக் காரியமானாலும் அவரிடத்தில் ஓடுவார், அவரையே சார்ந்திருந்தார். 

“7 வருடங்களுக்கு பின், என் தகப்பனாரின் நுரையீரல் முற்றிலுமாக செயலிழந்த நிலையில், நாங்கள் அனைவரும் இந்த தேவமனிதனுடைய உதவியை நாடினோம். ஆனால், ஆச்சரியவிதமாய் அவருடைய நடவடிக்கைகள், வார்த்தைகள் அனைத்தும் மாறுபட்டு காணப்பட்டது. அவர் என் தகப்பனாரை வசைமாரி பொழிந்தார். நீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் பிசாசை அனுமதித்துவிட்டீர்கள், உங்கள் பாவப்பழக்கமே என் ஜெபத்திற்கான ஆசீர்வாதத்தை வரவிடாமல் தடுக்கிறது” என்றார். அந்த நிமிடமே இயேசு எங்கள் அருகில் நின்று, “என் மகனே, நீ என்னை மட்டும் நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எந்த மனிதனும் உங்களுக்கு உதவ முடியாது. என்னை சார்ந்திருந்தால் மட்டுமே நீங்கள் மிகுந்த கனிகளை கொடுக்கிறவர்களாய் மாற முடியும் என்றார்.” என் தந்தையும், தாயும் அப்போதிருந்து தேவனுடைய பக்கமாக திரும்பினர். தேவன் அவர்களை அற்புதமாக வழிநடத்தியதை அவர்கள் உணர்ந்து அனுபவித்தார்கள். ஆம், அதுமுதல் என் தந்தையும் தாயும் மெய்யான திராட்சைச்செடியாகிய இயேசுவை மட்டுமே சார்ந்திருந்தார்கள். தேவராஜ்யத்திற்காக மிகுந்த கனிகளை தரத்தொடங்கினார்கள். ஊழியம் சர்வதேச அளவில் வளர்ந்தது. 
பிரியமானவர்களே, மனுஷரை அல்ல நீங்கள் இயேசுவை நம்பி அவரையே சார்ந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நானே மெய்யான திராட்சச்செடி (யோவான் 15:1) “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்” (யோவான் 15:1) என்று இயேசு கூறுகிறார். கிறிஸ்துவுக்குள் நீங்கள் நிலைத்திருக்கும்போது நீங்கள் அநேகரை தேவராஜ்ஜியத்திற்குள் கொண்டுவர முடியும். அதன் மூலம் இவ்வுலகத்திற்கும், உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள்.  அவர் உங்களுடைய விடாய்த்த ஆத்துமாவைப் புதுப்பித்து உங்களை பலப்படுத்துவார். நீங்கள் இந்த பூமியில் உயர்குல திராட்சைக் கொடியாக படர்வீர்கள். 
Prayer:
என்னை நேசிக்கும் பரலோகத் தகப்பனே,

நான் உம்மைவிட்டு மனிதர்கள்மீது நம்பிக்கை வைத்ததற்காக வருந்துகிறேன். இன்று, இந்த பூமியில் வளமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்காக நீர் கொடுத்துள்ள வாக்குத்தத்தங்களையே நான் முற்றிலுமாக சார்ந்து கொள்கிறேன். எல்லா நேரத்திலும் உம்மில் நிலைத்திருக்க நீர் எனக்கு அருள்தாரும். உம்முடைய அன்பிலிருந்து எந்த சூழ்நிலையும் என்னை பிரிக்காதபடி காத்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000