Loading...
Dr. Paul Dhinakaran

கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்!

Dr. Paul Dhinakaran
05 Jul
இந்நாட்களில் சந்தைகளில் தங்கள் தயாரிப்புகளை விற்க ஒரு புதிய உத்தியை கையாளுகிறார்கள். அது ‘ஒன்றை வாங்கினால், மற்றொன்று இலவசம்’ என்ற விளம்பரங்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களை பார்க்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால், விளம்பரத்தின் அடிப்பகுதியில், ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டது’ என்றொரு வாசகத்தையும் நாம் காணலாம். ஆம் பிரியமானவர்களே, இவ்வுலகில் எதுவும் இலவசமில்லை. ஆனால், நம்முடைய கர்த்தரோ, நமக்கு பல ஆசீர்வாதங்களை இலவசமாக வழங்கியுள்ளார். அதை நாம் மற்றவர்களுக்கும் இலவசமாக கொடுக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (நீதிமொழிகள் 11:25). கொடுப்பது என்பது நிதியை மட்டும் குறிப்பதல்ல, கொடுப்பது எந்த வடிவத்திலும் இருக்கலாம். உங்கள் நேரத்தை அன்புக்குரியவர்களுக்கு கொடுப்பது அல்லது ஊக்கம் தேவைப்படும் நபர்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பேசலாம். சில நேரங்களில் மற்றவர் நமக்கு என்ன செய்தார்கள் என்று எண்ணி அதற்கேற்ப திருப்பித்தருகிறோம். ஆனால், உண்மையான அன்பு கணக்கீடு இல்லாமல் நன்மை செய்யும்படி நம்மை உந்தித்தள்ளும். அத்தகைய நற்குணம் நமக்கு வேண்டும். நாம் பெற்றதை மற்றவருக்கு கொடுக்கும்படி தேவன் நமக்கு கற்பித்திருக்கிறார். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்கா 6:38) என்று கூறுகிறார். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுப்பதை திரும்பப் பெறுவீர்கள்.

ஒரு ஏழைப் பெண்ணின் மகள் பலவீனப்பட்டாள். அதனால் அந்த தாய் தன் மகளுக்கு திராட்சைப் பழங்கள் கொடுக்க வேண்டும் என வாஞ்சித்து, அதனைத் தேடி செல்கையில், ராஜாவின் அரண்மனைத் தோட்டத்தில் இருப்பதைக் கண்டாள். அந்தத் தோட்டக்காரனிடம் ’50 பைசா தருகிறேன். கொஞ்சம் திராட்சைப் பழங்கள் கொடுங்கள்’ என்றார். அப்படியே கேட்டபொழுது, ஒரு கூடை நிறைய திராட்சைப் பழங்களைப் பெற்றுக்கொண்டாள். ஏழைப் பெண் 50 பைசாவை கொடுத்தபொழுது, ராஜாவின் மகள் “என் தந்தை வியாபாரி அல்ல” என்று கூறி அந்த பெண்ணிடம் அதை வாங்க மறுத்தாள். அதுபோல, தேவனுடைய பிள்ளைகள் யாவரும் ‘கொடுக்கும் பிள்ளைகள்’ ‘இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்’ என்றே வேதம் கூறுகிறது. நீங்கள் பிறருக்குக் கொடுக்க ஆரம்பித்தால், தானாக பெற்றுக்கொள்வதையும் காண்பீர்கள். தாராளமாய் கொடுக்கிறவன் செழிப்பான். 
ஆம், நம்முடைய தகப்பனும் ஒரு ராஜாதிராஜா. அவர் நம்மிடத்திலிருந்து எதையும் எதிர்பார்த்ததில்லை. அவர் நம்மிடத்தில் வைக்கும் வேண்டுகோள், சுவிசேஷம் என்ற நற்செய்தியை நீங்கள்  இலவசமாய் பெற்றீர்கள். அதனை உங்கள் நண்பர்களுக்கும் இலவசமாய் கூறுங்கள் என்பதே (மத்தேயு 10:8). வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள் என்று இயேசு கூறுகிறார். உங்கள் பணத்தையும், நேரத்தையும், அன்பையும் கொடுத்து மற்றவர்களின் விடுதலைக்காக இலவசமாய் சேவை செய்ய வேண்டும். சிலர் தேவபணிக்காக அதிகமாய் கொடுக்கிறீர்கள். கர்த்தர் அதை உங்களுக்கு அமுக்கி குலுக்கி சரிந்து விழுமளவிற்கு அளவற்ற ஆசீர்வாதங்களாய் திரும்பக் கொடுப்பார்.  “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்கியா 3:10). நாம் தேவனை சோதிக்க ஒரே வழி, அவருக்கு தாராளமாய் கொடுக்க வேண்டும். அவர் எப்போதாவது சோதனையில் தோல்வியடைந்துள்ளாரா? ஒருபோதும் இல்லை. ஆகவே, நீங்கள்  கர்த்தருக்கென்று உதாரத்துவமாய் கொடுத்து பெரிதான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Prayer:
அன்புள்ள கர்த்தாவே,

உம்முடைய வார்த்தையின் மூலம் நீர் என்னோடு பேசினதற்காக உமக்கு நன்றி. என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பி, சுவிசேஷம் என்னும் நற்செய்தியை பிறருக்கு கூற எனக்கு உதவி செய்யும். உம்முடைய இரண்டாம் வருகைக்கு என்னையும் பிறரையும் ஆயத்தப்படுத்த எனக்கு கிருபை தாரும். தேவரீர் தேவையுள்ளவர்களுக்கு ஏற்ற நேரத்தில் உதவும்படி அடியேனை அளவில்லாமல் ஆசீர்வதித்தருளும். நீர் என்னில் மகிமைப்பட என்னை அர்ப்பணிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.
 

For Prayer Help (24x7) - 044 45 999 000