Loading...
Evangeline Paul Dhinakaran

தேவன் உங்கள் சிநேகிதர்

Sis. Evangeline Paul Dhinakaran
17 May
அன்பு நண்பரே, இந்த விசேஷித்த நாளில் தேவனுடைய வார்த்தையை உங்களிடத்தில் கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய வாக்குத்தத்தம் “கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.” (சங்கீதம் 25:14). ஒவ்வொரு நாள் காலையிலும் நீங்கள் மகிழ்ச்சியுடன் கர்த்தருடைய சந்நிதிதிக்கு வரும்போது அவர் உங்களைச் சந்தித்து, அவருடைய  இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்துவார். “மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்: இன்னமும் தப்பியிருக்கிறோம்” (ஏசாயா 64:5). நாம் தேவனுக்கு முன்பாக சரியான காரியங்களைச் செய்யும்போது, அவர் ஒவ்வொரு நாளும் காலையில் மகிழ்ச்சியுடன் நம்மை சந்திக்கிறார். இது இறைவனிடம் நமக்கு இருக்கும் மகிழ்ச்சி. 

ஆகையினால் தான், ஆமோஸ் 3:7ல், “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என்று வாசிக்கிறோம். தாவீது அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் ஜெபித்தார். அவர் ஒரு ஜெபவீரர். ஒரே நாளில் மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டேயிருந்தார். நாம் மகிழ்ச்சியுடன் தேவசமூகத்திற்கு செல்லும்போது அவர் எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்துவார். இயேசு இந்த பூமியில் இருந்தபோது, ஒரு நண்பனைப்போல தேவனைப் பற்றிய இரகசியங்களை தமது சீஷர்களுக்கு வெளிப்படுத்தினார். 
யோவான் 15:15ல் “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்று கூறுகிறார். தமது சீஷர்களுக்கு வெளிப்படுத்திய இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தமாட்டாரா? நீங்கள் தேவனுடைய சிநேகிதராயிருக்கிறீர்கள். உங்களில் அவர் மகிழ்ச்சியடைகிறார். ஆபிரகாம் தேவனுக்கு சிநேகிதனாய் இருந்தார். “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான் ” (யாக்கோபு 2:23). தேவன் உங்களையும் தனது சிநேகிதனாக்க விரும்புகிறார். நீங்கள் தேவனுடைய வார்த்தையை கேட்பதற்கும் அவரை நம்புவதற்கும் ஆர்வமாக இருந்தால், அவர் உங்களுடனே பேசுவார். நீங்கள் அறியாததும், உங்களுக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 
Prayer:
அன்பின் தேவனே,

உமது இரகசியங்களை எனக்கு வெளிப்படுத்தும். உமது ஞானத்தையும், வெளிப்பாடுகளை புரிந்துகொள்ளும் அறிவையும் எனக்கு தந்தருளும். பரிசுத்த ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும். என்னை உமது நண்பராக்கும். என் வாழ்வை அழகாய் நடத்த நான் அறிந்துகொளள் வேண்டிய காரியங்களை எனக்கு கற்றுத்தாரும். என்மீது உமது கண்ணை வைத்து ஆலோசனை சொல்லும். நடத்தவேண்டிய பாதையிலே என்னை நடத்தும்.

இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000