Loading...
Stella dhinakaran

விடுதலை!

Sis. Stella Dhinakaran
14 Feb
வியாதியிலிருந்தும், பிசாசின் கட்டுகளிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். “கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்...அவர் என்னை அனுப்பினார் (லூக்கா 4:18) என்று வேதம் கூறுகிறது. இன்றைக்கு இயேசு தமது பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் இந்த அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய நாமம், இரத்தம், வாக்குத்தத்தங்கள், கட்டளைகள் யாவும் சாத்தானால் கொண்டுவரப்படுகிற அனைத்து தீயகாரியங்களுக்கும் மருந்தாயிருக்கிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் தேவன் தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றினார் என்பதை ஒரு சகோதரி சாட்சியாக கூறுகிறார்.  

“எனக்கு இப்போது 63 வயதாகிறது. நான் பிறந்தபோது, நான் ஒரு பெண் குழந்தையாக இருந்ததால் என் அம்மா என்னைக் கொல்ல முயன்றார். ஆனால் என் தந்தை என்னைக் காப்பாற்றி வளர்த்தார். எனக்கு திருமணமாகி, என் மகனுக்கு ஒன்றரை வயதாயிருக்கும்போது என் கணவர் இறந்துவிட்டார். எவ்வித ஆதரவுமில்லாமல் நான் தனியாக வேதனைகளை அனுபவித்து வந்தேன். நான் ஒரு தொழிலை ஆரம்பித்தேன். அது தோல்வியடைந்தது. என் மகன் வளர்ந்து பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்றான். அங்கு அவன் வகுப்புகளுக்கு செல்லாமல், தவறான பாதைகளில் செல்ல தொடங்கினான். என் பாரம் அதிகரித்தது. வீட்டு வாடகை, உணவு, வாழ்வின் அத்தியாவசிய தேவைகள் சந்திக்கப்படாமல் தவித்தேன். வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே போராடினேன். இப்படிப்பட்ட நேரத்தில்தான் இயேசு அழைக்கிறார் ஊழியத்தின், “எஸ்தர் ஜெபக்குழு” நடத்துகின்ற ஒரு சகோதரி என்னை சந்தித்து என்னை ஆறுதல்படுத்தி, பிரார்த்தனைக்காக அழைத்துச் சென்றார். அதன்பிறகு இரட்சிப்பின் பாதையில் என்னை நடத்தினார். நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்தேன். எஸ்தர் ஜெபக்குழு சகோதரிகள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து எனக்காக ஜெபித்தபோது, பிசாசின் கட்டுகளிலிருந்து நான் முழுமையாக விடுதலையை பெற்றேன். அன்றே எனக்கு ஒரு பகுதி நேர வேலை கிடைத்தது. எஸ்தர் ஜெபக்குழுவில் எனது மகனின் மாற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்தபோது, தேவன் அவனையும் விடுவித்தார். இப்போது அவன் தனது படிப்பை முடித்து,  நல்ல வேலைக்கு செல்கிறான். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் நான் அனுபவிக்காத மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் கர்த்தர் எனக்கு கொடுத்திருக்கிறார்.”
ஆகவே, “குமாரன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான் 8:36) என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது. உண்மையான விடுதலை இயேசுவின் மூலமே வருகிறது. இன்றைக்கு உங்கள் இருதயத்திற்குள் இயேசுவை அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் தேவனுடைய குடும்பத்திலுள்ள அங்கத்தினராக மாறும்போது, உங்கள் அன்றாட வாழ்க்கையில் சமாதானத்தையும், தேவ வழிகாட்டுதலையும், ஆறுதலையும் பெற்றுக்கொள்வீர்கள். அவருடைய கிருபையை ருசிபார்க்கும்படி அன்பின் தகப்பனுக்கு முன்பாக வாருங்கள். தேவனுடைய அளவில்லாத ஆசீர்வாதத்தை தடைசெய்கிற ஒவ்வொரு காரியத்தையும் புறம்பே தள்ளுங்கள். கர்த்தர் உங்களுக்கு விலையேறபெற்ற திட்டத்தை வைத்திருக்கிறார். 
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

உமது  விலையேறப்பெற்ற மீட்பை நானும் பெற்றுக்கொள்ள எனக்கு உதவியருளும். உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பியருளும்.  நீர் என்மீது வைத்திருக்கும் அன்பு எல்லாவற்றையும் விட பெரியது. ஒவ்வொரு நாள் காலையிலும் உமது அன்பையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ள என்னை வழிநடத்தும். பிசாசின் அடிமைத்தனங்களுக்குள் நானும் எனது குடும்பத்தினரும் சிக்கி தவிக்காதபடி எங்களை பாதுகாத்து வேலியடைத்தருளும். இயேசுவின் நாமத்தில் இருளும் அந்தகாரமும் வெளியேறட்டும். ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை உமது கரத்திலிருந்து பெற்றுக்கொள்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000