Loading...
Stella dhinakaran

இனி பயமில்லை!

Sis. Stella Dhinakaran
17 Dec

உங்கள் வாழ்க்கையில் எந்த காரியமாகிலும் உங்களை மிகவும் தொந்தரவு செய்கிறதா? உங்களைத் துன்புறுத்துகிற பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் நீங்கள் போராடுகிறீர்களா? “எல்ஷடாய் என்ற தேவன்” உங்களோடு இருக்கிறார். அவர் உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார். நீங்கள் எதிர்கொள்ளுகிற போராட்டங்கள் அனைத்திலும், தேவபெலனும் உற்சாகமும் உங்களிடமிருந்து பாய்ந்தோடும். அன்பானவர்களே, நீங்கள் ஒரு நேர்காணலை சந்திக்கும்போது, ஒரு புதிய முயற்சியை மேற்கொள்கிறீர்கள். அறுவைசிகிச்சைக்கு செல்கிற ஒரு குழந்தையை ஆயத்தப்படுத்துவதுபோல, கர்த்தர் உங்கள் பயத்தை நீக்கி தமது வார்த்தையினாலும், செய்கையினாலும் உங்களை வழிநடத்துவார். தேவனுடைய வார்த்தையை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள், “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

1492 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொலம்பஸ் கடலில் பயணம் செய்தார். ஒரு கப்பல் ஐரோப்பாவிலிருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்தது. அவை உலகின் விளிம்பிலிருந்து விழுந்துவிடும் அல்லது பயங்கரமான ஆபத்தை எதிர்கொள்ளும் என்பது ஜனங்களுடைய பொதுவான நம்பிக்கையாயிருந்தது.  ஒரு பயம் அவர்களிடம் காணப்பட்டது. இங்கிலாந்தில், கிங் நான்காம் ஹென்றியின் முந்தைய காலத்தில் கடலைக்குறித்து ஒரு பழங்கால வரைபடம் இருந்தது. அதில், வரைபடத் தயாரிப்பாளர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில், “இங்கே டிராகன்கள் இருக்கிறது; இங்கே பேய்கள் இருக்கிறது; இங்கே ஆபத்து  இருக்கிறது” என்ற எச்சரிப்பின் வார்த்தைகளை எழுதி வைத்திருந்தனர். மேலும் அந்த மூட எச்சரிக்கையின் அடிப்படையில், மாலுமிகள் அங்கு பயணம் செய்வதற்கு பயந்தார்கள். ஆனால், ஜான் ஃபிராங்களின் என்றொரு ஆங்கிலேய மாலுமி இருந்தார். அவர் ஆண்டவர்மீது பற்றுக்கொண்ட மனிதர். தேவனுடைய வார்த்தைகளை அவர் அறிந்திருந்தபடியால், அவர் அதே வரைபடத்தை எடுத்து, அந்த பயமுறுத்தும் வார்த்தைகளைத் தாண்டி, “இங்கே ஆண்டவர் இருக்கிறார்” என்ற மூன்று வார்த்தைகளை இணைத்தார். ஆம் பயத்தை நீக்கும் வார்த்தைகளை அவர் இணைத்தார். 

உங்கள் வாழ்க்கையிலும் இருண்ட காலங்களில் நீங்கள் பயணம் செய்யும்போது, “ஆண்டவர் உங்களோடு இருக்கிறார்” என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆம் உங்களைக் கைவிடாமல் காப்பாற்றுவதற்கு ஆண்டவர் உங்களுடனேகூட என்றென்றும் இருக்கின்றார். ஒரே நாளில் தனது எல்லா குழந்தைகளையும் சொத்துக்களையும் இழந்த யோபு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” (யோபு 19:25) என்று கூறுகிறான். வானத்தை தமது கரங்களால் விரித்த ஜீவனுள்ள தேவனுடைய அன்பான கரத்தில்  நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். இந்த உலகம் நொறுங்கிப்போவதாக நீங்கள் உணரும்போது, பிரபஞ்சத்தின் பாதுகாப்பான இடமாகிய, தேவகரத்தில் உங்களை அர்ப்பணியுங்கள். மனிதனிடம் ஓடுவதற்கு பதிலாக, தேவனுடைய வாக்குறுதிகளை நம்பி அவரை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்கள் பிரச்சினைகள் யாவற்றிலிருந்தும் மகிமையான வழியில் உங்களை வெளிக்கொண்டு வருவார். 

Prayer:

அன்புள்ள ஆண்டவரே,

நான் பயத்தினால் நிறைந்திருக்கிறேன். என் அச்சங்கள் யாவற்றையும் உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன். நீரே என் மனதிலிருக்கும் அச்சத்திலிருந்து என்னை விடுவித்தருளும். நான் எதிர்கொள்ளும் சவால்களை தைரியமாய் சமாளிக்கும் திறனை எனக்குத் தந்தருளும். உமது அன்பு, மகத்துவம் மற்றும் வல்லமையை பற்றி அதிகமாய் அறிந்துக்கொள்ளும் ஞானத்தை தாரும். உம்மீது நான் வைத்துள்ள நம்பிக்கையை பெலப்படுத்தும். எப்பொழுதும் நீர் என்னுடனேகூட இருக்கிறீர் என்று நான் உறுதியாய் விசுவாசிக்கிறேன். எல்லாவிதமான கஷ்டத்திலிருந்தும் என்னை விடுவித்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000