Loading...
Samuel Paul Dhinakaran

பயப்படாதே, கர்த்தர் உங்களோடிருக்கிறார்!

Samuel Dhinakaran
18 Jan
நானும் என் சகோதரியும், சிறுவயதாய் இருக்கும்போது, எங்கள் தந்தை எங்களுக்கு நீச்சல் சொல்லித்தர விரும்பினதால், ஒரு ஆழமான நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றார். நேரத்தை வீணாக்காமல், அவர் எங்களை ஆழமான தண்ணீருக்குள் தூக்கி எறிந்தார். நாங்கள் பயந்து போனோம். நான் மூச்சுத்திணறிக் கொண்டே, “அப்பா, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினேன். அவர், நாங்கள் எப்படி நீச்சல் அடித்து மேலே வருவதென்று  எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். நாங்கள் அப்படியே செய்து, தண்ணீருக்கு மேல் வந்தோம்! ஆம், நாங்கள் அதை கடினமான முறையில் கற்றுக்கொண்டோம். அதைப்போலத்தான், தேவன் நம்மை ஆழமான தண்ணீருக்குள் போடுகிறார். நாம் நீச்சல் அடித்தும், கஷ்டப்பட்டும், இறுதியில் அவரை நோக்கிக்கதறும்போது, அவர் நம்மிடம் தம் கையை நீட்டி, மெதுவாக நம்மை பேதுருவை தூக்கியதைபோலவே தூக்கிவிடுவார். உங்கள் சுயபெலத்தினால் அதை செய்ய முயற்சிக்கும் போது, அது உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால், நாம் அவருடைய பெலத்தின்மேல் சார்ந்திருந்தால், பொறுமையாக அவர் நமக்கு கற்றுக்கொடுக்கும் காரியம் வியக்கத்தக்கதாயிருக்கும்.

யோனா கடலிலே தூக்கியெறியப்பட்டபோது, தண்ணீரின் ஆழத்தில் மூழ்கினார். பின்னர் ஆண்டவர் ஒரு மீனை அனுப்பி அவரை விழுங்கச் செய்தார். என்னுடைய தாத்தா Dr.D.G.S. தினகரன் அவர்கள் ஒரு தரிசனத்தில், யோனாவை பரலோகத்தில் சந்திக்கும் கிருபையை கர்த்தர் கொடுத்தார். அப்போது யோனா என் தாத்தாவிடம் கூறினார், “உங்களுக்குத் தெரியுமா? நான் மீனின் வயிற்றிலிருந்தபோது, எல்லாப் பக்கத்திலிருந்தும் ஜீரண அமிலங்கள் வந்து என்னை நெருக்கி ஜீரணிக்கச் செய்ய வரும். அதின் மத்தியிலும் தேவனுடைய கிருபை என்னை மூடிகொண்டதைக் கண்டேன். அது என்னை மூடிக்கொண்டு என்னை ஜீரணிக்கச் செய்யாதபடிக்கு பாதுகாத்தது. தேவன் என்னை மீனின் வயிற்றிற்குள் அனுப்பினாலும், அவர் எதுவும் என்னை சேதப்படுத்தாதபடி கிருபையாக காத்தார். அவரது கிருபையினுடைய வல்லமையை அன்று நான் கற்றுக்கொண்டேன். 
நீங்களும் ஆண்டவரிடத்தில், “ஆண்டவரே ஏன் இந்த கஷ்டங்களை எனக்கு அனுமதிக்கிறீர்? நான் உம்மை நம்ப வாஞ்சிக்கும் வேளையில் ஏன் இந்த வேதனையை எனக்கு அனுமதிக்கிறீர்” என்று கேட்கிறீர்களா? நீங்கள் நொறுங்கிப் போக அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். “நீ தண்ணீர்களை கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசாயா 43:2) என்று வாக்களித்தவர் என்றென்றும் உங்களை காப்பார்.  பிரியமானவர்களே,  உங்களை மூழ்கடிக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில், நீங்கள் தேவனுடைய வார்த்தையை கேளுங்கள், தேவ கிருபை பிசாசின் சூழ்ச்சிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இன்றைக்கும் உங்கள் கவனத்தை இயேசுவின் பக்கமாக திருப்புங்கள். உங்கள் சந்தேகங்கள் மற்றும் கவலைகள் அனைத்தையும் அவரிடத்தில் அர்ப்பணியுங்கள். அவருடைய கிருபை உங்களை தாங்கி வழிநடத்தும். “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று உறுதியளித்த ஆண்டவர் தமது கிருபையை அனுப்பி உங்களை மூடி பாதுகாப்பார்.
Prayer:
அன்பின் தேவனே,

வாழ்க்கை புயலில் சிக்கித் தவிக்கிற என்னை விடுவித்தருளும். என் சுய பெலத்தினால் இந்த போராட்டத்தில் வெற்றிசிறக்க முடியாது. உம்மிடத்தில் யாவற்றையும்  நான் அர்ப்பணிக்கிறேன். என்மீது கிருபையாயிரும். கடல்போன்று என்னை சூழ்ந்திருக்கும் இந்த வேதனையிருந்து என்னை விடுவித்து உயர்த்தும். நீர் எனக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதத்தின்மீது நான்  நம்பிக்கையாயிருக்க கிருபை செய்தருளும்.  இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியிலும் உமது குரலை கேட்கிற அனுபவத்தை எனக்குத்தாரும். ஆழ்ந்த கவலைக்குள் என்னை கொண்டு செல்கிற அனைத்து கவனச்சிதறல்களையும் விபரீதங்களையும் சரிசெய்தருளும். இந்த எல்லா விஷயங்களிலும் உமது கிருபையையும் வழிகாட்டுதலையும் எனக்கு காண்பித்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.  

For Prayer Help (24x7) - 044 45 999 000