Loading...
Dr. Paul Dhinakaran

தேவனுக்கு பயந்திரு!

Dr. Paul Dhinakaran
22 May
கனவுகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, ஆம் என்றும், சிலர் இல்லை என்றும் பதிலளிக்கின்றனர். நாம் மயக்க நிலையில் இருக்கும்போது நமது ஆழ்மனதின் ஆசைகளையும் விருப்பங்களையும் வெளிப்படுத்துவதே கனவு என்று மருத்துவரீதியாக கூறப்படுகிறது. சொப்பனத்தில் காண்கிற யாவுமே நிஜ வாழ்வில் நடந்துவிடுவதில்லை. “அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு” (பிரசங்கி 5:7) என்று வேதம் கூறுகிறது. ஆகையால், சொப்பனங்களை குறித்து பயப்படாமல், அவற்றை கர்த்தரிடத்தில் ஒப்புவித்து, அவருக்கு பயந்திருங்கள். தேவன் உங்களோடிருக்கிறார்!

1969-ஆம் ஆண்டு என் தந்தை, சகோதரர் D.G.S தினகரனின் நுரையீரல்கள் பாதிக்கப்பட்டதால், இருமிக்கொண்டும் இரத்தவாந்தி எடுத்துக்கொண்டு காணப்பட்டார். நான் எப்போதும் அவர் அருகிலேயே இருப்பேன். ஒவ்வொரு இரவிலும், “என் தந்தையின் சரீரம் ஒரு சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, நான் படித்த பள்ளியில் வைக்கப்பட்டிருப்பதையும், அநேகர் விதவிதமான இசைக்கருவிகளுடன் மரண பாடல்களை இசைத்துக் கொண்டிருப்பதையும் பார்ப்பேன். திடீரென நான் விழித்து, சத்தமிட்டு அலறி, என் தந்தையை அப்படியே கட்டித் தழுவிக்கொள்வேன். ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து நான் திரும்பும்போது, என் வீட்டுக்கு அருகாமையில் யாராவது வாத்தியக் கருவிகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என பயத்தோடு பார்த்துக்கொண்டே வருவேன். சில ஊழியர்கள், “பிரதர் தினகரன், நீங்கள் மரண வாசலில் இருக்கிறீர்கள். உங்கள் ஊழியம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது” என்றனர். அந்த பொய்யான தீர்க்கதரிசனங்கள் எங்கள் உள்ளங்களை உடைத்தது. ஆனால், என் தகப்பனார் நீடித்து வாழ்ந்து, உலகம் முழுவதிலும் அவரது ஊழியத்தை வெற்றிகரமாக செய்தார்.
உங்களுக்கும் இதுபோன்று கனவுகள் வந்து ஒவ்வொரு நாளும் உங்களை பயமுறுத்துகின்றதா? இனி நீங்கள் உயிரோடிருக்கமாட்டீர்கள் என்ற வார்த்தைகள் மருத்துவரிடமிருந்தோ அல்லது உங்கள் உறவினரிடமிருந்தோ வருகிறதா? அந்த வார்த்தைகள் உங்கள் உறக்கத்தை கெடுக்கிறதா? “தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறது” (பிரசங்கி 5:3) என்று வேதம் கூறுகிறது. மனிதரிடமிருந்து வருகிற வார்த்தைகள் நம்மை வேதனைப்படுத்துகிற வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், தேவனோ “பயப்படாதே, நான் உன்னை குணமாக்குவேன், உனக்கு சகாயம் பண்ணுவேன்” (ஏசாயா 41:10) என்ற நம்பிக்கையான வார்த்தைகளை தந்திருக்கிறார். நீங்கள் கர்த்தருக்கு பயப்படுவீர்களானால், வேறொன்றை குறித்தும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு வழியாய் உங்களுக்கு விரோதமாய் வருகிறவர்கள் ஏழு வழியாய் ஓடிப்போவார்கள் (உபாகமம் 28:7). இது தேவபிள்ளைகளுக்கான ஆசீர்வாதம். இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அவர் உங்கள் வழிகளிலெல்லாம் உங்களைக் காக்கும்படி, உங்களுக்காகத் தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவார் (சங்கீதம் 91:6,11). நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் “தேவனுக்கு பயந்திருங்கள்.”
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

உம்முடைய வார்த்தைகள் மூலம் நீர் என்னோடு பேசினதற்காக உமக்கு ஸ்தோத்திரம். நான் உடைந்த உள்ளத்தோடும், கண்ணீரோடும் ஜெபிக்கிற ஜெபத்தை கேட்டு, என் குறைவுகள் யாவற்றையும் நீக்கியருளும். என் வியாதிப்படுக்கையை மாற்றிப் போடும். என் மனதை பாதிக்கிற சொப்பனங்களை, எனக்கு விரோதமாக மற்றவர் பேசுகிற வார்த்தைகளை நீர் அகற்றும். நல்ல கனவுகள் நிறைவேறட்டும். உமக்குப் பயப்படும் பயத்தை எனக்குத் தாரும். ஒவ்வொரு நாள் இரவும் இன்பமான நித்திரையை அளித்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000