Loading...
Stella dhinakaran

விசுவாசத்தின் மூலம் அற்புதம்!

Sis. Stella Dhinakaran
27 Mar
பிரியமானவர்களே, தேவனோடு நெருங்கி ஜீவிப்பதற்கு விசுவாசத்தை மையமாக கொண்ட குடும்பத்தை கட்டியெழுப்புவது மிகவும் அவசியமாயிருக்கிறது. ஒருவேளை உங்களுடைய ஆசீர்வாதம் தாமதிக்குமானால், மனம் சோர்ந்துபோகாதிருங்கள். உங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதிருங்கள். தேவனுடைய அற்புதங்களின்மீதே உங்கள் கண்களை பதியுங்கள். தேவனால் கூடாத காரியங்கள் ஒன்றுமில்லை. அவர் உங்கள் மனவிருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவார். தேவன்மீது நம்பிக்கை வைத்து விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன்மூலம் தேவனிடத்திலிருந்து சிறந்த பரிசுகளை பெற்றுக்கொள்வீர்கள். 

 பரிசுத்த லூக்கா சுவிசேஷம், முதலாம் அதிகாரத்தில், எலிசபெத்து என்ற பெண்ணைக் குறித்து வாசிக்கிறோம். அவள் வயது முதிர்ந்தவள். அவள் புருஷன் பக்தியுள்ள சகரியா என்ற ஆசாரியன். அவர்கள் இருவரும் கர்த்தர் கூறிய சகல கற்பனைகளின்படியும் நடந்து, நீதியுள்ளவர்களாய் இருந்தார்கள் (லூக்கா 1:6). இதுதான் அவர்களுடைய வாழ்க்கையின் அஸ்திபாரம். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையில் பல வருடங்களாய் ஒரு பெரிய குறைவு காணப்பட்டது. குழந்தைப் பேறு இல்லாத நிலைமை. அவர்கள் அதற்காக வேண்டுதல் செய்துகொண்டிருந்தார்கள். அதை கர்த்தர் கேட்டார். அவர்களை ஆசீர்வதிக்க சித்தம்கொண்டார்.

 அப்பொழுது அவளுக்கு வேறொரு அதிசயமும் நடந்தது. அவர்களுடைய உறவு முறையான மரியாளை சந்திக்க நேர்ந்தது. எலிசபெத்து, தேவகுமாரனாகிய இயேசுவுக்கு முன்னோடியாக, தேவமனிதனாக வெளிப்பட்ட யோவான் ஸ்நானகனின் தாய். அதே போன்று மரியாள், தேவகுமாரனாகிய இயேசுவை உலகிற்கு கொண்டு வரும் பாக்கியத்தை பெற்றிருந்தாள். இந்த இரண்டு பேரும் தேவ வல்லமையினால் கர்ப்பவதிகளானார்கள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தபொழுது, எலிசபெத்து மரியாளிடம் கூறிய காரியம், “விசுவாசித்தவளே பாக்கியவதி” என்பதாகும்.
இந்த இரண்டு பெண்களுடைய விசுவாசத்தையும் பாருங்கள். எலிசபெத்து வயது சென்றவள். ஆனால், கர்த்தர் தன்னை ஆசீர்வதிக்க சித்தம்கொண்டபோது, அவள் விசுவாசத்துடன் அந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு, தேவ சித்தத்தை தன் வாழ்வின் மூலமாக நிறைவேற்றி முடித்தாள். அதேபோன்று இயேசு கிறிஸ்துவை கன்னியாகிய தன் வயிற்றிலே சுமந்து பெற்றெடுத்த மரியாளும், ஆண்டவருடைய பார்வையில் விலையேறப்பெற்றவள். கன்னியாகிய மரியாளும் தன் வாழ்க்கையில் தேவசித்தத்தை செவ்வையாக நிறைவேற்றினாள். இந்த இரண்டு சகோதரிகளும் விசுவாச வீராங்கனைகளாக இருந்ததினிமித்தம்தான், கர்த்தர் அவர்கள் கர்ப்பத்தை ஆசீர்வதித்திருந்தார். பாக்கியவதிகளாக அவர்களை மாற்றினார். நீங்களும் இதேபோன்று பாக்கியவதிகளாக மாறவேண்டுமென்பது தான் ஆண்டவருடைய விருப்பம். ஆகவே, உங்கள் வாழ்க்கையிலே கர்த்தர்மேல் “உறுதியான விசுவாசம்” கொள்வீர்களானால், நீங்களும் உலகத்தை ஜெயிக்க முடியும். உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் (1 யோவான் 5:4). 
Prayer:
என் அன்பிற்குரிய தகப்பனே,

நீர் இவ்வுலகில் வாழ்ந்தபோது, பல முறை உபவாசித்து ஜெபம்பண்ணி, பிதாவின் சித்தத்தைப் பரிபூரணப்படுத்தினீர். நானும்கூட உம்மைப்போன்று விசுவாசத்தோடு உபவாசித்து ஜெபித்து அளவில்லாத உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு கிருபை செய்தருளும். என் எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குரிய முயற்சிகளை ஆசீர்வதித்தருளும். நான் மனம் சோர்ந்துபோகாமல் உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை எனக்கு அதிகமாய் தந்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000