Loading...
Evangeline Paul Dhinakaran

விசுவாசித்தால் ஆசீர்வாதம்!

Sis. Evangeline Paul Dhinakaran
30 Dec
பிரியமானவர்களே! வாழ்க்கையில் தோல்வியை சந்திக்கிற ஒவ்வொருவரும் கேட்கும் முதல் கேள்வி, கர்த்தர் என்னை கைவிட்டு விட்டாரா? என் வாழ்வில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்? எனக்கு நல்ல வழி பிறக்காதா? என்று  நம்மையே நாம் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் தேவாதிதேவன், “நான் சதாகாலமும் உங்களோடுகூட இருக்கிறேன்” என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட சகோதரன் குரியன் ஜோஸ்  அவர்களின் சாட்சியை கீழே தருகிறேன்.

2001-ம் வருடம் எனக்கு திருமணமானது. என் முதல் மகள் பெயர் ஷெர்லின், இரண்டாவது மகன் சாமுவேல். திருமணமான ஆரம்ப நாட்களில் சந்தோஷமாக வாழ்ந்தோம். நாட்கள் செல்ல செல்ல வாழ்வில் கஷ்டங்கள் நேரிட ஆரம்பித்தது. குறிப்பாக 2009-ல் வறுமை அதிகமாக எங்களை வாட்டியது. நான் செய்து வந்த வேலையை இழந்தேன். தினமும் ஒரு வேளை ஆகாரம்கூட இல்லாமல் கஷ்டப்பட்டோம். என் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கும் பணமில்லை. எங்கள் உறவினர்களும் எங்களைக் கைவிட்டனர். ஒருநாள் மிகவும் மனம் உடைந்தவனாய் இன்சூரன்ஸ் பண்ணிவிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். பிள்ளைகளுக்கு பணம் வருமே என தீர்மானம்பண்ணி, என் நண்பனுக்கு போன் செய்தேன். என் நண்பன், “நீ அப்படி செய்யாதே, இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார். அவர் நிச்சயம் உனக்கு உதவிசெய்வார். அவரை நம்பு! வேலூரில் ‘இயேசு அழைக்கிறார்’ பிரார்த்தனைத் திருவிழா நடைபெறுகிறது. நீ அந்த கூட்டத்தில் கலந்துகொள். உனக்கு நிச்சயம் அற்புதம் நிகழும்” என்றார். அதன்படியே 2010 ஜனவரி மாதத்தில் வேலூரில் நடைபெற்ற, “இயேசு அழைக்கிறார்” பிரார்த்தனைக் கூட்டத்திற்கு குடும்பமாக சென்றோம். நான் இயேசுவிடம், “ஆண்டவரே, இதுதான் நான் பங்குபெறுகிற கடைசி கூட்டம்”, என்று கூறிவிட்டு, விசுவாசத்தோடு ஜெபத்தில் பங்குபெற்றேன். அந்த நேரத்தில் டாக்டர். பால் தினகரன் அவர்கள், “இதுவரைக்கும் நீங்கள் கஷ்டத்தின் பாதையில், கவலையின் பாதையில், அவமானத்தின் பாதையில், இழப்பின் பாதையில் சென்றீர்கள். ஆனால், என்னுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும்படி செய்வேன். நீங்கள் குடும்பமாக சந்தோஷமாக வாழ்வீர்கள்.  உங்கள் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்து பெருகச்செய்வேன். உங்களை சந்தோஷப்படுத்துவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்” என்றார். 

அவர் சொன்ன அந்த வார்த்தைகள் ஒரு வினாடியில் என் உள்ளத்திலிருந்த கவலைகள் யாவற்றையும் நீக்கி சந்தோஷத்தால் என்னை நிரப்பியது. அவர் ஜெபித்து முடித்ததும், ஆண்டவர் என்னோடு பேசினார்! வேலூரில் தங்கியிருந்து தொடர்ந்து அங்கு நடைபெற்ற மூன்று நாட்கள் கூட்டங்களிலும் பங்குபெற்று விசுவாசத்தோடு பெங்களூரு வந்தோம். அன்றிரவு 10 மணிக்கு தொலைபேசியில் ஒருவர் தொடர்புகொண்டு, “திரு. குரியன், வேலைக்கான காலியிடம் உள்ளது” என்றார். அடுத்த நாள் நான் நேர்காணலில் கலந்து கொண்டேன்.  அன்றே வேலைக்கான ஆர்டரையும், சம்பளத்தையும் பார்த்த போது, நானே ஆச்சரியமடைந்தேன். வேலையின்றி அலைந்த எனக்கு மேலாளர் பதவியை கொடுத்து, ரூ.25,000/- மாத சம்பளம் பெறும் பாக்கியத்தையும் கர்த்தர் கொடுத்தார். தற்பொழுது அந்த சம்பளத்தை பார்க்கிலும் கர்த்தர் அதிகமாய் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். ஆம், எங்கள் குடும்பத்தில் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் வந்துகொண்டேயிருக்கிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
பிரியமானவர்களே! இன்றைக்கும் உங்களில் அநேகர் தோல்வி, பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, குழந்தையின்மை போன்ற பல கஷ்டங்களினால் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள்! கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிக்க காத்திருக்கிறார். விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் அவரை பற்றிக்கொள்ளுங்கள், “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபிரெயர் 11:6). தேவனை தேடுகிறவர்களை அவர் தள்ளாதவர். பிறக்கப்போகும் புதிய ஆண்டில் உங்களுக்கான அற்புதத்தை பெற்றுக்கொள்வோமென்ற விசுவாசத்துடன் காத்திருங்கள். அவர் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார்.
Prayer:
என்னை நேசிக்கிற நல்ல தகப்பனே,

உம்முடைய ஆறுதல்கள் என் இருதயத்தைத் தேற்றுகின்றன. நான் சோர்ந்துபோகிற சமயங்களிலே உம்முடைய வசனங்கள் என் ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்றன. என் வாழ்க்கையில் காணப்படும் அவிசுவாசங்களை எனக்கு மன்னித்தருளும். அசைக்கமுடியாத, உறுதியான, நிலைவரமான விசுவாசத்தை எனக்குக் கட்டளையிட்டருளும். மனிதர்களைப் பார்த்து என் விசுவாசத்தை இழக்காதபடிக்கு, எவ்விதமான சூழ்நிலையிலும் உம்மை மாத்திரம் நான் நோக்கிப் பார்ப்பதற்கு கிருபை செய்தருளும். எந்த நொடியிலும் நீர் என் துயரத்தை நீக்க முடியும் என்பதை பரிபூரணமாக விசுவாசிக்கிறேன். 

துதி, கனம், மகிமை யாவையும் உமக்கே செலுத்துகிறேன்.

ஆமென்!

For Prayer Help (24x7) - 044 45 999 000