Loading...
Stella dhinakaran

விசுவாசமும் வெற்றியும்

Sis. Stella Dhinakaran
14 Jan
எனக்கு அருமையான நண்பரே, நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய வாக்குறுதி வசனம் சங்கீதம் 18:29 “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங்கீதம் 18:29) என்று தாவீது கூறுகிறான்.  தாவீது முழு இருதயத்துடனும் கர்த்தரை நேசித்தான். அவன் தேவன்மீது ஒரு அசாதாரணமான நம்பிக்கையை வைத்திருந்தான். அதுபோலவே, மத்தேயு 15-ல் ஒரு கானானிய ஸ்திரீயின் விசுவாசத்தைப் பற்றி வாசிக்கிறோம். பிசாசு பிடித்திருந்த தன் மகளை குணமாக்கும்படி இயேசுவை தேடி அந்த ஸ்திரீ வந்தாள். அவள் ஆசீர்வாதத்தைப் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றாள். “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்” (மத்தேயு 15:28).
 
லூக்கா 7-ல் நடந்த மற்றொரு சம்பவத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம். பாவியான ஒரு ஸ்திரீ, தன் பாவ பழக்கத்தால் சமாதானம் இல்லாமல், இயேசுவிடம் வந்து, அவளுடைய பாவத்திலிருந்து விடுபட உதவி கேட்டு கண்ணீர் வடித்தாள். அவள் தன் கண்ணீரால் இயேசுவின் பாதத்தை கழுவி, தன் தலைமயிரினால் துடைத்தாள். அவளும் தேவசமாதானத்தை பெற்றாள். “அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்” (லூக்கா 7:50).
பெலிஸ்தர்கள் இஸ்ரவேலருக்கு எதிராகப் போரிடும்படி கூடிவந்தபோது, தாவீது கோலியாத் என்ற மாபெரும் ராட்சதனுக்கு எதிராக போராட வேண்டியிருந்தது. கோலியாத் தன் தலை முதல் பாதம் வரை ஆயுதம் அணிந்திருந்தான். மேலும், அவன் சிறுவயதிலிருந்தே ஒரு யுத்தவீரன். தாவீது ஒரு சாதாரண மேய்ப்பனாக, யுத்தத்திற்கு பயிற்சி பெறாதவனாக இருந்தபோதிலும், அவன் தைரியமாக கோலியாத்தை நோக்கி “நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று. உன் தலையை உன்னைவிட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளையத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்” (1 சாமுவேல் 17:45-47). தாவீது தேவன்மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக, கோலியாத்தை வென்றான். மேலும், அவன் எவ்வித ஆயுதமுமின்றி ஒரு கவண்கல்லால் அவனை கொன்றான். என் விலையேறப்பெற்ற நண்பரே, இன்றைக்கு நீங்களும் பல சிரமங்களை வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் கலங்கவேண்டாம்! தேவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடிருங்கள். அவர் உங்கள் பக்கத்தில் இருக்கும்போது, நீங்கள் ஒரு பெலமுள்ள நபராக இருப்பீர்கள். தாவீதைப்போல் நீங்களும் பெரிய காரியங்களை செய்ய முடியும். தேவனுடைய அபிஷேகத்தை நீங்கள் பெறும்போது, உங்கள் சத்துருக்கள் அனைவருக்கும் எதிராக போராடி வெற்றிபெற நீங்கள் ஆயத்தமாயிருப்பீர்கள்.
Prayer:
என் அன்பின் பரலோகத் தகப்பனே,
 
நீர் எனக்குக் கொடுத்த கிருபைகளுக்காக நன்றி. உமது நாமமே ஒரு பெரிய ஆசீர்வாதம். உமது நாமத்தினாலே எந்தவொரு போராட்டத்தையும் நாங்கள் எதிர்கொள்ள முடியும். தாவீது யுத்தத்தில் வெற்றி பெறவும், இராட்சதனை அழிக்கவும் நீர் கொடுத்த பெலனை எனக்கும் அருளிச்செய்யும். அப்பொழுது என் எல்லா கஷ்டங்களிலிருந்தும் எதிர்ப்புகளிலிருந்தும் நான் விடுவிக்கப்படுவேன். வெற்றியின்மேல் வெற்றி காண ஆண்டவரே என்னை பலப்படுத்தும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000