Loading...
Dr. Paul Dhinakaran

இரண்டு மடங்கு கனப்படுத்துவார்!

Dr. Paul Dhinakaran
08 Oct
உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். (ஏசாயா 61:7)
பிரியமானவர்களே! இன்றைக்கு தேவன் உங்கள் எல்லைகளை விஸ்தாரப்படுத்துவேன் என்று கூறுகிறார். ஒருவேளை நீங்கள் படிப்பில் தோல்வியடைந்திருக்கலாம், தோல்வியினிமித்தம் வெட்கம் என்னை மூடுகிறது, சிநேகிதர்களை எப்படி நான் சந்திப்பேன், எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். கடன் பிரச்சினையினால் அவதிப்படுகிறீர்களா, மறைந்து, மறைந்து வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. இன்னும் எத்தனைநாள் நான் இந்த வெட்கத்தையும், வேதனையையும் அனுபவிக்க வேண்டுமென்று சொல்லுகிறீர்களா? நோயினால் அவதியுற்று மருத்துவமனைக்கு செல்லும்போதெல்லாம் நான் வெட்கத்தை அனுபவிக்கிறேன் என்று கூறுகிறீர்களா? கவலைப்படாதிருங்கள்! யாத்திராகமம்  34:24-ல்  “நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்” என்று கூறியிருக்கிறார். நீங்கள் அனுபவித்த வெட்கத்திற்கு பதிலாக தேவன் உங்களை இரண்டு மடங்கு கனப்படுத்துவார்.

எனது தகப்பனார் உயிரோடிருந்த பொழுது ஒரு சகோதரி என் தந்தையிடம் வந்து இப்படியாக அழுதார், திருமணமாகி கொஞ்ச நாட்களிலேயே என் கணவனை இழந்தேன், எனக்கு சிறு கைக்குழந்தை இருக்கிறது.  என் உறவினரில் ஒரு வயதான அம்மா கூறினார், குழந்தையை அவளுடைய கரத்தில் கொடுக்காதீர்கள். அவள் ஒரு துரதிஷ்டசாலி, அவளுடைய துரதிஷ்டம் குழந்தையையும் ஏதாகிலும் செய்துவிடுமென்று கூறினார். அதைக்கேட்ட என் உள்ளம் சுக்குநூறாக உடைந்தது. யாரும் என்னை பொறுப்பேற்க முன்வரவில்லை, எங்கு செல்வதென்றே தெரியவில்லை என்று சொல்லி அழுதார். நீங்களும்கூட ஒருவேளை இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கலாம், ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், நான் உங்களுடைய எல்லா பிரச்சினைகளையும், அவமானங்களையும்,  முடிவுக்கு கொண்டுவருவேன். உங்களுடைய வாழ்க்கையையும், குடும்பத்தையும் நான் விஸ்தாரப்படுத்துவேன் என்று கூறுகிறார். இதுதான் ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டம். விசுவாசித்து பாக்கியம் பெறுங்கள்.
உங்களுக்காகவே இயேசு சிலுவையில் மரித்தார். அந்த இயேசுவை நோக்கி பாருங்கள். அவர் கரங்களில், கால்களில் ஆணிகள் கடாவப்பட்டது. அவருடைய தலையில் முள்முடி சூட்டப்பட்டது. அவர் அவமானத்தை சந்தித்தார். அவருக்கு மகிமையான கிரீடம் வைக்கப்படவில்லை, அவமானத்தின் கிரீடம் சூட்டப்பட்டது. உங்களுடைய பாவத்தினிமித்தமே அவர் அடிக்கப்பட்டார்.  உங்களுக்காகவே அவர் மரித்தார், உயிர்த்தெழுந்தார். உங்கள் வேதனை அவருக்கு தெரியும். உங்களை எவ்விதத்திலும் அவமானப்பட அவர் விடமாட்டார். அவர் சிலுவையில் மரித்ததினாலேயே உங்கள் துயரம், கண்ணீர் யாவும் துடைக்கப்படுகிறது. நீங்கள் ஊழியத்திற்காக கொடுக்கும் காணிக்கையினால் நீங்கள் இயேசுவை கனப்படுத்துகிறீர்கள், அவரை கனப்படுத்துகிற உங்களை அவர் கனம்பண்ணாமலிருப்பாரா! நீங்கள் இழந்த எல்லாவற்றையும் அவர் உங்களுக்கு நிச்சயமாக தந்து ஆசீர்வதிப்பார். "உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்" (ஏசாயா 61:7)  உங்கள் எல்லைகளை அவர் விஸ்தாரப்படுத்தும்படி, இன்றைக்கு உங்களை தேடி இந்த ஆசீர்வாதம் வரும்,
Prayer:
என்னை நேசிக்கும் அன்பு பரமபிதாவே,
 
இயேசுவின் நாமத்தில் உம்மிடம் வருகிறேன். அப்பா! எனக்கு ஏற்பட்டிருக்கிற  பிரச்சினையினிமித்தம் அவமானத்தினால் தினமும் நொறுக்கப்படுகிறேனே, என்னை உமது மனதுருக்கத்தினால் தேற்றும். எப்பக்கம் திரும்பினாலும் வெட்கம் என்னை சூழ்ந்திருக்கிறதே என்னை ஒரு விசை கண்ணோக்கிப்பாரும் தேவனே!  என்னை அவமானத்திற்கு தள்ளிய பிசாசை நீர் உமது காலின் கீழ்போட்டு நசுக்கும். எனக்கு ஏற்பட்டிருக்கும் வெட்கத்திற்கு பதிலாக என்னை இரண்டு மடங்கு கனப்படுத்த வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே.
 
ஆமென்!

For Prayer Help (24x7) - 044 45 999 000