Loading...
Evangeline Paul Dhinakaran

இரட்டிப்பான கனம்!

Sis. Evangeline Paul Dhinakaran
13 Jan
சிறுவயதிலேயே ஒன்றன் பின் ஒன்றாக கஷ்டத்தை அனுபவித்த யோசேப்பைக் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். கஷ்டங்களின் மத்தியிலும் தேவன் அவனோடு இருந்தபடியால், ஒரு காலத்தில் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை தேவன் எகிப்து தேசத்தில் உயர்ந்த அதிகாரபூர்வ நிலைக்கு உயர்த்தினார். அங்கு அவன், என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, யோசேப்பு தன் மூத்த மகனுக்கு மனாசே என்று பேரிட்டான். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 41:51,52).  சர்வ வல்லமையுள்ள இறைவன் அவன் நிந்தை அனுபவித்த அதே இடத்தில் இருமடங்கு ஆசீர்வாதத்தை கொடுத்தார். 

நம்முடைய கர்த்தராகிய ஆண்டவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். தேவன் தனக்கு செய்த நன்மையை ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் வசிக்கும் சௌந்தர்யா வினில் என்பவர் பகிர்ந்துகொள்கிறார். 2010-ம் ஆண்டு நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்தோம். ஆனால், போதிய பணம் இல்லாததினால் கட்டுமான வேலைகளை முடிக்க இயலவில்லை. பாதி கட்டப்பட்ட வீட்டில் வசித்துவந்தோம். வீடு கட்டுவதற்கு அரசாங்கம் வழங்கும் கடனுதவிக்கு விண்ணப்பித்தோம். ஆனால், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. ஆகவே, கட்டுமான வேலைகளை நிறுத்திவிட்டோம். மீண்டுமாக கடனுக்காக முயற்சி செய்தபோதும் அது கிடைக்கவில்லை. எட்டு ஆண்டுகள் இதே நிலை நீடித்தது. நாங்கள் குடியிருக்கும் நிலையை பார்த்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். நாங்கள் ஆண்டவரிடம் அழுது ஜெபித்தோம். 2018-ம் ஆண்டு மும்பை காட்கோபரில் ஜெபகோபுரம் மறுகட்டுமானம் செய்யப்படுவதைக் குறித்து ‘இயேசு அழைக்கிறார்’ பத்திரிகையில் வாசித்தோம். எங்களிடம் போதிய அளவு பணம் இல்லாதபோதும்கூட, ஜெப கோபுர கட்டுமானத்திற்கென்று காணிக்கை அனுப்ப முடிவுசெய்தோம். 2018 ஜுலை மாதம் மும்பை காட்கோபர் ஜெபகோபுர கட்டுமான பணிக்கென ரூ.250/- நன்கொடை அனுப்பிவிட்டு, எங்கள் வீட்டு கட்டுமானத்திற்கு ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தோம். ஆச்சரியவிதமாக அதே ஆண்டு அரசாங்கத்திலிருந்து ரூ.85,000/- கடன் உதவி கிடைக்க ஆண்டவர் அருள்புரிந்தார். அது வட்டியில்லா கடனாக எங்களுக்கு வழங்கப்பட்டது. ஆண்டவரே எங்கள் வீட்டை கட்டி எழுப்பினார். இப்பொழுது கட்டுமான பணி முடிவடைந்துவிட்டது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! எங்களுக்காக ஊக்கமாக ஜெபித்த தினகரன் குடும்பத்தினருக்கு நன்றி.
அதே ஆண்டவர் இன்று உங்கள் கண்ணீரையும், அவமானத்தையும் காண்கிறார்.  உங்கள் பிரார்த்தனைக்கு நிச்சயமாக பதில் கிடைக்கும். அவருடைய அன்பின் கண்கள் உங்கள் பதட்டத்தையும், தூக்கமில்லாத இரவுகளையும் காண்கிறது. இன்றும் அதே இறைவன் உங்கள் எதிரிகளுக்கு முன்பாக உங்களை இரட்டிப்பாக ஆசீர்வதிக்கப்போகிறார். “உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்” (ஏசாயா 61:7) என்று சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது. இந்த வலுவான அடித்தளத்தின்மீது நம்பிக்கையோடிருங்கள். உங்கள் வெற்றி உங்களிடம்தான் உள்ளது. ஆகவே உற்சாகமாயிருங்கள்!
Prayer:
அன்பின் பரலோகப் பிதாவே,

உம்முடைய ஆறுதலளிக்கும், உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்காக நன்றி கூறுகிறேன். கர்த்தாவே என்னை ஆசீர்வதித்து, இரட்டிப்பான நன்மையை எனக்கு தந்தருளும். எனது சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல், உமது கட்டளைகளை பின்பற்ற எனக்கு உதவும். என் பிரார்த்தனைக்கு நீர் பதிலளிப்பீர் என்று நான் நம்புகிறேன். நீர் என்னை உயர்த்துகிற வரையிலும் பொறுமையோடு உம்முடைய சமூகத்தில் காத்திருக்க பெலன் தாரும். என்னுடைய பிரார்த்தனைக்கு பதில் தாரும். நான் இழந்த மகிழ்ச்சியின் நாட்களை எனக்கு திரும்பத்தருவீர் என்று விசுவாசிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000