Loading...
Dr. Paul Dhinakaran

பயப்படாதிருங்கள்!

Dr. Paul Dhinakaran
21 Jun
உங்கள் எதிர்காலத்தைக்குறித்து நம்பிக்கையற்றவர்களாய் பயப்படுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டதாய் தோன்றுகிறதா? எந்த காரியம் உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தாலும், பரலோகத் தகப்பனை நீங்கள் தெய்வமாக கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (எரேமியா 29:11) என்று கூறுகிறார். உங்கள் வாழ்விலும் நீங்கள் பயப்படுகிற காரியமல்ல, நீங்கள் செழிப்படையும்படியாக சமாதானத்திற்கேதுவான தேவதிட்டம் நிறைவேறும். ஆகவே பயப்படாதிருங்கள்!

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, காயத்ரி என்ற சகோதரி இயேசு அழைக்கிறார் கூட்டமொன்றில் தன் சாட்சியை பகிர்ந்துகொண்டார். அவர்களுடைய மகன் மருத்துவ படிப்பை முடித்து விரிவுரையாளராக சேர்ந்தார். மகள் எம்.பி.ஏ. முடித்திருந்தாள். பிள்ளைகளை படிக்க வைத்ததினிமித்தம் பயங்கரமான பணக்கஷ்டம். கடனை அடைப்பதற்கு வீட்டை விற்றுவிடலாம் என தீர்மானித்து வீட்டை விற்பதற்காக இரண்டு வருடங்கள் முயற்சி செய்தும், விற்கமுடியவில்லை. மற்றொரு பக்கம் கடன், வட்டி ஏறிக்கொண்டேபோனது. ஒருநாள் ஒரு இடத்திற்கு செல்ல ஆட்டோவில் உட்கார்ந்தார்கள். ஆட்டோவில் முழுநேரமும் அழுதுகொண்டே போனார்கள். ஆட்டோக்காரர், “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டு, “இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரம் என்று ஒன்று இருக்கிறதே, தெரியாதா? அங்குபோனால் உங்களுக்காக ஜெபிப்பார்கள்” என்று சொன்னார். 
முதன்முறையாக அந்த சகோதரி ‘இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரத்துக்கு வந்து ஆண்டவரின் அன்பைக் குறித்துக் அறிந்துகொண்டார்கள். ஜெபவீரர்கள் அவர்களுக்காக ஜெபித்தார்கள். அந்த சகோதரிக்கு பெரிய ஆறுதல் கிடைத்தது. அதன்பிறகு அவர்களுக்கு ‘இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பார்க்கும்படி நிகழ்ச்சி நிரல்களை கொடுத்தார்கள். அந்த சகோதரியும் ‘இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சரியம்! வெகு விரைவில் ‘இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவர்களது பெயரை சொல்லி அழைத்து, “காயத்ரி, நீங்கள் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தைக் குறித்த கவலை உங்களை வாட்டுகிறது. ஆண்டவர் உங்கள் வாழ்க்கைiயை கட்டியெழுப்புகிறார். அவர் உங்களுக்கு தகப்பனாக இருந்து பாக்கியம் உங்களை தேடிவரும்படி செய்கிறார்; கவலைப்படாதிருங்கள்!” என்று நான் கூறியிருக்கிறேன். அவர்கள் உள்ளத்தில் சந்தோஷம் வற்றாத நீரூற்றாய் பொங்கி எழுந்தது. அதன்பிறகு ஒரே மாதத்தில் வீட்டை விற்றார்கள். பணக்கஷ்டம் மறைந்தது. பிள்ளைகளும் தங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கென்று ஒப்புக்கொடுத்தனர். அதுவரைக்கும் 25,000/- ரூபாய் சம்பளம் பெற்ற மகனுடைய சம்பளம் வெகுவிரைவில் ரூ.75,000/- ஆக உயர்ந்தது. மகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துப் போனாள். கடன் யாவும் மறைந்தது. முழுக் குடும்பமும் ஆண்டவருடைய அன்பை அறிந்து கொள்ளும்படி தேவன் கிருபை செய்தார். 

பிரியமானவர்களே, “...நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார்” (ஏசாயா 35:4), நீங்கள் பயத்தில் மூழ்கிப்போவதற்கு தேவன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அவர் நிச்சயமாக உங்களை கைவிடமாட்டார் காப்பாற்றுவார். தேவனுக்கு பயப்படுகிறவர்களின் வாழ்வை அவர் நன்மையானவைகளால் நிரப்புவார். அவர் எப்போதும் உங்களோடுகூட இருக்கிறார். ஆகவே, தைரியமாயிருங்கள்!
Prayer:
அன்பின் பரலோகத்தகப்பனே,

என் மனதிலுள்ள எல்லாவிதமான பயத்தையும் உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன்.  என் இருதயத்திலுள்ள பயத்தை நீக்கி, என் நிலைமையை மாற்ற உமது வல்லமையினால் கூடும். என்னை செழிப்பாக்குகிற உமது திட்டங்களுக்காக நன்றி கூறுகிறேன். நான் பயப்படுகிற உபத்திரவத்திலிருந்து நீர் என்னை சீக்கிரமாய் விடுவிப்பீர் என்று நான் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன். மேற்கண்ட சகோதரிக்கு நீர் செய்த அதிசயத்தை என் வாழ்விலும் செய்து, என் எதிர்காலத்தை ஆசீர்வாதத்தினால் நிரப்பியருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000