Loading...
Stella dhinakaran

நன்மை செய்திடுங்கள்!

Sis. Stella Dhinakaran
30 Jun
“நன்மை செய்வது” கர்த்தருக்கு பிரியமானது. எனவே, கர்த்தர் அருளும் கிருபையின்படி, நாம்மாலியன்ற “நன்மை”யை மற்வர்களுக்கு செய்ய முயலுவது கர்த்தருக்கு பிரியமானது. “அப்படிப்பட்ட தெய்வீக சிந்தையை எனக்கும் தாரும்” என்று கர்த்தரிடம் கேட்போமானால், “கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்” (மத்தேயு 7:8) எனும் வேத வசனத்தின்படி, கர்த்தர் அந்த தெய்வீகக் கிருபையை நமக்கும் தருவார். “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்” (தீத்து 3:5,8). தேவன் நம்மை தமது கிருபையினால் இரட்சித்து நன்மை செய்யும்படி வைத்திருக்கிறார்.

ஒரு அம்மாள் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் காணப்படுவார்கள். ஆனால், ஒரு சமயம், அவர்கள் சோர்வாக காணப்பட்டபொழுது, அவர்களை பார்க்க வந்திருந்த அருமையான ஒரு ஏழைத்தாய், அவர்களைப் பார்த்து, “நீங்கள் இப்படி சோர்வாயிருந்து நான் பார்த்ததேயில்லையே, ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டதோடு நின்றுவிடாமல், தன் கையில் தனக்கென்று வைத்திருந்த 2 ரூபாய் நோட்டை இந்த அம்மாள் கையில் திணித்துவிட்டு சென்றார்கள். ஆம்! இந்த அம்மாளின் தேவை அந்த நேரம் பணம் தான். அந்த ஏழைத் தாய், தன்னிடமிருந்த அந்த கொஞ்சம் பணத்தையும் அன்போடும், தியாக சிந்தையோடும் கொடுத்துவிட்டு சென்றார்கள். இதுதான், “நன்மை செய்வது.” எதையும் எதிர்பார்த்து செய்வதல்ல! இந்த சிந்தையின்மூலம் மனம் உடைந்த மக்களை ஆற்றித் தேற்றி, ஆண்டவரின் பிரியத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
அன்பானவர்களே, நீங்கள் இதுவரை நன்மை செய்யாத கடின இருதயமுள்ளவர்களாயிருந்தால், இன்று முதல் கர்த்தருக்காக நன்மை செய்ய தொடங்குங்கள். கர்த்தர் பல மடங்கு அதிகமாக உங்களுக்கு ஆசீர்வாதங்களை அருளிச்செய்வார். வேதாகம காலத்தில் வரிவசூலிப்பவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பாhக்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக்கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். சகேயு, கர்த்தரை நோக்கி: என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்” (லூக்கா 19:2-10). தேவன் சகேயுவை இரட்சித்தபோது, அவருடைய வாழ்க்கை மாற்றப்பட்டது. மற்றவர்களுக்கு நற்கிரியைகளை செய்யும்படி அவரை ஊக்குவித்தது. தேவனுடைய இரட்சிப்பு நம் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இரட்சிப்பு நம்மை நற்காரியங்களை மட்டுமே செய்யவைக்கிறது.
Prayer:
அன்புள்ள இரட்சகரே,

இன்று முதல் உமது தெய்வீகம் நிறைந்த “நன்மை செய்யும்” சிந்தையை எனக்கும் தாரும். உம் வார்த்தையின்படியே சோர்வில்லாமல் அதை நிறைவேற்ற எனக்கும் அருள் செய்ய வேண்டும். உமது பார்வையில் சிறந்த காரியங்களை செய்யும்படி என்னை இரட்சித்தருளும். உமது வார்த்தையின்படி உமது பார்வைக்கு பிரியமாய் நடக்க கிருபை தாரும்.

இயேசுவின் நாமத்தில் கண்ணீரோடே ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000