Loading...
Stella dhinakaran

அதிசயங்களை தியானித்து பேசுங்கள்!

Sis. Stella Dhinakaran
15 Jun
அன்பானவர்களே, ஆண்டவர் செய்த அதிசயங்களை நாம் மற்றவர்களுக்கு விவரித்து சொல்ல வேண்டும். “...இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (மத்தேயு 12:34) என்று வேதம் கூறுகிறதுபோல, நேரம் கிடைக்கும்போதெல்லாம், நாம் ஆண்டவரைப் பற்றிய நற்காரியங்களை பேசுகிறோமா? ஆண்டவர் நமக்கு செய்கிற நன்மைகளைக் குறித்து யாவருக்கும் சொல்லுகிறோமா? “அவரைப்பாடி, அவரை கீர்த்தனம் பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்து பேசுங்கள்” (1 நாளாகமம் 16:9; சங்கீதம் 105:2, 136:4) என்று தாவீதும் சொல்லுகிறான். “என் மகிமையை நான் வெறொருவனுக்கும் கொடேன்” என்கிறார் நம் ஆண்டவர் (ஏசாயா 48:11). நாம் அவரை ஸ்தோத்திரிப்பது அவருக்கு பிரியமான காரியம். நாம் ஏறெடுக்கும் ஸ்தோத்திரபலிகளை அவர் சுகந்த வாசனையாக முகர்ந்து கொள்கிறார் (ஆதியாகமம் 8:21). “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்கு செலுத்தக்கடவோம்” (எபிரெயர் 13:15).

யோவான் 4-ம் அதிகாரத்தில், சமாரியா ஸ்திரீயைக் குறித்து வாசிக்கிறோம். அவள் ஆண்டவரிடத்தில் வரும்பொழுது, பாவத்தில் ஊறின ஸ்திரீயாக வருகிறாள். ஆனால், ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க, அவள் உள்ளத்தில் விசுவாசம் பிறக்கிறது. அவளுடைய விசுவாசத்தின் மேலீட்டால் ஆண்டவர் அவளுக்கு புது ஜீவியத்தைக் கொடுக்கிறார். உடனடியாக அவள் ஊருக்குள்ளே போய் தன் ஊரார் எல்லோருக்கும் ஆண்டவரைப் பற்றி விவரித்து சொல்லுகிறாள். சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் இயேசுவின்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள் (யோவான் 4:28,29,39).
என் வாழ்க்கையில் நான் வெறுமையான பாத்திரமாக வாழ்ந்து வந்தேன். ஆனால், எனக்கு திருமணமானவுடன், என் கணவரின் பின்னால் இருந்து அவருக்கு சேவை செய்தேன். நான் அபிஷேகம் பெற்றதுகூட யாருக்கும் தெரியாது; அவ்வளவு பயந்த சுபாவம் கொண்டவள். அடங்கி ஒடுங்கி காணப்படுவேன். அப்போது ஆண்டவர், என்னைப் பார்த்து, “மகளே, எவ்வளவு நாளைக்கு நான் ஒரு பேதை என்று சொல்லிக்கொண்டிருப்பாய், உனக்கு நேரமே இல்லை என்று கூறுமளவிற்கு உன்னை நான் வல்லமையாக உபயோகிக்கப்போகிறேன்” என்றார். “நானாவது, ஊழியம் செய்கிறதாவது” என்று நினைத்துக்கொண்டேன். என் கணவரது வங்கிப் பணியில் மாறுதலாகி, நாங்கள் சென்னைக்கு வந்தோம். அப்போது என் கணவர் சகோதரர் தினகரன் அவர்களுடைய ஜெபத்தை நாடி பல கடிதங்கள் வர ஆரம்பித்தன! அந்த கடித ஊழியத்தில் மிகச் சிறிய அளவில் நானும் ஈடுபடலானேன். நாட்கள் செல்ல, செல்ல கர்த்தர் ஊழியத்தை பெருகச்செய்தார். கர்த்தர் எனக்கு பிரசங்கிக்க வாசல்களைத் திறந்தார். பிறகு எஸ்தர் ஜெபக்குழு ஊழியத்தைத் தந்தார். கர்த்தர் கூறியதுபோலவே, இன்றைக்கு நேரமில்லையே என்று சொல்லுமளவிற்கு, ஊழியத்தை பெருகச்செய்து, வல்லமையாக பயன்படுத்தி வருகிறார்.

எனக்கு அன்பான தேவஜனமே, நீங்களும் கையில் கிடைக்கும் சிறு ஊழியத்தையும் உங்கள் முழு பலத்தோடு செய்யுங்கள். சின்னவன் ஆயிரமாவான்.  சிறியவன் பலத்த ஜாதியாவான் (ஏசாயா 60:22) என்று வாக்கருளிய ஆண்டவர், உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார். கவலைப்படாதிருங்கள்! உங்கள் வாழ்க்கையில் ஆழங்களிலிருந்து அதிசயங்களை விளங்கப்பண்ணுவார்;  குறைவுகளையெல்லாம் நிறைவாக்குவார்; ஊழியத்தில் வல்லமையாய் உங்களை பயன்படுத்துவார்; உங்கள் மூலம் அதிசயங்களை காணப்பண்ணுவார். 
Prayer:
அதிசயங்கள் செய்கிற தேவனே,

இந்த நாளிலும் நீர் எனக்கு கொடுத்திருக்கிற சிறு ஊழியத்தை என் முழு பெலத்தோடு செய்யும்படி என்னை பெலப்படுத்தும். என் வாழ்க்கையில் உம்முடைய அதிசயங்களை விளங்கப்பண்ணும். நான் பெற்ற அற்புதங்களை மற்றவர்களுக்கு விவரித்துச் சொல்லக்கூடிய  சாட்சியுள்ள இருதயத்தை எனக்கு தந்தருளும். என் சாட்சியை கேட்கிறவர்களின் இருதயத்தில் நீரே கிரியை செய்து அவர்களை உற்சாகப்படுத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000