Loading...

தேற்றரவாளன்!

Shilpa Dhinakaran
10 Jan
தேற்றரவாளனாகிய கர்த்தர் ஒருபோதும் உங்களை ஆதரவற்றவர்களாக விடமாட்டார். 2007ல் என் அன்பான பாட்டியை நான் இழந்தேன். நான் பள்ளிக்கு செல்லும்போது அவர்கள் எப்போதும் எங்களுடைய வீட்டு வராந்தாவில் அமர்ந்துகொண்டு, என்னை பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் நான் வீடு திரும்பும்போதும் அவர்கள் என் நெற்றியில் முத்தமிட்டு என்னை ஆசீர்வதிக்க காத்திருப்பார்கள். இறுதியாக, அவர்களை பார்த்த என்னால் மறுநாள் காண முடியாமல் போனது உண்மையில் என் இருதயத்தை உடைத்தது. கரீன் வொயிட் எழுதிய பிரபலமான மேற்கோள் ஒன்று, “கண்ணீரை ஒரு படிக்கட்டாகவும், நினைவுகளை ஒரு பாதையாகவும் உருவாக்க முடிந்தால், உங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர நான் சொர்க்கம் வரை நடப்பேன்.” இந்த மேற்கோளை என் பாட்டியை இழந்தபோது நான் அதிகமாய் உணர்ந்தேன். அவர்களை மீண்டுமாக அழைத்து வந்து இன்னும் சில வருடங்கள் என்னோடு வைத்துக்கொள்வதற்கு ஏதாகிலும் செய்ய முடியுமா என்று என் மனது அதிகமாய் ஏங்கியது. ஆனால், ஒவ்வொரு நாளும் கர்த்தர் என்னோடு பேசிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு நாளும் எனக்கு ஆறுதல் கூறினார். அவர்கள் இப்போது ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் எனக்கு நினைவூட்டினார். உடனடியாக என்னைச் சுற்றிலும் ஒரு போர்வை மூடுவதை நான் உணர்ந்தேன். தேவனுடைய அன்பால் நான் ஆறுதலடைந்தேன். அந்த ஆறுதல் என் ஆவியை உற்சாகப்படுத்தியது. ஒருநாள் நான் என் பாட்டியை சந்திப்பேன் என்பதை நம்புகிறேன். 
இன்றைக்கும் உங்களில் பலர் இதே சூழ்நிலையில் இருக்கலாம். நீங்கள் நேசிப்பவரை இழந்திருக்கலாம்; ஒருவேளை விவாகரத்து/பிரிந்திருக்கலாம் அல்லது மதிப்புமிக்க ஒன்றை நீங்கள் இழந்திருக்கலாம். இழப்பு எந்த வயதிலும் வேதனையே. எனக்கு அன்பானவர்களே, கலங்காதீர்கள்! ஆறுதலின் தெய்வம் எப்போதும் உங்கள் பக்கத்தில்தான் இருக்கிறார். அவர், “நான் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டேன்” என்று வாக்குறுதி அளித்துள்ளார். நீங்கள் ஒருபோதும் தனிமையாக இல்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள். மார்த்தாள் மரியாளின் சகோதரனான லாசரு மரித்தபோது, இயேசு அவர்களுக்காக அழுது அவர்களை ஆறுதல்படுத்தியதுபோல, அவர் உங்களையும் ஆறுதல்படுத்துவார். “நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவான் 14:18) என்ற இன்றைய வாக்குத்தத்தத்தின்படி, அவருடைய ஆறுதல் எல்லா நேரங்களிலும் உங்களைச்  சூழ்ந்திருக்கும். அவர் உங்கள் கண்ணீரைக் காண்கிறவர். உங்கள் ஜெபங்களைக் கேட்கிறவர். உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருக்கும் வேதனைகளை ஆண்டவரிடத்தில் சொல்லுங்கள், “...நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங்கீதம் 23:4). ஆம், அவர் உங்களை ஆறுதல்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பார்.  
Prayer:
கர்த்தராகிய இயேசுவே,

நீர் ஆறுதலின் தெய்வமாக இருப்பதற்கு நன்றி. எப்போதும் என்னோடுகூடவே நீர் இருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு ஆறுதல் தேவைப்படும்போதெல்லாம் நீர் என்னை ஆறுதல்படுத்துவதற்காக நன்றி. உமது பிரசன்னம் என்னோடு தங்கியிருந்து என்னை தேற்றுவதற்காய் நன்றி. என் ஆவி ஆத்துமா சரீரத்தை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். நீரே என்னை பொறுப்பெடுத்து என்னை ஆசீர்வதித்தருளும். நான் உம்மை மிகவும் நேசிக்கிறேன் அப்பா.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000