Loading...
Stella dhinakaran

கர்த்தரை அண்டிக்கொள்ளுங்கள்!

Sis. Stella Dhinakaran
14 Aug
“அண்டிக்கொள்ளுதல்” என்ற வார்த்தைக்கு “உறுதியாக பற்றிக்கொள்ளுதல் அல்லது இறுக பிடித்துக்கொள்ளுதல்” என்று பல அர்த்தங்கள் உண்டு. இன்றைய நாட்களில் இந்த பொல்லாத உலக வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நாளும் பலவித பயங்கரமான காரியங்களையே பார்த்து வருகிறோம். கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மத்தியிலும்கூட பொறாமை, எரிச்சல், துர்க்குணம் என்று பற்பல கேடான செயல்கள் மற்றும் கசப்பான வைராக்கியம் விரோதம், பொய் சொல்லுதல் போன்ற பொல்லாத பிசாசின் குணங்கள் யாவும் காணப்படுகிறது (யாக்கோபு 3:14-16). இத்தகைய குறைவுகள் வருவதற்கு காரணம், வாழ்க்கையில், “கிறிஸ்துவை அண்டிக்கொள்ளுகிற, அவரோடு உறவாடுகிற, தெய்வீக வாழ்வு” கொஞ்சமும் இல்லாதிருப்பதுதான். அப்படியானால் ஆண்டவரிடமிருந்து நாம் இந்த கிருபையை எவ்வாறு பெறுவது?

வேதத்தில் பழைய ஏற்பாட்டில், ஏனோக்கு, நோவா என்ற இரண்டு பக்தர்களைக் குறித்து வாசிக்கிறோம். ஏனோக்கும், நோவாவும் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்கள் (ஆதியாகமம் 5:24;6:9). ஆபிரகாம் ஆண்டவருக்கு சிநேகிதனாய் இருந்தார் (யாக்கோபு 2:23; ஏசாயா 41:8). பக்தன் மோசே இரவும் பகலும் நாற்பது நாட்கள் ஆண்டவரோடு அவர் சமூகத்தில் காத்திருந்தார் (யாத்திராகமம் 34:28). இதுதான் ஆண்டவரை அண்டிக்கொள்ளுகிற வாழ்க்கை. இப்படி பலரை பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம். புதிய ஏற்பாட்டிற்கு வரும்பொழுது, ஆண்டவருடைய தாயாராகிய மரியாள், தேவகிருபையினால் நிறைந்து, ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள் என்று பார்க்கிறோம் (லூக்கா 1:28,42). இன்னும் ஆண்டவரைவிட்டு தூரமாக வாழ்ந்த பாவியான ஸ்திரீயைக்குறித்து வாசிக்கிறோம். அவள் ஒரு பரணியில் பரிமள தைலம் கொண்டு வந்து, அவரது பாதங்களை தன் கண்ணீரினால் கழுவி, தன் தலைமயிரினால் துடைத்து, பாதத்தை முத்தஞ்செய்து, பரிமள தைலத்தை பூசினாள். அவளின் செய்கையை நினைத்து அவரது உள்ளம் பரவசமடைந்து “இவள் செய்த அநேக பாவங்கள் இவளுக்கு மன்னிக்கப்பட்டது; உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது: சமாதானத்தோடே போ ” (லூக்கா 7:37-50) என்றார். இதுதான் ஆண்டவரோடு இணைந்து கொள்வதினால் நாம் பெறுகிற தெய்வீக ஆசீர்வாதம்!
சிறு பிள்ளைகள் பெற்றோரோடு சாலையைக் கடக்கும்பொழுது, பெற்றோர் சொல்லுகிற ஒரு காரியம். “என் கையை கெட்டியாய் பிடித்துக்கொள்” என்பது ! அதைத்தான் “உடும்பு பிடி” என்று சொல்லுவார்கள். உடும்பு பிடித்தால் விடவே விடாது. அதேபோல், நாமும் தேவனாகிய காத்தரை விடாமல் இறுகப் பிடித்துக்கொள்ளுவோம். அப்பொழுது அவருடைய அற்புதங்கள் நம் வாழ்வில் நடக்கும். தேவதிட்டம் நிறைவேறும். மற்றவருக்கு சாட்சியாய் நம் வாழ்க்கை மாறும். இத்தகைய வாழ்க்கைதான் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையாகும். “...அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” (சங்கீதம் 2:12) என்ற வார்த்தையின்படி, மேற்கண்ட வேதாகம பக்தர்களைப்போன்று நாமும் இரவும் பகலும் தேவசமூகத்தில் காத்திருந்து அவரை பற்றிக்கொண்டு பாக்கியம் பெறுவோம். 
Prayer:
அன்பின் தேவனே,

 இந்த நாளிலும் உம்மை அண்டிக்கொள்ளுகிற பாக்கியத்தை குறித்து அறிந்துகொள்ளும்படி செய்ததற்காக உமக்கு நன்றி!  அனுதினமும் உமது வார்த்தையை வாசித்து ஜெபிக்கும் கிருபையை எனக்குத் தாரும். உம்மோடு இணைந்து வாழ்கிற தெய்வீக வாழ்வை எனக்குத் தந்தருளும். உமது பரிசுத்த ஆவியினால் என்னை அளவில்லாமல் நிரப்பும். நீர் என் இரட்சகராயிருந்து என் வாழ்வை வழிநடத்தும். என்னுள், என் வீட்டில் உமது பிரசன்னம் எப்போதும் நிலைத்திருக்க அருள்செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000