Loading...
Stella dhinakaran

தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்!

Sis. Stella Dhinakaran
08 Sep
கர்த்தர் யாரை தமது ஜனமாகத் தெரிந்துகொள்ளுகிறார்? பாவிகளாகிய நம்மை, சகல அக்கிரமங்களினின்றும் மீட்டு, இரட்சித்து, தமக்குரிய சொந்த ஜனங்களாக சுத்திகரிக்கும்படி தம்மையே அர்ப்பணித்தார் (தீத்து 2:14; மத்தேயு 1:21). இவ்வாறு தம்முடைய சொந்த  ஜனங்களாக மாற்றி, அவர்கள் மத்தியில் அவர் வாசம்பண்ணி, அவர்களுக்கு பெலன் தந்து, அவர்களை ஆசீர்வாதமாக வழிநடத்துவார். “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” (1 பேதுரு 2:9). நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம். பழைய ஏற்பாட்டு நாட்களில் தேவன் ஆபிரகாமையும் அவனுடைய தலைமுறையையும் தேர்ந்தெடுத்து அவர்களை தம்முடைய ஜனமாக வேறுபடுத்தியதைபோலவே, இன்று  உங்களையும் ஆண்டவர் தமக்கென்று தெரிந்தெடுத்துள்ளார். ஆபிரகாமுக்கு சொந்தமான ஆசீர்வாதங்கள் நமக்கும் சொந்தமானவை.
 
இயேசு கிறிஸ்துவை அறியாத ஒரு குடும்பத்தில் மாற்றி மாற்றி ஒவ்வொருவராக எல்லாரும் வியாதிப்பட்டனர். பணமெல்லாம் மருத்துவ செலவுக்காக செலவழித்தும் வியாதி நீங்காததால், குடும்பத்தில் சந்தோஷம், சமாதானம் எதுவுமற்ற நிலையில் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தனர். அவ்வேளையில் ஒரு அம்மாள், இந்த குடும்பத்தாரை ‘இயேசு அழைக்கிறார்’ ஜெபகோபுரத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கு, ஜெபகோபுர ஊழியர்கள் காண்பித்த அன்பும், ஜெபித்த வல்லமையான ஜெபமும், அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆண்டவராகிய இயேசுவின் அன்பை அறிந்து, அவருக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்து, குடும்பமாக அவருக்கு சொந்தமாக மாறினார்கள். அதற்கு பிறகு வியாதிகள் மறைந்தன. தெய்வீக அன்பு அவர்கள் குடும்பத்தை ஒருமனப்படுத்தி, அவர்களை தெய்வீக சந்தோஷத்தால் நிரப்பியது.
அன்பானவர்களே, இவ்விதமாகத்தான் ஆண்டவராகிய இயேசு உங்களிலும் அன்புகூர்ந்து, உங்களை தமக்கு சொந்தமான பிள்ளைகளாக மாற்றிக்கொள்ளவும், நீங்கள் சரீரத்தில் அனுபவிக்கிற எல்லா வியாதிகளையும் நீக்கி, உங்களை பெலப்படுத்தவும், இன்றும் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். எனவே, நீங்களும் இன்று முதல் அவரை அறிந்து, அவரைத் தேடுங்கள்.
Prayer:
அருமை ஆண்டவரே!
 
நீர் எனக்காக சிலுவையில் உம்மையே தியாக பலியாக அர்ப்பணித்து என்னை மீட்க சித்தம் கொண்டபடியால் உமக்கு ஸ்தோத்திரம்! என் சரீரத்தின் பாடுகளையும் வியாதிகளையும் நீர் சிலுவையில் சுமந்துவிட்டபடியால், என்னை நீர் அவைகளினின்று நீக்கி, பரிபூரண ஆசீர்வாதத்தைத் தரவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000