Loading...
Dr. Paul Dhinakaran

நல்ல பங்கை தெரிந்துகொள்ளுங்கள்!

Dr. Paul Dhinakaran
25 Jun
உங்கள் வாழ்வின் நோக்கத்தைப்பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? இயேசு போதித்தபடி, ஒரு காரியம் நம் வாழ்வில் மிக முக்கியம். இயேசு மார்த்தாள் மரியாள் வீட்டிற்குச் சென்றபோது, மார்த்தாள் இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் சேவை செய்வதில் மும்முரமாக இருந்தாள். அதே நேரத்தில் மரியாள் கர்த்தருடைய பாதத்தில் அமாந்து தேவனுடைய வார்த்தைகளை கேட்பதை தெரிந்துகொண்டாள். நமது பார்வையில், மார்த்தாள் செய்தது மிகவும் விலையேறப்பெற்றதாக தோன்றினாலும், இயேசுவுக்கு மரியாள் செய்தது தான் புத்திசாலித்தனமாக தோன்றியது. அவர் பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்த மார்த்தாளை அமைதிப்படுத்தினார். “மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்” (லூக்கா 10:41,42). பல நேரங்களில் நாம் இந்த உண்மையை மறந்து விடுகிறோம். நாம் பல நல்ல காரியங்களைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறோம். ஆனால், ஆண்டவரோ அவரை தேடுவதில் கவனம் செலுத்த வேண்டுமென்று விரும்புகிறார். அவருடனான ஐக்கியம் மிக முக்கியமானது என்பதை மறந்து விடுகிறோம்.  

ஒருமுறை நான் வில்லியம் பிரன்ஹாம் என்பவரின் வாழ்க்கை சரிதையைப் படித்தேன். அதில், தேவன் அவரை இரட்சித்து, தம்முடைய ஊழியத்தை இணைத்தபொழுது, முழு நேரமும் போதனையும், பிரசங்கமுமாகவே இருந்ததால், தேவனின் பாதத்தில் நேரத்தை செலவிட நேரமில்லாமல், காலப்போக்கில் ஆவிக்குரிய வல்லமையை அவர் இழந்துபோனார் என்று எழுதியிருந்தார். இந்த தோல்விகளினால் அவர் முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். அதாவது, எவ்வளவுக்கு அதிகமாக அவர் வேதம் வாசித்து, ஆண்டவருடைய பாதத்தில் காத்திருக்கிறாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் ஆண்டவருடைய வல்லமையைப் பெற்று, ஊழியங்களில் அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்தார்.
பிரியமானவர்களே, நீங்களும் இதைப்போன்ற சூழ்நிலைகளை கடந்து வரலாம். மார்த்தாளைப் போன்று சில நேரங்களில் நமது வேலைகளிலே மூழ்கி இருக்கலாம். ஆலயத்தில் தன்னார்வத்தொண்டு போன்ற சேவைகளைச் செய்யலாம். ஆனால், நல்ல பங்கை தெரிந்துகொண்டு அதை செய்வதற்கு முயற்சிக்கிறீர்களா?  நண்பர்களே, கர்த்தர் உங்கள்மூலமாக தேவபணிகள் நடைபெறும்பெடி உங்களை உருவாக்கியிருக்கிறார். "கர்த்தர் வீட்டை கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா” (சங்கீதம் 127:1). நீங்கள் செய்ய வேண்டிய காரியம், நல்ல பங்காகிய அவரை தெரிந்துகொண்டு அவருடைய பாதத்தில் காத்திருப்பதே. அவருடனான உங்கள் ஐக்கியத்தை விட்டுவிடாதிருப்பது மிக முக்கியம். தேவனுடைய காலடியில் அதிக நேரம் செலவிடுங்கள். “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (மத்தேயு 7:24) என்று ஆண்டவர் கூறுகிறார். இயேசு கூறிய வார்த்தைகளை நாம் கவனித்தால் மட்டுமே சூறாவளியைப்போன்று வருகிற பிரச்சினைகள் நம்மை தாக்கினாலும் நாம் அசையாமல் நிலைத்திருப்போம். 
Prayer:
அன்புள்ள பரம தகப்பனே,

இந்த நாள் வரை நான் உமக்காக ஓடி ஊழியஞ்செய்து திருப்தியாயிருந்தேன். மார்த்தாளைப்போன்று உமக்கு சேவை செய்யும் வாஞ்சை இருந்தாலும், உமது பாதத்தில் அமர்ந்த மரியாளைப்போல, நான் நல்ல பங்கைத் தெரிந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். அனுதினமும் வேதத்தை தியானித்து, அதிக நேரம் உம் பாதத்தில் செலவு செய்கிற கிருபையை எனக்கு தந்தருளும். நீர் என்னிடத்தில் ஒப்புவித்த வேலைகளை திறன்பட செய்துமுடிக்க தினமும் அதிகாலையில் உமது பெலனை வல்லமையை பெற்றுக்கொள்ள வழிநடத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000