Loading...
DGS Dhinakaran

குடும்பத்தை கவனித்தல்!

Bro. D.G.S Dhinakaran
06 Dec
தன்னையே சார்ந்திருக்கும் தன் அருமை மனைவியும் பிள்ளைகளும் பிற்காலத்தில் குறைவின்றி வாழவேண்டுமே என்ற நோக்கத்தோடு அவர்களுக்கென பொருளைச் சேர்த்து வைப்பது ஒவ்வொரு குடும்பத் தலைவன்மீதும் விழுந்த கடமையன்றோ. “ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பார்?” (1 தீமோத்தேயு 3:5) என்ற வேத வசனத்தின்படி, சிறிய காரியங்களில் நாம் உண்மையுள்ளவர்களாயிருந்தால், தேவன் நம்மிடத்தில் பெரிய காரியங்களை எவ்வாறு ஒப்படைப்பார். 

தங்களை பக்தியுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்ளும் ஒருசில பெற்றோர் தங்கள் வருமானத்தையும், அதோடுகூட தங்கள் பிள்ளைகளின் வருமானத்தையும் இஷ்டம்போல் செலவு செய்வார்கள். ஒன்றும் சேர்த்து வைக்கமாட்டார்கள். வயது வந்த பெண்கள் உட்பட ஒருவருக்கும் திருமணமும் செய்து வைக்கமாட்டார்கள். யாராவது அவர்களுக்கு புத்திமதி கூறினாலும் கூட அதை எற்றுக்கொள்ளமாட்டார்கள். கர்த்தர் என் பிள்ளைகளின் காரியங்களைக் கவனித்துக்கொள்வார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபமாய் இருக்கிறது. எனவே, எங்களுக்கு உலக ஐசுவரியம் யாதொன்றும் வேண்டாம். நாங்கள் குடும்பமாய் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட காத்திருக்கிறோம்” என்று பிதற்றுவார்கள். அதனால் அந்தோ! திடீரென பக்தி முதிர்ந்த அந்த பெற்றோர் மரணமடைகின்றனர். அதனால் அனாதையாகும் தம் பிள்ளைகளுக்குப் பெரும்பாலும் அவர்கள் வைத்துப்போவது கடன் சுமையே! அந்த பிள்ளைகளோ கண்கலங்கி செய்வதறியாது வாழ்கின்றனர். “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான் “ (1 தீமோத்தேயு  5:8).

ஒரு பொறுப்பான மாமியாராகிய நகோமி தனது மருமகள் ரூத்திடம், “என் மகளே! நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?” (ரூத் 3:1) என்று கூறுகிறது போல, ஞானத்தின் தேவனுடைய கரத்தில் அவளை அர்ப்பணித்தாள். அதுபோலவே நாமும் நம்மை சார்ந்தவர்களின் நல்வாழ்வைத் தேடுவது நம் அனைவர்மீதும் விழுந்த கடமையாகும். 
ஞானவான்கள் தங்களுடைய தொழிலில் பிற்காலத்தில் எத்தகைய நஷ்டம் வந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய வழியை முதலிலேயே செய்து வைப்பதிருப்பார்கள். “மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?” (பிரசங்கி 7:16) என்று வேதம் கூறுகிறது. உங்களுடைய ஒவ்வொரு திட்டத்தையும் விருப்பத்தையும் இறைவனிடம் சமர்ப்பியுங்கள். எல்லாவற்றிலும் தேவ ஞானம் வெளிப்பட காத்திருங்கள். தேவனுடைய வார்த்தை உங்களுக்குள்ளும் நீங்கள் செய்கிற யாவற்றிலும் கிரியை நடப்பிக்க அனுமதியுங்கள். அப்பொழுது உங்கள் வாழ்க்கை எனும் படகில் நீங்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்.
Prayer:
அன்பின் தகப்பனே,

நீர் எனக்கு கொடுத்த குடும்பத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். எனது குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் ஆசீர்வதித்தருளும். அவர்களைக் நன்றாக கவனித்துக்கொள்ளும் நிலையில் நீர் என்னை வைத்திருப்பதை நான் ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன். அவர்களின் ஒவ்வொரு தேவையையும் சந்திக்கும்படி எனக்கு பெலன் தாரும். எந்தவொரு வெறுப்பும் அல்லாமல் என் குடும்பத்தினருக்கு அன்போடு சேவை செய்யும் இருதயத்தை எனக்கு தந்தருளும். எப்பொழுதும் உமது சித்தம் செய்யவும், சரியான வழிநடத்துதலில் செல்லவும் உமது ஞானத்தால் என்னை நிரப்பும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000