Loading...
Paul Dhinakaran

பாதுகாப்பும், பராமரிப்பும்!

Dr. Paul Dhinakaran
29 Dec
பெரிய அல்லது சிறிய காரியங்களையும்கூட, தேவன் பொறுப்பெடுத்துக்கொள்கிறார். “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (லூக்கா 12:7) என்று இயேசு கூறியிருக்கிறார். நமது பரமபிதாவின் பார்வையில் எதுவும் சிறியதோ, பெரியதோ அல்ல. தேவனால் எல்லாம் கூடும். யோனத்தானுடைய வாழ்க்கை காப்பாற்றப்பட்டதை நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். “ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய ரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள். அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்” (1 சாமுவேல் 14:45). ஆம், உண்மையிலேயே தேவன் தம்முடைய பிள்ளைகளை மீட்டு, அவருடைய பார்வையில் நாம் சிறப்புடையவர்கள் என்பதை நிரூபிக்கிறார். 

சமீபத்தில் எங்களது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஒரு சகோதரி, தேவன் அவர்களுக்குச் செய்த ஆசீர்வாதங்களை பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய மகனுக்கு ஒரு விபத்தில் பற்கள் சேதமாகி ஆடிக்கொண்டிருந்தது. பல் மருத்துவர் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த பல்லை எடுத்துவிட்டு செயற்கைப் பல் வைக்கலாம் என்று கூறி, மூன்று நாட்களுக்கு மாத்திரைகள் கொடுத்து அனுப்பினர். அந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்ட எங்களது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, பல் பிரச்சனையால் கஷ்டப்படுகிறவர்களுக்காக நான் விசேஷமாக ஜெபிக்கையில், அந்த சிறுவனும் என்னோடு இணைந்து ஜெபித்தபோது ஒரு அற்புதம் நடந்தது. அவன் தன் தாயாரிடம் தன் பல் ஆடவில்லை; நன்றாக உறுதியாயுள்ளது என்று சொல்லி ஆச்சரியப்பட்டான். மருத்துவரிடம் அவனை அழைத்துக் கொண்டுபோய் காண்பித்தபோது, அவர், “பல் உறுதியாகவும், அதன் இடத்தில் உள்ளது” என்றும் கூறினார். குடும்பத்தினர் ஆண்டவருடைய சுகமளிக்கும் வல்லமையை எண்ணி, அவரது கிருபைக்காக நன்றி செலுத்தினார்கள்.
பிரியமானவர்களே, இந்த அற்புத நிகழ்வு உங்களுக்கு சாதாரண காரியமாக தோன்றலாம். ஆனால், இந்த சாட்சியானது. தேவன் பெரிய காரியங்களை செய்கிறவர் மட்டுமல்ல அற்பமாய் எண்ணப்படுகிற சாதாரண காரியங்களையும்கூட சரிப்படுத்துகிறவர் என்பதை வெளிப்படுத்துகிறது அல்லவா! அவர் எப்போதும் கவனித்துக்கொண்டிருக்கிறார். “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (சங்கீதம் 139:2)என்று வேதம் கூறுவதை நினைவிற்கொள்ளுங்கள். கவலைப்படுவதற்கு பதிலாக, ஒவ்வொரு சிறிய தேவையையும் அவருக்கு முன் சமர்ப்பித்துவிடுங்கள். உங்கள் பரலோகத்தகப்பன் இதுபோன்ற சிறிய ஆசைகளையும் நிறைவேற்றுவதில் மகிழ்ச்சியடைந்து, உங்களையும் மகிழ்ச்சியடையச் செய்வார். 
Prayer:
அன்புள்ள தகப்பனே,

நான் சிறிய காரியங்களுக்கும் உம்மை சார்ந்திருக்கும்போது, நீர் பதிலளிக்கிறீர். “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்று நீர் வேதத்தில் சொல்லியிருக்கிறீர். ஆகவே, நான் என்னுடைய சிறிய தேவைகளையெல்லாம்கூட உம்மிடத்திலே சமர்ப்பித்து அவைகளை நான் இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்வேன் என்று விசுவாசிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000