Loading...
Paul Dhinakaran

பெருக்கமான ஆசீர்வாதங்கள்

Dr. Paul Dhinakaran
02 Jul
தேவன் பெருக்கமான ஆசீர்வாதங்களால் உங்களை நிரப்ப விரும்புகிறார். இன்றைய வாக்குத்தத்தம், "ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 31:14) என்று கூறுகிறது. நீங்கள் தமது ஆசீர்வாதத்தின் பெருக்கத்தினால் திருப்தியடையவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.
 
நீங்கள் கடினமாக உழைத்துக்கொண்டு அல்லது படித்துக்கொண்டு இருக்கலாம். உங்கள் முழு இருயத்தோடும் மற்றவர்கள்மேல் அன்புகாட்டலாம்; தியாகத்தோடு ஏழை ஜனங்களுக்கு உதவலாம் அல்லது ஆண்டவருடைய பணிகளை தாங்கலாம். ஆனாலும், ஆசீர்வாதங்களினால் திருப்தியடைந்திராத ஒரு வெறுமையை நீங்கள் உணரலாம். இன்று கர்த்தர், "என் ஜனங்கள், என் ஆசாரியர்கள், நான் அவர்களுக்கு அளிக்கும் பெருக்கத்தினால் திருப்தியடைவார்கள்," என்று கூறுகிறார். ஆகவே, மனங்கலங்காதிருங்கள்.
பெருக்கத்தினால் நம்மை நிறைக்கும்படிக்கே ஆண்டவராகிய இயேசு பரிபூரணரானார் (யோவான் 1:16). அவர் தேவனால் நிறைந்திருந்தார்; தம் ஜீவியத்தில் தேவனுடைய சித்தத்தை முற்றிலுமாய் நிறைவேற்றினார். மனுக்குலம் இரட்சிக்கப்படும்படி அவர் தம்மையே சிலுவையில் தியாகபலியாக ஒப்புக்கொடுத்தார். சர்வவல்ல தேவனாகிய அவரது பரிபூரணத்தினால் நாம் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். நாம் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தைப் பெற்றதாக ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது. தேவன், "நான் நன்மைசெய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை," என்று, தம்முடைய ஜனங்களோடும், தம்முடைய ஆசாரியர்களோடும் உடன்படிக்கை பண்ணியிருக்கிறார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (எரேமியா 32:40). ஆம், அன்பு சகோதரரே / சகோதரியே, ஆண்டவரின் இருதயத்தின் பரிபூரணத்திலிருந்து ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்கு வந்து சேரும். இயேசுவையே நோக்கிப் பாருங்கள்.
 
ஐந்தாயிரம் ஆண்கள் தவிர, பெண்களும் சிறுபிள்ளைகளும் கூடுதலாக இருந்த ஜனக்கூட்டத்தினரை இயேசு போஷிக்கவேண்டியதிருந்தது. ஆனால், அவரிடம் 5 அப்பங்களும் 2 மீன்களும் மாத்திரமே இருந்தன. ஜனங்கள் பசியாயிருந்ததினால் இயேசு அவர்கள்மேல் அதிக மனதுருக்கம் கொண்டார். ஆகவே அவர் அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி அதை ஆசீர்வதித்தார். அப்பத்தை பிட்டு ஜனங்களுக்குக் கொடுத்தார். மறுபடியும் அதிசயவிதமாக புதிய அப்பம் உருவானது. அவர் அதைப் பிட்டு ஜனங்களுக்குக் கொடுத்தார். ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் வருவதற்கு அவரது அன்பு காரணமானது. கூடியிருந்த அனைவரும் திருப்தியடைந்தனர். இன்றும் ஆண்டவர், "நான் உனக்கும் அப்படியே செய்வேன்," என்று கூறுகிறார். வானத்தின் பலகணிகளைத் திறந்து, பரலோகத்தின் பண்டசாலையை திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிப்பேன் என்று அவர் கூறுகிறார் (மல்கியா 3:10). உங்கள் வாயை விரிவாய் திறந்திடுங்கள்; ஆண்டவராகிய இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள்; அவர் உங்களை வாயை நன்மையினால் நிரப்புவார் (சங்கீதம் 81:10).
Prayer:
ஆண்டவரே, உம்முடைய அன்பு மாறாததாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் சிலுவையில் செய்த தியாகத்தினால், நான் கிருபையின்மேல் கிருபையை, ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தை அடைந்துள்ளேன்; அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை உம்முடைய ஜனமென்றும், உம்முடைய ஆசாரியனென்றும் அழைப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். நீர் வர்த்திக்கச் செய்யும் கர்த்தராயிருக்கிறபடியினால், உம்முடைய பெருக்கமான ஆசீர்வாதங்களினால் என்னை திருப்தியாக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
 

For Prayer Help (24x7) - 044 45 999 000