Loading...
Dr. Paul Dhinakaran

ஆசீர்வாதங்கள் தேவனிடத்திலிருந்து வருகிறது!

Dr. Paul Dhinakaran
16 Aug
‘எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களைத் தருகின்றன’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்த அறிக்கை எவ்வளவு உண்மை என்பது எனக்கு தெரியாது. ஏனென்றால் மேற்கண்ட வசனத்தின்படி நம்முடைய பரலோக தகப்பனிடமிருந்தே, பூரணமான வரங்களும் நன்மைகளும் இறங்கி வருகிறது என்பதை மட்டுமே நான் நம்புகிறேன். மனிதர்களிடமிருந்து எதிர்பார்க்கிற உதவிகள் ஏமாற்றங்களைத் தரக்கூடும். அதனால்தான் எல்லா நல்ல விஷயங்களையும் கொடுப்பவரான தேவனையே நாம் நோக்கிப்பார்க்கவேண்டும். “பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” (சங்கீதம் 118:9) என்று சங்கீதக்காரன் இதைக்குறித்து கூறுகிறார். ஆம், நாம் தேவனை நம்பி அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற வேண்டும். நாம் ஜனங்களிடம் ஓடக்கூடாது. பரலோகத் தகப்பனைப் பற்றி இயேசு இவ்வாறு கூறுகிறார்: “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7:11).

தேவனிடம் பக்தியும், நம்பிக்கையும் உள்ள ஒரு ஏழை சிறுவன் இருந்தான். அவன் அநேக தேவைகள், ஆசீர்வாதங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தான். உடனே கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தான். தேவனை நம்பாத ஒரு வாலிபனிருந்தான். அவன் அந்த சிறுவனிடம் “நீ அதிக நாட்களாக ஆண்டவரிடம் ஜெபித்து வருகிறாய். ஒருவேளை அவர் யாரிடமாவது உனக்கு உதவி செய்யும்படி பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்றான். உடனே அந்த சிறுவன், மனந்தளர்ந்து, “ஆம், தேவன் பேசுவதை, ஜனங்கள் செவிசாய்த்துக் கேட்பதில்லை. அவர் சொல்வதை அப்படி செவிசாய்த்துக் கேட்டிருந்தால், நான் கேட்டவை எனக்கு வந்திருக்குமே” என்றான்.
பிரியமானவர்களே, அநேக நேரங்களில் உங்களது ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் ஜெபிக்கலாம். இறுதியில் உதவிக்காக மற்றவர்களை எதிர்பார்க்கலாம். ஆகவேதான், உங்களுடைய ஆசீர்வாதங்கள் தாமதமாகின்றன. ஒவ்வொரு ஆசீர்வாதமும் தேவனிடமிருந்தே வருகின்றன. தேவன் தம்மை நம்பும்படி எதிர்பார்க்கிறார். அவரை நம்பின்hல், நீங்கள் அவருடைய வல்லமையைக் காணலாம். தேவனை மட்டுமே நம்புங்கள். அவர்மேல் நம்பிக்கை வைத்து பாக்கியம் பெறுங்கள். அவருக்கு சித்தமானதை செய்து கனத்தின் மேல் கனம் பெற்று சாட்சியாய் வாழுங்கள். நிழல்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவை ஒளி செல்கிற திசையின் அடிப்படையில் காலையிலிருந்து மாலை வரை மாறுகின்றன. நம்முடைய தேவன் நிழல்கள் மாறுவது போல் மாறுகிறவல்ல என்று வேதம் கூறுகிறது. நாட்கள் கடந்து செல்வதினால் அவர் மனம்மாற மாட்டார். நாம் செய்யும் செயல்களின் அடிப்படையில் அவருடைய மனநிலை மாறாது. “அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” (மத்தேயு 5:45). அவர் நேற்றும், இன்றும், என்றென்றும் மாறாதவராயிருக்கிறார் (எபிரெயர் 13:8). நம்முடைய பூமிக்குரிய பெற்றோரை விட அவர் எப்போதும் நல்ல விஷயங்களையே நமக்கு தந்து ஆசீர்வதிப்பார். நாம் அவர்மீது நம்பிக்கைவைத்தால் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டோம்.
Prayer:
என் அன்பு தகப்பனே,

இன்று நீர் என்னோடு பேசின வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி. நீர் என்னை ஏற்ற நேரத்தில் நேர்த்தியாய் ஆசீர்வதிக்கிற தேவன் என்பதை விசுவாசிக்கிறேன். உம்முடைய நன்மையைப் பெற்றுக்கொள்வதற்கு பொறுமையையும், நன்றியுணர்வையும் எனக்குத் தாரும். உம்மையே நம்பியுள்ளேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000