Loading...
DGS Dhinakaran

ஆசீர்வாதம் உறுதி!

Bro. D.G.S Dhinakaran
13 Feb
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து, இந்திய அரசியலமைப்பை உருவாக்கும்போது, மகாத்மா காந்தி அவர்கள், “நீங்கள் அரசியலமைப்பில் எதை செய்கிறீர்களோ, இல்லையோ, ஆனால், எனக்கு ஒரு விஷயம் செய்யப்படவேண்டும். அது ஒவ்வொரு இந்தியரின் கண்ணீரும் துடைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.  இதுதான் மகாத்மா காந்தியின் இதயம். அதுபோலவே, நம்முடைய சர்வவல்லமையுள்ள தேவனும் தம்முடைய பிள்ளைகளின் முகத்திலிருக்கும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் துடைக்க விரும்புகிறார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7:9-11) என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. 

நம்முடைய பரலோகப் பிதா மனிதகுலத்திற்கு தமது அற்புதமான அன்பை வெளிப்படுத்தும்படி, என்ன பரிசை அனுப்பினார்? அவர் தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்காக மரிக்கும்படி இவ்வுலகத்திற்கு அனுப்பினார். இயேசு, ஏன் மனித உருவில் இவ்வுலகத்திற்கு வந்தார்? ஒரு போதகர் அதை இவ்வாறாக விளக்கினார். “அவர் ஒரு தெருவழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது, எறும்புகள் வரிசையாக நகர்வதைக் கண்டார். எறும்புகள் இந்த போதகரின் காலைப் பார்த்தபோது, அவர் தம்மை காயப்படுத்திவிடுவார் என்றெண்ணி, அவருடைய அன்பான வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் இங்கும் அங்குமாக சிதறியது. அதை பார்த்த போதகர், “நான் ஒரு எறும்பாக இருந்திருந்தால், என் செய்தியை எளிதில் அவைகளுக்கு தெரிவித்திருக்க முடியும்” என்றார். 
பிரியமானவர்களே, இதனால்தான் இயேசுவும் மாம்ச உருவில் இவ்வுலகத்திற்கு வந்தார். நம்மைப்போல மனித உருவில் வந்தால் தான் நாம் அவருடைய மகிமையை காணமுடியும்! பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து, அவமானத்திலிருந்து, நஷ்டத்திலிருந்து நம்மை மீட்பதும், ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நமக்கு தருவதுமே தேவனுடைய இதயதுடிப்பாயிருக்கிறது. ரோமர் 8:32 கூறுகிறது, “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” ஆகவே, இன்றைக்கு உங்களுடைய தேவை எதுவாயிருப்பினும், எல்லா ஆசீர்வாதங்களையும் தனக்குள் வைத்திருக்கிற மகிமையானவரிடத்தில் தைரியமாய் கேளுங்கள். நன்மையான எந்த ஈவும் அவரிடத்திலிருந்தே வருகிறது. ஒன்றையும் நீங்கள் இழந்துபோகமாட்டீர்கள். ஏனெனில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க காத்திருக்கிறார். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். உங்கள் கண்ணீரை இயேசு துடைப்பார்.
Prayer:
அன்பின் தகப்பனே,

நீர் சிறந்தவர் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் சிறந்ததை மட்டுமே எனக்கு தருகிறவர். உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நான் உமக்கு முன்பதாக வருகிறேன். நீர் எனக்காக மிகச்சிறந்த பரிசாகிய இயேசுவை இவ்வுலகத்திற்கு அனுப்பியிருக்கிறீர்.  எனவே, என் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சிறந்ததையே நீர் எனக்கு தருவீர் என்று நம்புகிறேன். ஆண்டவரே எனது தேவைகளையும், இல்லாமைகளையும் நீர் அறிவீர். உமது வல்லமையினால் என் வாழ்வில் ஒரு அற்புதம் செய்தருளும். உமது அன்பின் ஆழத்தை அனுபவிக்க எனக்கு உதவும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000