Loading...
Dr. Paul Dhinakaran

கொடுப்பதே ஆசீர்வாதம்!

Dr. Paul Dhinakaran
23 Feb
கொடுப்பதில், தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுகிற சந்தோஷத்தை நீங்கள் காணலாம். ஆம், “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7).தேவனிடமிருந்து அதிகமானவற்றைப் பெறுவதற்கான திறவுகோல் உங்களிடம் இருப்பதை மற்றவருக்கு கொடுப்பதேயாகும். இதைத்தான் வேதம், “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்” (லூக்கா 6:38) என்று கூறுகிறது. இது பணத்தை மாத்திரமல்ல, மற்றவரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையும் குறிக்கிறது. உங்கள் திறமைகளை உபயோகப்படுத்தி மற்றவரை ஆசீர்வதியுங்கள். உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும், தேசத்திற்கும் நன்மை செய்யுங்கள். நீங்கள் கையிட்டு செய்கிற எல்லாவற்றையும் தேவன் ஆசீர்வதிக்க விரும்புகிறார். இன்று உங்கள் கரத்தில் உள்ளவை பலமடங்கு பெருகும்படி தேவனுக்கு அதை கொடுங்கள். வேதத்தில், ஒரு சிறுவன் ஐந்து ரொட்டிகளையும், இரண்டு மீன்களையும் இயேசுவுக்குக் கொடுத்தான். அதினால் ஏராளமானோர் போஷிக்கப்பட்டனர் (யோவான் 6:1-14) என்று வாசிக்கிறோம்.

வில்லியம் கோல்கேட், நீண்ட வெற்றிகரமான வர்த்தக வரலாற்றைக்கொண்டவர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? அவர் 16 வயது இளைஞனாக இருந்தபொழுது, தான் வேலை பார்த்து வந்த சோப்பு தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து விலகி புதிய வேலை தேடுவதற்காக நியூயார்க் பட்டணத்திற்கு சிறிய கப்பல் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த கப்பலின் தலைவர் கோல்கேட்டைக் குறித்து விசாரித்தார். சோப்பு தயாரித்து விற்கும் தொழிலை தொடங்குவதற்காக தாம் நியூயார்க் பட்டணத்திற்கு சென்றுகொண்டிருப்பதாக கோல்கேட் அவரிடம் கூறினார். அதற்கு அந்த கப்பல் தலைவர், “நியூயார்க் பட்டணத்தில் விரைவிலேயே சோப்புத் தொழிலில் ஒருவர் கொடிகட்டி பறக்கப்போகிறார். அது நீயாக கூட இருக்கலாம். ஆனால், நீ தயாரிக்கும் இந்த சோப்பு ஆண்டவரால் உனக்கு கொடுக்கப்படுகிறது என்பதை உன்னுடைய வாழ்வில் ஒருபோதும் மறந்துபோகாதே, உன்னுடைய சம்பாத்தியத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டு அவரைக் கனம்பண்ணு. உனக்கு வரும் வருமானத்திலெல்லாம் தசமபாகம் கொடு,” என்று அறிவுரை கூறினார். அதேபோன்று வில்லியம் கோல்கேட் தன்னுடைய நிறுவன தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் உட்பட தாம் பெற்றிருக்கும் ஒவ்வொன்றும் ஆண்டவரால் தமக்குக் கொடுக்கப்பட்டது என்று நம்பினார். தொழிலை தொடங்கிய முதல் நாளிலிருந்தே தமக்கு வந்த கொஞ்ச லாபத்தில் அவர் தசமபாகம் கொடுக்க ஆரம்பித்தார். தினந்தோறும் உண்மையாக அவர் தசமபாகத்தை செலுத்தியபடியால், அவருடைய தொழில் பெருக ஆரம்பித்தது. வர்த்தகம் பெருகப்பெருக அவர் இன்னும் அதிகமாய் தசமபாகம் செலுத்தினார். இறுதியில் கோடீஸ்வரராக உயர்ந்தார்.
வானத்தையும் பூமியையும் தம்முடைய அதிசயங்களினால் நிரப்பிய தேவன், உங்களையும் நற்சிந்தனை, ஞானம் மற்றும் திறமையுள்ள ஜனங்களால் நிரப்புவார். நீங்கள் எந்த நல்ல விஷயங்களையும் இழந்துபோகமாட்டீர்கள். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” (நீதிமொழிகள் 3:5) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் இதை செய்யும்போது, கர்த்தர் உங்களை தேசங்களுக்கு ஆசீர்வாதமாய் வைக்கும்படி தமது அடிகளை முன்வைப்பார்.  ஜனங்களுக்காக இந்த பூமியில்  தேவராஜ்ஜியத்தை கட்டியெழுப்ப உங்கள் கரங்களை நீங்கள் திறக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் நீர்தேக்கத்தைப்போல் கட்டப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் கட்டவிழ்க்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆம்,  “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (நீதிமொழிகள் 11:25).
Prayer:
அன்பின் பிதாவே,

இன்று நான் என்னிடமுள்ளதை மற்றவர்கள் ஆசீர்வாதத்திற்காக கொடுக்க தீர்மானமெடுக்கிறேன். எனக்கு சொந்தமானவை அனைத்தும் ஏதோவொரு வகையில் மற்றவருக்கு உதவும்படி ஆசீர்வதிப்பீராக. ஆண்டவரே, என் நேரத்தையும், திறமையையும், செல்வத்தையும் உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன் அதை மற்றவருக்கு ஆசீர்வாதமாக்கும். உமது இராஜ்ஜியம் இந்த பூமியில் கட்டி எழுப்பும்படி, என்னாலான அனைத்து காரியங்களையும் செய்ய முன்வருகிற விருப்பத்தை என்னில் அதிகரித்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000