Loading...

சிறந்ததை தருகிற தேவன்

Shilpa Dhinakaran
14 Apr
அன்பு நண்பரே, இன்றைக்கு தேவன் தருகிற வாக்குறுதி லேவியராகமம் 26:4ல் இருந்து வந்தது. “நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும் வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்” ஏற்ற நேரத்தில் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று ஆண்டவர் கூறுகிறார். உங்களுக்கு ஆசீர்வாதம் தேவைப்படக்கூடிய நேரம் எதுவென்று அவருக்குத் தெரியும். சில நேரங்களில் நம் வாழ்க்கைக்கு ஒரு பெரிய திட்டம் இருக்கும். “நான் குறிப்பிட்ட கல்லூரிக்குத்தான் செல்ல வேண்டும். இந்த பாடத்திட்டத்தை தான் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படும்” என்று நீங்கள் கூறலாம். ஆனால், “கர்த்தர் உன்னை ஏற்ற நேரத்தில் ஆசீர்வதிப்பேன் என்று கூறுகிறார்.
 
உங்களுக்கு எது சிறந்தது என்பதை தேவன் அறிவார். அவர் உங்களுக்காக எப்போதும் சிறந்ததையே செய்வார். ஏசாயா 55:8,9ல் வேதம் கூறுகிறது. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.” வானம் பூமியை பார்க்கிலும் எவ்வளவு உயர்ந்திருக்கிறதோ, அப்படியே தேவனுடைய எண்ணங்களும் உங்களுடைய எண்ணங்களைவிட உயர்ந்தவை. உங்கள் வாழ்க்கைக்காக தேவன் பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம். உங்கள் வாழ்க்கையை அவருடைய கரங்களில் ஒப்படைத்துவிடுங்கள். “ஆண்டவரே என் வாழ்க்கையை பொறுப்பெடுத்துக்கொள்ளும்; உமது சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும்” உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய திட்டங்கள் நிறைவேறும், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
நான் பள்ளியில் படிக்கும்போது நல்ல ஒரு மாணவனாக இருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95ரூஅதிகமாக மதிப்பெண் பெற்றேன். நான் மருத்துவம் மட்டுமே செய்ய விரும்பினேன். அந்த நேரத்தில் எங்களுக்கு நீட் தேர்வு இல்லை. அரசு கல்லூரியில் இடம் கிடைக்க பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளின் மூலம் தகுதி பெற வேண்டியிருந்தது. நான் தகுதி பெற்று எப்படியாவது ஒரு அரசு கல்லூரியில் சேருவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேவையான கட் ஆப் மதிப்பெண்களை பெறமுடியாமல் இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்களில் என்னுடைய இடத்தை தவறவிட்டுவிட்டேன். அரசு கல்லூரியில் சேர முடியாததால் மனமுடைந்து போனேன். ஆனால், தேவனுடைய பெரிதான கிருபையால் சென்னையிலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற மருத்துவ கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. நான் என் படிப்பை ரசித்து படித்தது மட்டுமல்லாமல் அந்த இடத்தையும் ரசித்தேன். கர்த்தர் எனக்கு அருமையான நண்பர்களைக் கொடுத்தார். நாங்கள் அங்கே ஒரு கூடுகையை தொடங்கினோம். இது தேவனுடைய திட்டம் என்பதை நான் உணர்ந்தேன். தேவனுடைய வழிகள் எப்போதும் நம் வழிகளை பார்க்கிலும் உயர்ந்தவை. அதுபோலவே, உங்கள் திட்டங்கள் தோல்வியுற்றது என்று நீங்கள் மனமுடைந்திருக்கலாம். கர்த்தர் உங்களுக்கு எப்போதும் சிறந்ததையே கொடுப்பார் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
Prayer:
கர்த்தராகிய இயேசுவே,
 
நான் கேட்ட ஆசீர்வாதத்திற்காக வெகுகாலம் காத்திருக்கிறேன் என்பது உமக்குத் தெரியும். நீர் ஏற்ற நேரத்தில் என்னை ஆசீர்வதிப்பீர் என்று எனக்குத் தெரியும். என் வாழ்க்கையில் நீர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும்  நீர் நிறைவேற்றப்போவதற்காக உமக்கு நன்றி. நீர் என்னை ஒரு சாட்சியாக மாற்றுவீர் என்று நான் நம்புகிறேன். என் வாழ்வை உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிறnன். உமது திட்டத்தின்படி என்னை வழிநடத்தும்.
 
உமது விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன்,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000