Loading...
Stella dhinakaran

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்!

Sis. Stella Dhinakaran
20 Dec
எந்த நிலைமையிலும் கர்த்தரை நோக்கிப் பார்க்க, அவரிடத்தில் நம்முடைய இருதயத்தை ஊற்ற நாம் கற்றுக் கொண்டோமானால், அவர் இப்படிப்பட்ட தெய்வீக நம்பிக்கையோடு கூடிய திடமான விசுவாசத்தை நமக்கு தருவார். அதுமட்டுமின்றி, அவருடைய வசனத்தை வாசிக்கிறபொழுதும், கேட்கிறபொழுதும், இந்த மேலான விசுவாசம் நமக்குள் வளரும். உங்கள் விசுவாசமே அற்புதத்தை பெறுவதற்கு ஊன்றுகோலாயிருக்கிறது. “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற்கு 9:23) என்ற வேதவார்த்தையின்படி என்ன பிரச்சினைகள் வந்தாலும், எந்த நிலைமையிலும் விசுவாசித்து, உறுதியோடு ஆண்டவரை பற்றிக்கொள்ளுகிறவர்களுடைய  மனவிருப்பத்தை அவர் அப்படியே நிறைவேற்றி ஆசீர்வதிப்பார். அவர் உங்களுக்கு பரிபூரண ஆசீர்வாதத்தை தருவார். இன்று சிறிய காரியங்களுக்கும், மக்கள் சலித்து, சோர்ந்து போகிறார்கள். உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள். ஏனெனில் நீங்கள் விசுவாசத்துடன் ஜெபத்தில் எவைகளை கேட்கிறீர்களோ, அவைகளையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள். (மத்தேயு 21:22).

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு ஒரு பெண் பயிற்சி பெற்றாள். இந்த பயிற்சியின்போது, அவளுடைய கணவர் கூடவே இருந்து, “வெற்றி பெற கொஞ்ச தூரம்தான், உன்னால் கூடும், உன்னால் கூடும்” என்று சொல்லிக்கொண்டே அவளை உற்சாகப்படுத்துவார். ஓட்டப்பந்தய நாளும் வந்தது. ஓடுவதற்கு ஆயத்தமானாள். பந்தயத்தை முடிப்பதற்கு கொஞ்ச தூரத்திற்கு முன்பாக அவளுடைய கால்கள் திடீரென்று மரத்துப்போனது போலாகிவிட்டது. இதற்கு மேல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலையில் செய்வதறியாது திகைத்தாள். அப்பொழுது அவளுடைய கணவன் சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் ரீங்காரமிட்டது. “கொஞ்சதூரம்தான், உன்னால் கூடும், உன்னால் கூடும்” என்ற வார்த்தைகளை அவள் நினைத்துப் பார்த்தாள். ஒரு புதுபெலன் வந்ததுபோல, முன்னைக் காட்டிலும் வேகமாக ஓடினாள். முடிவில் பந்தயத்தில் மிகவும் சுலபமாக வெற்றி பெற்றாள்.
அன்பானவர்களே, இதுதான் விசுவாசம். அந்த சகோதரியின் கணவரின் வார்த்தைகள் இலக்கை அடைய நம்பிக்கையை தூண்டியது. அதேபோல் உங்கள் வாழ்க்கையிலும், ஊக்கமளிக்கும் மற்றும் உங்களை திருத்துகிற வார்த்தைகளை கேட்டு அதற்கு கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நீங்கள், வாழ்க்கை எனும் பந்தயத்தை வெல்வீர்கள். உங்களை உற்சாகப்படுத்தும் தேவனுடைய வார்த்தைகளே உங்களுக்கு சிறந்த ஆதாரமாயிருக்கிறது. எனவே, உங்களை விசுவாசத்தில் பலப்படுத்தும் வார்த்தைகளை வாசியுங்கள், கேளுங்கள். அப்பொழுது நீங்களும் வெற்றி பெறுவீர்கள். இது உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச்செல்லும். உங்கள் வாழ்வின் மரித்துப்போன ஒவ்வொரு காரியத்தையும் உயிர்ப்பிக்கும்.
Prayer:
அன்பு தெய்வமே,

இந்த உலக வாழ்க்கையும், பந்தயம் போன்றதுதான். அதில் எத்தனையோ மேடு பள்ளங்கள், பிரச்சினைகள் ஆனாலும், உம்முடைய வசனத்தை வாசித்து அதன்மூலமாக உம்மோடு ஜெபத்தில் உறவாட விசுவாசத்தில் நிலைத்து விளங்க, என் வாழ்க்கையிலே வெற்றி பெற இன்றுமுதல் எனக்கும் உம்முடைய தெய்வீக விசுவாசத்தை நிறைவாய் தாரும். நீர் அப்படி தருகிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000