Loading...
DGS Dhinakaran

விசுவாசித்து ஆசீர்வாதம் பெறுங்கள்!

Bro. D.G.S Dhinakaran
24 Jun
அன்பானவர்களே, இன்றும்கூட துன்பம், துயரம், கவலை, கண்ணீர் நிறைந்த உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம். “எனக்கு ஆறுதல் கிடைக்குமா? என்னுடைய கண்ணீர் நீங்குமா?” என்று பலமுறை நாமும் கலங்கித்தவிக்கிறோம். இவ்வுலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் (யோவான் 16:33) என்று இயேசு கூறியிருக்கிறார். அவர் இந்த உலகத்தை ஜெயித்தார். அவர் இவ்வுலகில் வாழ்ந்தபோது எல்லாவற்றிலும் வெற்றிசிறந்தார். சிலுவை அவர் நமக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியின் அடையாளம். எனவே இன்றைக்கு நீங்கள் எதற்காகவும் துக்கப்பட வேண்டியதில்லை. உங்களுடைய கவலைகளையும், வியாதிகளையும் அவமானத்தையும் சிலுவையில் சுமந்த தேவனை நம்புங்கள். அவர் உங்களுக்கு மகிழ்ச்சி, சுகம் ஆகியவற்றை இலவச பரிசாக கொடுத்திருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள். “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவான் 5:4). உங்கள் விசுவாசத்தில் தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கறிது. எல்லாவித பிரச்சினைகளையும் தேவன் மாற்றுவார் என நம்புங்கள்.

பல வருடங்களுக்கு முன்பு, அரபு நாடுகளுக்கு சுவிசேஷம் அறிவிப்பதற்காக நான் சென்றிருந்தேன். அங்கே ஒரு சகோதரியை சந்தித்தேன். பல வருடங்களாக தீர்க்கமுடியாத ஒரு நோயினால் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அநேகம் மருத்துவம் பார்த்தார்கள். இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற வேலூர் மருத்துவமனைக்கும் வந்து சிகிச்சை பெற்று சென்றார்கள். எனிலும், அவர்கள் ஒரு நடைபிணம் போல்தான் இருந்தார்கள். தினமும் அவர்கள் ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அதற்கும் மேலாக தூக்கத்தை கொடுக்கும் ஊசியையும் போட்டுக்கொள்வார்கள். ஏனெனில், அவர்கள் சரீரம் முழுவதிலும் தாங்க முடியாத வலி இருந்து கொண்டே இருக்குமாம். இரவெல்லாம் தூக்கம் வராமல் அங்கு மிங்குமாக உலாவிக்கொண்டே இருப்பார்களாம். அவர்களுக்கு ஆறுதல் தருவது ஒன்றே ஒன்றுதான். குளிக்கும் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டு, தண்ணீரை திறந்துவிட்டு சத்தமாய் கூச்சலிட்டு கர்த்தரை நோக்கி அழுவார்களாம். “ஆண்டவரே, என்னைப்போல ஒரு நிர்ப்பாக்கியமுள்ள ஸ்திரீ இந்த உலகில் இல்லையே; எனக்கு ஏன் தூக்கம் வரவில்லை? ஏன் என்னுடைய உடம்பு இப்படி வலிக்கிறது? ஐயோ! என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டால் நான் என்ன செய்வேன்? எங்கு போவேன்?” என்று இரவும் பகலும் அழுவார்களாம். அழுவது ஒன்றே அவர்கள் ஆறுதலாயிருந்தது.
நான் அந்த சகோதரியிடம், எதற்காக ஜெபிக்க வேண்டுமென்றுகூட விசாரிக்காமலேயே, அவர்களுக்காக ஒரு சிறிய ஜெபம் செய்தேன். இயேசு மனதுருகி, ஒரே நொடியில் அந்த சகோதரியைத் தொட்டு குணமாக்கினார். ஆம், இயேசு கிறிஸ்துவின் கரம் இன்றும் குறுகிப்போகவில்லை. நம்முடைய அவிசுவாசமும், அவநம்பிக்கையும்தான் அவருடைய கரத்தைக் குறுகிப்போகும்படி செய்கிறது. ஒரே வினாடியில் அப்படியே அவர்கள் கீழே விழுந்தார்கள். பின்பு மிகுந்த ஆரோக்கியத்தோடு எழுந்து நின்றார்கள். பிரியமானவர்களே, அவர்களை குணமாக்கினது என்னுடைய ஜெபம் அல்ல; அவர்களுடைய கண்ணீர்தான். அவர்கள் குளியல் அறைக்குள் சென்று மனங்கசந்து அழுத கண்ணீரை தேவன் கண்டார். அவருடைய உள்ளம் கலங்கினது. இன்றைக்கு நீங்களும்கூட கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிற ஒரு நிலைமையில் இருக்கலாம். “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னை குணமாக்குவேன்.” (2 இராஜாக்கள் 20:5) என்று கர்த்தர் வாக்குத்தத்தம் அளிக்கிறார். அவர் உங்கள் கண்ணீரை துடைத்து உங்களை மகிழ்ச்சியினால் நிரப்புவார் என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறேன். உங்கள் உள்ளம் கலங்காதிருப்பதாக!
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

நீர் என்னை காண்கிற தேவன், என் ஜெபத்தை கேட்கிறவர். இந்த உலகத்திலுள்ள உபத்திரவங்களை ஜெயித்த இயேசுகிறிஸ்துவின் வெற்றியின் மூலம் நானும் இவ்வுலகத்தை ஜெயிக்க முடியும் என்று நம்புகிறேன். நான் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கவும், வெற்றிபெறவும் உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். இதன்மூலம் என்னைப்போன்று கஷ்டத்தில் இருப்பவர்களை நான் ஆறுதல்படுத்த முடியும். என் வாழ்வை சமாதானத்தினாலும், மகிழ்ச்சியினாலும் நிரப்பும். இனிக் கண்ணீர் இல்லை, களிப்பினால் என் வாயை நிரப்பும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000