Loading...
Evangeline Paul Dhinakaran

நிச்சயமாய் பதில் கிடைக்கும்!

Sis. Evangeline Paul Dhinakaran
07 Sep
இயேசு தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்கு வந்தார். அப்பொழுது, அங்கே குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்றாள்.” அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள் (மத்தேயு 15:21-28). தேவனால் எல்லாவற்றுக்கும் பதிலளிக்க முடியும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். அவள் கேட்டுக்கொண்டே இருந்ததினிமித்தம் அற்புதத்தை பெற்றுக்கொண்டாள். 

திருச்சியில் வசிக்கும் சகோதரி ரெபேக்கா பிரபாகர் அவர்களின் சாட்சியை கேட்போம். எனக்கு 2000-மாவது ஆண்டில் திருமணமானது, நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி செய்கிறேன். என் கணவரும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நீண்ட நாட்களாக எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. ஆகவே, மருத்துவர்களை அணுகினோம். 2010-ம் ஆண்டுவரை சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பலன் கிடைக்காததால், மனம் சலித்துப்போய் சிகிச்சைப் பெறுவதை நிறுத்திவிட்டோம். திருச்சியிலுள்ள ‘இயேசு அழைக்கிறார்’ ஜெப கோபுரத்திற்கு நேரில் சென்று, ஆண்டவர் எங்களுக்கு குழந்தை பாக்கியத்தைத் தரவேண்டும் என்று ஜெபிக்கக் கேட்டுக்கொண்டோம். ஜெபவீரர்கள். ஆண்டவர் எனக்கு ஒரு கர்ப்பத்தின் கனியைத் தரவேண்டும் என்று எங்களோடிணைந்து வேண்டிக்கொண்டார்கள். நாங்கள் தொடர்ந்து ஜெபகோபுரத்திற்கு வந்து ஜெபித்துக் கொண்டிருந்தோம். என் கணவரின் தங்கை ரீனாவுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. நான் என்னோடு சேர்த்து, என் நாத்தனாருக்காகவும்  ஜெபித்து வந்தேன். திருணமாகி 14 ஆண்டுகள் கழித்து நான் கர்ப்பந்தரிக்கும்படி ஆண்டவர் கிருபை செய்தார். 2015-ம் ஆண்டு எனக்கு பெண்குழந்தை பிறந்தது. மூன்று மாதங்கள் கழித்து என் நாத்தனாருக்கும் ஆண்டவர் குழந்தை பாக்கியத்தை அருளிச்செய்தார். இரண்டு குழந்தை செல்வங்களை அருளி எங்கள் குடும்பத்தை ஆண்டவர் சந்தோஷப்படுத்தினார். நாங்கள் தொடர்ந்து ஜெபகோபுரத்திற்கு வந்து ஆண்டவரை மகிமைப்படுத்தி வருகிறோம். 
நம்முடைய சூழ்நிலைகள் அனைத்தும் அற்புதத்தை பெறுவதற்கு எதிர்மறையாக காணப்பட்டாலும், நாம் பிரார்த்தனையை நம்பினால் நிச்சயமாகவே பதிலை பெற்றுக்கொள்வோம். “நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்.” (மாற்கு 11:24) என்று இயேசு கூறுகிறார். தம்மிடத்தில் வருகிற யாவருக்கும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். சில நேரங்களில் அவர் ‘ஆம்’ என்றும், சில நேரத்தில் ‘இல்லை’ என்றும், சில நேரத்தில் ‘காத்திரு’ என்றும் பதிலளிக்கிறார். எதுவாயிருப்பினும், நாம் தேவனிடத்திலிருந்து விலையேறப்பெற்ற பதிலை பெற்றுக்கொள்வோம். நாம் விசுவாசத்துடன் அவரிடத்தில் கேட்கவேண்டும். தேவனிடத்தில் சென்ற கானானிய பெண்ணைப்போல சந்தேகமின்றி அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும், அப்பொழுது தேவன் நம் ஜெபத்திற்கு பதிலளிப்பது மாத்திரமல்ல நம் விசுவாசத்தைக்குறித்தும் மேன்மைபாராட்டுவார்.
Prayer:
அன்பின் பிதாவே,

உமது சித்தத்தை எனக்கு காண்பித்தருளும். என் சூழ்நிலையை உமது வார்த்தையின் மூலம் எனக்கு வெளிப்படுத்தும். நீர் அதிசயம் செய்வீர் என்று உம்மை நம்புகிறேன். உம்மிடத்தில் வந்த  ஜனங்களை நீர் குணமாக்கியதுபோல, என் வாழ்க்கையிலும் அதிசயத்தை செய்தருளும். நீர் என்னை ஆசீர்வதிக்கும்வரை நான் உம்மை விடமாட்டேன். நீர் என் ஜெபத்தை கேட்டதற்காக உமக்கு நன்றி. 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000