Loading...
Stella dhinakaran

திடமனதாயிரு!

Sis. Stella Dhinakaran
02 Sep
“சோர்வு” என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் வரக்கூடிய ஒன்றாகும். அந்த சோர்வின் உச்சக்கட்டத்திற்கு போகிற வேளையில்தான் அநேகர் தங்கள் வாழ்வையே முடித்துக்கொள்ளவும்கூட முயலுகிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள், அந்த நேரத்திலும் தங்களுக்கு பெலன் தந்து, உதவி செய்து, தங்களை விடுவிக்க வல்லவராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, அவரிடம் கெஞ்சுவார்களானால், அவர் அவர்களை பெலப்படுத்தி, சத்துவத்தை பெருகப்பண்ணுவார். “நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை” (உபாகமம் 31:6). ஆகவே, நமக்கு யாதொரு வழியும் தெரியாதபோது, நமக்காக புதிய வழியை உருவாக்குகிற தேவனை நாம் விசுவாசிக்க வேண்டும். விரக்தியான மனப்பான்மையிலிருந்து நாம் விடுவிக்கப்பட கர்த்தரை நம்ப வேண்டும். நீங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளைக் குறித்து பயப்படுகிறீர்களா? உங்களை பகைக்கிறவர்கள் உங்களை வீழ்த்தும்படியான காரியங்களை செய்கிறார்களா? கவலைப்படாதிருங்கள்! உங்களுக்காக கர்த்தர் அவர்களோடு போராடுவார். அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பார். 

ஒரு குடும்பத் தலைவன் எவ்வளவோ பாடுபட்டு உழைத்தும், உயர்வைப் பெறமுடியாமல், அவனுடைய குறைவான வருமானத்தில் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தவித்தான். ஒருநாள், மிகுந்த மனசோர்வுடன், வாழ்க்கையே வெறுத்தவனாய் தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, ஒருவர் ஒரு சிறிய வானொலி பெட்டியை கையில் தூக்கிக் கொண்டு அந்த பக்கமாக நடந்து போய்கொண்டிருந்தார். “கண்ணீரெல்லாம் துடைப்பார், கண்மணிபோல் காப்பார்” என்ற பாடல் அதிலிருந்து புறப்பட்டு வந்ததைக் கேட்ட அந்த குடும்பத் தலைவன், அந்த மனிதரைக் கைத்தட்டி கூப்பிட்டு, தன் அருகில் உட்கார வைத்து, அந்த பாடல் முழுவதையும், அதைத் தொடர்ந்து வந்த சகோதரர் தினகரன் அவர்களின் அருளுரையையும் கேட்டான். அந்த வார்த்தை, நொறுங்கிப்போயிருநத் அவன் இருதயத்திற்கு மிகுந்த ஆறுதலை அளித்தது. அப்பொழுது, அந்த வானொலிப் பெட்டியை வைத்திருந்தவர், ஆண்டவரின் அன்பை தன் வாழ்வில் எப்படி பெற்றார்? என்பதை விளக்கிக் கூறவே, அவரும் அன்று முதல் ஆண்டவருக்கு தன்னை அர்ப்பணித்தார். அவருடைய எல்லா சோர்வுகளும் மாறி தேவபெலன் பெற்றவராய், ஆசீர்வதிக்கப்பட்டார்.
வேதத்தில் கிதியோனின் வாழ்வைக்குறித்து வாசிக்கிறோம். அவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட மனிதர். ஆனாலும் தேவன் அவரை பராக்கிரமசாலியே என அழைக்கிறார். கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்” (நியாயாதிபதிகள் 6:14). ஆம் கர்த்தர் நம்மோடிருந்தால், சாத்தியமற்றதையும் செய்து முடிக்கலாம். உங்களிடம் உள்ள இந்த பெலன் போதுமானது என்று ஆண்டவர் இன்று உங்களுக்கு உறுதியளிக்கிறார். அவர் உங்களைப்பார்த்து, “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று கூறுகிறார். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசாயா 40:31).
Prayer:
என் பெலனாகிய கர்த்தாவே!

நானும் தாவீதைப்போல் உம்மிலே அன்புகூருகிறேன். சோர்விலே, கவலைக்கு இடம்கொடாமல், உம்மையே உறுதியாகப் பற்றிக்கொள்ள எனக்கு உம் தெய்வீகக் கிருபையைத் தாரும். சோர்வு வேளைகளிலெல்லாம் நீர் என்னோடு கூடவேயிருந்து, உம் தெய்வீக பெலனால் நிரப்பும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000